ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து தீர்ப்பது எளிதானதல்ல.
இன்றைய சூழலில் மருத்துவர்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. கொரோனா நோய்த்தொற்றானது, வாழ்வின் அடுத்தகட்டத்தில் என்ன காத்திருக்கிறது என்ற பதைபதைப்பை எத்தனையோ மனங்களில் ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தகைய தருணங்களில் ஆறுதலாக இருந்தது மட்டுமல்லாமல், பல உயிர்களைக் காத்து எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக விளங்குகிறது மருத்துவ சமூகம்.
காக்கும் கடவுளர்கள்!
காப்பது எனும் சொல்லே உலகில் மிகவும் உயர்ந்தது. ‘காப்பாத்து’ என்ற முழக்கம் கடவுளர்களை நோக்கி மட்டுமே எழுப்பப்படுகிறது; அதற்கடுத்தபடியாக, மருத்துவர்களிடம் அச்சொல் உதிர்க்கப்படுகிறது.
இந்த உலகில் நீதி, சட்டம் ஒழுங்கு, மானம், மனிதம் உள்ளிட்ட பலவற்றைக் காக்கும் பணியில் பலர் ஓயாது ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவப் பணியும் அவற்றில் ஒன்று.
மற்ற காவல் பணிகளில் இருந்து வேறுபட்டு, நோயாளியின் பயத்தையும் பதற்றத்தையும் போக்கி உயிர் காக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மருத்துவர்கள். வாழ்வின் மீதான நம்பிக்கை அறுந்துவிடாமல் காப்பவர்கள்.
24×7 எனும் வார்த்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, அதனை வாழ்வாகக் கொண்டவர்கள்.
எந்த நேரமானாலும் நோயாளியின் குரல் கேட்டால் ஓடோடி வந்து சிகிச்சையளிக்க வேண்டியது மருத்துவரின் கடமை. அதனால், உலகம் முழுவதும் அத்தொழிலுக்கு ஒரேவித மரியாதைதான் அளிக்கப்படுகிறது.
ஆறுதல்படுத்தும் கரங்கள்!
மரணத் துன்பத்தில் உழல்பவர்களையும், அவர்களது சுற்றத்தையும் தேற்றுவதில் மருத்துவர்களுக்கு ஈடிணை கிடையாது. எத்தகைய கொடுமையாக இருந்தாலும், அதிலிருந்து விடுவித்து ஆறுதல்படுத்துவது அவர்களது கரங்கள்தான்.
இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நோய்களும் அவற்றைத் தீர்க்கும் மருத்துவமும் இவ்வுலகில் இருந்து வருகின்றன. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் என்று மருத்துவத்துக்குக் கிளைகளும் அதிகம்.
நோய்த்தன்மை, விருப்பம் மற்றும் தெரிவுக்கேற்றவாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை நாடுகின்றனர். எந்த மருத்துவமாக இருந்தாலும் ‘நோய் நாடி’ நோக்கும் வள்ளுவரின் சொற்களே அடிப்படை.
அப்படிப்பட்ட மருத்துவர்களைப் போற்றுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதியன்று ‘தேசிய மருத்துவர்கள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
மருத்துவ முதலமைச்சர்!
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பிதன் சந்திர ராய் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, அம்மாநில முதலமைச்சராகவும் இருந்தவர். 1882, ஜூலை 1ஆம் தேதியன்று பிறந்த ராய், 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று மறைந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இவரது முயற்சியால் பல்வேறு பெரு மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அதோடு, இந்தியாவின் முதலாவது மருத்துவ ஆலோசகராக இருந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. அவரது நினைவாக ‘தேசிய மருத்துவர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
மனித சமுதாயத்துக்கு டாக்டர் பி.சி.ராய் ஆற்றிய தொண்டைப் பெருமைப்படுத்தும் வகையில், 1991ஆம் ஆண்டு முதல் இது கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருத்துவர்களின் செயல்பாடுகளைப் போற்றுவதோடு, அவர்களுக்கு சக மனிதர்கள் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இது அமைந்து வருகிறது.
கொரோனா எனும் கொடூரம்!
கொரோனா நோய்த்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வாட்டி வதைக்கிறது. இந்தக் காலகட்டத்தில், தொற்றிலிருந்து விலகியிருக்கும் அல்லது தவிர்க்கும் வழிமுறைகளைச் சுட்டிக்காட்டியதோடு, நோயுற்றவர்களை ஆறுதல்படுத்திச் சேவையாற்றியதில் மருத்துவ சமூகத்துக்குப் பெரும் பங்குண்டு. அந்த அடுக்கில் முதன்மையாகத் திகழ்பவர்கள் மருத்துவர்கள்.
தொடர்ச்சியாக நோயாளிகள் வருகையில், பணிச்சுமை பாராமல் அவர்கள் ஆற்றிய தொண்டு தான் இன்று பலரை மூச்சுவிட வைத்திருக்கிறது. காலம் கருதாது செயலாற்றுவது மருத்துவர்களின் இயல்பென்றாலும், கொரோனா எனும் கொடூரம் அதனைக் கட்டாயமாக்கிவிட்டது. அது, சிலரது வாழ்வையும் தின்றிருக்கிறது.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அளித்த தகவலின்படி, கடந்த ஜுன் மாதம் வரை கோவிட்-19 இரண்டாவது அலையினால் 776 மருத்துவ நிபுணர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் மட்டும் 50 மருத்துவர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். தன்னலம் மறந்து அவர்கள் ஆற்றிய சேவையே இதற்குக் காரணம் என்பது வேதனை தரும் உண்மை.
மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்ற சொலவடை உண்டு. காரணம், அவர்கள் நம்முடைய நன்மைக்காகச் செயல்படக்கூடியவர்கள். கண்ணாடியாகச் செயல்பட்டு தீர்வுகளைத் தரக்கூடியவர்கள்.
அப்படிப்பட்ட மருத்துவர்களிடம் நன்றி தெரிவிக்க மறக்கக் கூடாது. வெறுமனே பணி என்பதோடு நின்றுவிடாமல், அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் மட்டுமே இச்சமூகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆதலால், ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்துக்கும் நன்றி சொல்வதென்பது நமக்கு நாமே சொல்லிக்கொள்வது போலத்தான்.