மாரி செல்வராஜின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத் தனக்கென்று தனி பாணியை இரண்டே படங்களில் அவர் உருவாக்கியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் இரண்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது, இருக்கிறது என்பதைச் சொல்கிற படைப்புகளாக இருந்தன. மூன்றாவதாக, அவர் தந்திருக்கும் படம் ‘மாமன்னன்’.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உடன் இந்த படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார் என்பது படம் தொடங்கியபோதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றபோது அது பன்மடங்கானது. திரையில் படமாக விரிகிறபோது, அந்த எதிர்பார்ப்புக்கேற்ப பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறதா ‘மாமன்னன்’?
தலைவனின் அடிமைத்தனம்!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள மக்களில் ஒருவரான மாமன்னன் (வடிவேலு), சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் எம்.எல்.ஏ.வாக காசிபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆனாலும், மாவட்டச் செயலாளரான ரத்தினவேல் (பஹத் பாசில்) கைப்பாவையாகவே அவர் இருக்கிறார்.
மாமன்னனின் அரசியல் செல்வாக்கு மீது சற்றும் ஆர்வமற்றவராக இருக்கிறார் மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்).
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டதே இல்லை.
அதிவீரன் உடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த லீலாவும் (கீர்த்தி சுரேஷ்) இதர நண்பர்களும் சேர்ந்து இலவசமாக ஒரு டியூஷன் செண்டர் நடத்துகின்றனர். அந்த இடத்தின் உரிமையாளர் அவசரமாக காலி செய்யச் சொல்ல, உதவி கேட்டு அதிவீரனை நாடுகின்றனர்.
அவரது வீட்டுக்குச் சென்றபிறகே, தந்தையும் மகனும் பேசாமலிருப்பது லீலாவுக்குத் தெரிய வருகிறது. பதின்ம வயதில் ஏற்பட்ட ஒரு கொடுமையான சம்பவமே அதற்குக் காரணம் என்பது பிடிபடுகிறது.
அதுவரை ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகனாகவே அதிவீரனைப் பார்த்த லீலா, அதன்பிறகு அவர் மீதான நட்பையும் மரியாதையையும் பெருக்கிக் கொள்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, தான் நடத்திவரும் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நண்பர்களிடம் சொல்கிறார் அதிவீரன்.
ஆனால், சுந்தரம் டியூஷன் செண்டரை சேர்ந்தவர்கள் அதிவீரனின் பயிற்சி மையத்திற்கு வந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு அவர்களது அலுவலகத்தைச் சூறையாடுகின்றனர் அதிவீரனின் நண்பர்கள்.
ச.ச.ம.கழகத்தைச் சேர்ந்த சுந்தரத்தின் மூத்த மகன் நடத்தும் பயிற்சி மையம்தான் அது. சகோதரனின் அலுவலகம் தாக்கப்பட்டதை அறிந்து அங்கு வரும் ரத்தினவேல் ‘இந்த சம்பவம் தனது அரசியல் வாழ்வுக்குத் தடையாகிவிடக் கூடாது’ என்று நினைக்கிறார். அதிவீரனையும் மாமன்னனையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்.
ரத்தினவேலின் வீட்டில் அவர் உட்பட அனைவரும் உட்கார்ந்திருக்க, மாமன்னன் நின்று கொண்டிருக்கிறார். அங்கு வரும் அதிவீரன் அக்காட்சியைப் பார்த்து திகைக்கிறார். அதிவீரனை உட்காருமாறு ரத்தினவேல் சொல்ல, தந்தை முதலில் உட்காரட்டும் என்கிறார் அதிவீரன். மாமன்னனோ அதனை ஏற்க மறுக்கிறார்.
அதிவீரனுக்கு அது அதிர்ச்சியாய் இருக்கிறது. ஏனென்றால், தன்னெதிரே யாரும் நிற்கக்கூடாது என்ற மனப்பாங்குடன் சமத்துவமாய் நடத்தும் தந்தைக்கு இந்த நிலையா எனக் கொதிக்கிறார்.
மகனின் வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் மாமன்னன் உட்காரப் போக, ரௌத்திரம் ஆகும் ரத்தினவேல் அவரைத் தாக்குகிறார். பதிலுக்கு அதிவீரன் அங்கிருப்பவர்களைத் தாக்க, ஒரு உக்கிரமான சூழல் உருவாகிறது.
