மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்க!

– உச்சநீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இரு சமூகங்கள் சார்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. 20 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி திரும்பவில்லை.

மணிப்பூர் வன்முறையில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மாண்டபி கிராமத்தில் ஒரு கும்பல் நேற்று இரவில் துப்பாக்கி சூடு நடத்தியது. கிராமத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னார்வலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.

பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் தன்னார்வலர்கள் 3 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், கிராமத்தில் உள்ள 5 பேரை பிணைக் கைதிகளாக கடத்தி சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், ஒரு குறிப்பிட்ட பழங்குடியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

மணிப்பூர் மாநிலம் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருவதாகவும், ஊரடங்கு நேரம் குறைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்கள் பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து மணிப்பூர் நிலைமை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புதிய அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கை அடிப்படையில்தான் வழக்கை விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like