ஸ்பை – அரைகுறையான உளவாளி!

அடுத்தடுத்த வெற்றிகளே ஒரு நட்சத்திர நடிகருக்கான எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்யும்.

அந்த வகையில், எவ்விதப் பின்னணியும் இல்லாமல் தெலுங்குத் திரையுலகில் சீராக வளர்ந்துவரும் நிகில் சித்தார்த்தாவின் ‘பான் இந்தியா’ வெளியீடாக அமைந்துள்ளது ‘ஸ்பை’.

தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி, தமிழ் மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இப்படம் பெருவாரியான ரசிகர்களைச் சென்றடையுமா?

இளம் உளவாளியின் கதை!

பாகிஸ்தானிலுள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான காதிர் என்பவரைக் கொல்லச் செல்கிறது ரா உளவைப்பிரிவைச் சேர்ந்த ஒரு குழு.

காதிர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியைப் பார்த்து அவரது இறப்பை உறுதி செய்கிறார் ரா தலைவர் சாஸ்திரி (மாகரந்த் தேஷ்பாண்டே).

ஆனால், காதிரைச் சுட்டுக் கொன்ற சுபாஷ் (ஆர்யன் ராஜேஷ்) உயிருடன் இந்தியா திரும்பவில்லை. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

சுபாஷின் சகோதரரான ஜெய் (நிகில் சித்தார்த்தா),அந்த இழப்புக்குக் காரணமானவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். தனது சகோதரரைப் போலவே, அவரும் ரா ஏஜெண்ட் ஆகிறார்.

பயிற்சி முடிந்து பணியில் சேர்வதற்கு முன்பாக, அவருக்கு வைஷ்ணவி (ஐஸ்வர்யா மேனன்) என்ற பெண் அறிமுகமாகிறார். அப்பெண் மீது காதல் கொண்டு, பெற்றோரிடம் அழைத்துச் சென்று நிறுத்துமளவுக்குச் செல்கிறார் ஜெய்.

திடீரென்று ஒருநாள் வைஷ்ணவி ஒரு ரா ஏஜெண்ட் என்பதும், தனது பணியை முடிப்பதற்காகவே அவர் ஜெய்யைப் பயன்படுத்திக் கொண்டதும் தெரிய வருகிறது.

ஐந்து ஆண்டுகள் கழிந்தபிறகு, வேறொரு பணிக்காகச் செல்லும்போது மீண்டும் வைஷ்ணவியைச் சந்திக்கிறார் ஜெய்.

இறந்துபோன காதிர் மீண்டும் உயிரோடிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அவரைத் தேடி ஜோர்டான் போய் இறங்குகின்றனர் ஜெய், வைஷ்ணவி உள்ளிட்ட குழுவினர்.

காதிர் குறித்த தகவல்களைச் சேகரிக்கும்போதே சுபாஷுக்கு என்னவானது என்பதையும் அறிந்த காரணத்தால், சம்பந்தப்பட்டவர்களை உயிரோடு பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ஜெய்.

சில தகவல்களின் அடிப்படையில், குழுவிலுள்ள இதர உறுப்பினர்கள் நேபாளம், மியான்மர் நாடுகளுக்குச் செல்கின்றனர். அப்போது, ரா தலைமையகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் சம்பந்தப்பட்ட ரகசிய கோப்பு காணாமல் போனது தெரிய வருகிறது.

அதற்குக் காரணம் காதிர் தரப்பு என்று தெரிய வந்ததும், அவரை உயிரோடு பிடிப்பதென்பது அவசியம் எனும் நிலை உருவாகிறது.

இந்தச் சூழலில், ஜோர்டானில் காதிர் கும்பலைச் சுற்றி வளைக்கும் நிலைமை உருவாகிறது. அப்போது, அவர்களுடன் நேதாஜி சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் திருடிய நபரும் இருப்பதைப் பார்க்கிறார் ஜெய்.

காதிர் தப்பிச் சென்றாலும் பரவாயில்லை என்று அந்த நபரைச் சுடுகிறார். அதன்பிறகு என்னவானது? காதிர் உயிரோடு பிடிபட்டாரா?

இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்னவென்பதை ஜெய் குழுவினர் கண்டறிந்தார்களா இல்லையா என்பதோடு முடிவடைகிறது ‘ஸ்பை’.

உலகம் முழுக்கத் திரைப்படங்களில் உளவாளிகளை நடுத்தர வயதினராகக் காட்டுவதே தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

ஆனால், கல்லூரிகளில் நடக்கும் பேஷன் ஷோக்களில் பங்கேற்பவர்கள் போல இப்படத்தில் நாயகன் நாயகி உட்படப் பலரும் திரையில் உலா வந்திருக்கின்றனர்.

போரடிக்கும் திரைக்கதை!

நேதாஜி சம்பந்தப்பட்ட ஆவணமொன்று காணாமல் போய்விட்டதாகச் சொன்ன ட்ரெய்லர்தான், ‘ஸ்பை’ படம் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டிவிட்டது. படத்தில் அக்காட்சி இடைவேளைக்கு முன்னதாகவே இடம்பெறுகிறது.

அதனால், முன்பாதிக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை போன்றே இருக்கின்றன.

தலையும் வாலும் இல்லாமல் வில்லன் குரூப் இதைத்தான் செய்யும், இங்குதான் டேரா போடும் என்று ஹீரோ கண்டறிவதெல்லாம் காதில் பூக்கடையையே நிறுத்தி வைக்கிற ரகம்.

‘வெயிட் தாங்கலைடா சாமி’ என்று படாதபாடு பட்டு அந்தச் சுமையை இறக்கி வைப்பதற்குள், ’நேதாஜி பைல் மிஸ்ஸிங்’ என்று அலறுகிறார் ரா தலைவர்.

சரி, அதில் அப்படி என்ன தகவல்தான் இருக்கிறது என்று கண்களையும் காதுகளையும் அகல விரித்து வைத்துக்கொண்டு படம் பார்க்க உட்கார்ந்தால், பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றார்களே தவிர அதைத் தெளிவாகச் சொன்னபாடில்லை.

அதையும் மீறி சொல்லப்படும் விஷயங்கள், இதுநாள்வரை நேதாஜி குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் உலா வரும் தகவல்களாகவே இருக்கின்றன.

கும்னாமி பாபா என்றொரு பெயரில் நீண்டகாலமாக ஒரு ஆசிரமத்தில் நேதாஜி வசித்தார் என்பதும் அதிலொன்று.

ஆனால், சர்ச்சைக்குரிய எந்தத் தகவலையும் பூதாகரப்படுத்தாமல் வெறுமனே தாங்கள் எழுதிய கதைக்கேற்ப அதனைப் பயன்படுத்தியிருக்கிறது ‘ஸ்பை’ குழு.

அதனாலேயே, முக்கால்வாசி படம் ‘சவசவ’ என்று நகர்கிறது. ‘அரைகுறை உளவாளி’ என்ற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

இறுதியாகத் தெரிய வரும் பிளாஷ்பேக், அதனைத் தொடர்ந்துவரும் கிளைமேக்ஸ் என்று ஒட்டுமொத்தப்படமும் ஏற்கனவே இந்த படத்தைப் பலமுறை பார்த்துவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

படம் முடிவடையும்போது, நிகில் வளர்ச்சியைப் பிடிக்காத கும்பல்களால் வேண்டுமென்றே இந்த படம் உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் நம்மைச் சூழ்கிறது.

அந்தளவுக்கு கார்த்திகேயா 2, 18 பேஜஸ் தந்த காட்சியனுபவத்திற்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கிறது இப்படம். மற்றபடி ‘நேதாஜி எங்கப்பா’ என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை வழக்கம்போல..

தமிழர்களைக் கேவலப்படுத்தும் இடம்!

நிகில் சித்தார்த்தா ஒரு துடிப்பான இளம் நாயகன். இதிலோ கொஞ்சம் சதை போட்டு, நடக்கவே கஷ்டப்படுகிறாரோ எனும் அளவுக்குத் திரையில் தோன்றியிருக்கிறார்.

அவரை அறிமுகப்படுத்திய ‘ஹேப்பி டேஸ்’ பட நினைவுகளும் திரைக்கதையில் இடம்பிடித்துள்ளன. ஆனால், அவற்றால் சிறு பயன் கூட இல்லை.

‘இவரா உளவாளி’ என்று கேட்டுவிடாதபடி, ஐஸ்வர்யாவை ‘வைடு ஷாட்’களில் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர் கேரி பிஹெச்.

அப்படியொரு கேள்வியே ரசிகர்கள் மனதில் எழக்கூடாது எனும் நோக்கில், பல காட்சிகளில் அவரைக் கவர்ச்சியாகவே காட்டியிருக்கிறார். இந்த படம் அடுத்தடுத்து பல நல்ல கமர்ஷியல் வாய்ப்புகளை ஐஸ்வர்யாவுக்குப் பெற்றுத் தந்தால் சரி.

நிகில் உடன் படம் முழுக்கச் சேர்ந்தே வந்து காமெடி உடன் ஆக்‌ஷனும் புரியும் பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார் அபினவ் கோமதம். தெலுங்குப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதே இவரது வழக்கம்.

தணிகல பரணி, சச்சின் கடேகர் என்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகர்களுடன் இந்தி நடிகர் மாகரந்த் தேஷ்பாண்டே, பெங்காலி நட்சத்திரமான ஜிஷு சென்குப்தா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கதை எழுதித் தயாரித்துள்ளார் ராஜசேகர். அனிருத் கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை அமைத்துள்ளார். படத்தொகுப்பைக் கையாண்டதுடன் முதன்முறையாக இயக்கத்தைக் கையிலெடுத்திருக்கிறார் கேரி பிஹெச்.

படத்தொகுப்பாளரே இயக்குனர் என்பதால், தேவையற்ற காட்சிகளே இல்லை எனும் நிலை உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால், சொதப்பலான திரைக்கதையால் மிகச்சிறப்பான, புத்துணர்வூட்டும் காட்சிகளை விரல் விட்டு எண்ண வேண்டியிருக்கிறது. ஸ்ரீசரண் பகலாவின் பின்னணி இசை பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

‘பதான்’ உட்படப் பல கமர்ஷியல் படங்கள் தற்போது உளவாளிகளின் உலகத்தைக் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் அமைந்த ‘ஸ்பை’ ரொம்பவே வழக்கமான திரைக்கதையால் காற்று போன பலூன் ஆகக் காட்சியளிக்கிறது.

இந்த படத்தில், இலங்கையில் செயல்பட்டுவரும் சட்டவிரோதக் கும்பலோடு கலந்து நின்று தாக்குதல் நிகழ்த்துவதாக நாயகனின் அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காட்சியில், சீன கேங்ஸ்டர்களின் கீழ் பணியாற்றும் அடியாட்கள் அனைவருமே தமிழ் பேசுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சித்தரிப்புக்கு ஏற்ற தெளிவான விளக்கம் ஏதும் திரைக்கதையில் இல்லை. இது போன்ற விஷயங்கள்தான் ‘ஏன் இந்த தேவையற்ற அதிகப்பிரசங்கித்தனம்’ என்ற கேள்வியை எழுப்புகிறது.

தெலுங்கு ஒரிஜினலில் இருக்கும் இந்த அம்சம், வேற்று மொழிகளில் ‘டப்’ செய்யப்படும்போது நிச்சயமாகக் கவனிக்கப்பெறாது என்பதே உண்மை.

வளர்ந்துவரும் இளம் நடிகர்கள் தங்களது தொடர் வெற்றிகளுக்கு நேர்மாறாக ஒரு மோசமான படத்தைத் தருவது காலச்சக்கரத்தின் இயல்புகளில் ஒன்று.

அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ போன்று நம்மைப் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது ‘ஸ்பை’.

ஒரு மொழியில் வெளியான படம் ‘பான் இந்தியா’ அந்தஸ்தை தாமதமாகப் பெறுவதற்கும், ஒரே நேரத்தில் இந்தியா முழுக்க வெளியிட்டு கல்லா கட்டுவதற்குமான வித்தியாசத்தை இது போன்ற படங்களின் தோல்விகள் நன்குணர்த்தும்.

அதற்கான உதாரணமாக மாறியதைத் தவிர, ‘ஸபை’ வேறெதையும் சாதிக்கவில்லை!

– உதய் பாடகலிங்கம்

You might also like