இவை அனைத்துமே சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழலையொட்டி நிகழ்கிறது.
இந்தச் சம்பவம் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? ரத்தினவேலின் ஆதிக்க மனப்பான்மையை மாமன்னனும் அதிவீரனும் முறியடித்தார்களா என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
‘ஒரு தலைவன் அடிமைத்தனத்துடன் இருந்தால்’ என்ற கேள்வியும் அதற்கான பதிலுமே ‘மாமன்னன்’ கதை.
மாமன்னன் பாத்திரத்தின் பின்னணி, கதை நிகழுமிடம் என்று சில அம்சங்கள் ஏறக்குறைய முன்னாள் சபாநாயகர் தனபாலின் அரசியல் வாழ்வைத் தொட்டுச் செல்கிறது.
என்னவொரு பெர்பார்மன்ஸ்!
‘ஏய் என்னாதிது..’, ‘அய்யோ அய்யோ..’, ‘ம்.. போ.. போ..’ என்று சில வார்த்தைகள், வரிகள், ஓரெழுத்து சத்தங்களை உதிர்த்து நம்மை விழுந்து புரண்டு சிரிக்க வைத்தவர் வடிவேலு.
தேவர் மகன், பொற்காலம், எம்டன் மகன் என்று மிகச்சில படங்களில் மட்டும் அவருக்குள் இருக்கும் குணசித்திர நடிகன் வெளியே எட்டிப் பார்த்திருப்பார்.
நெடுநாட்களைக்குப் பிறகு அந்த நடிகனை நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
அடடா! அவர் சீரியசாக தோன்றும்போது, ஒரு காட்சியில் கூட நமக்கு சிரிப்பு வரவில்லை. அதுவே வடிவேலு எனும் அபார நடிகனுக்குக் கிடைத்த வெற்றி.
வடிவேலுக்கு இணையாக இந்த படத்தில் அசத்தியிருப்பது பகத் பாசில்.
அவரது திரைப்படங்களைப் பார்த்திராதவர்கள் கூட, இப்படம் பார்த்தால் ‘யார்றா இது.. என்னவொரு பெர்பார்மன்ஸ்’ என்று அசந்து போவார்கள்.
வெறுமனே சில காட்சிகளில் மிரட்டலாக வசனம் காட்டுவதைவிட, படம் முழுக்க ஒரு வில்லத்தனமான பாத்திரமாகவே தென்படுவது மிக அரிது.
வேறு எவரேனும் நடித்திருந்தால் மிகையாகத் திரையில் தெரிந்திருப்பார்களோ எனும்படியான ஒரு பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் வருமிடங்கள் குறைவு. ஆனாலும், அவரது இருப்பு துருத்தலாகத் தெரியவில்லை.
உதயநிதியைப் பொறுத்தவரை, இதில் ரொம்பவே சீரியசான பாத்திரம். உள்ளுக்குள் பொங்கும் ஆவேசத்தோடு, வெளியே திமிர்த்தனம் மிக்கவராய் தென்படும் வேடம். அதனைத் திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்.
‘இப்படம் முதலாவதாய் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ’ என்று அவரது நலம்விரும்பிகள் நினைக்கும்படியாகத் திரையில் தென்படுகிறார்.
உதயநிதியின் தாயாக வரும் கீதா கைலாசம் வசனம் குறைவாகப் பேசினாலும், படம் முழுக்க வந்தது போன்ற உணர்வை உருவாக்கியிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து லால், அழகம்பெருமாள், விஜயகுமார், ரவீனா ரவி, கதிர், பத்மன் மற்றும் உதயநிதியின் நண்பர்களாக வருபவர்கள் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.
கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், அடியாட்கள் என்று கணக்கு பார்த்தால் சில நூறு பேர்களாவது படம் முழுக்க வந்திருப்பார்கள்.
மாமன்னனைப் பொறுத்தவரை, நடித்தவர்களுக்கு இணையான வரவேற்பைப் பெறுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படியொரு படத்திற்கு ஏழு பாடல்களைத் தந்து திரைக்கதை போரடிக்காமல் இருக்க உதவியிருக்கிறார்.
‘நம்ம கொடி பறக்குற காலம்’, ‘நெஞ்சமே.. நெஞ்சமே..’ ‘வீரனே’ என்று கதையோட்டத்தில் கலந்த பாடல்களைத் தந்தவர் கிளைமேக்ஸில் ‘ஜிகு ஜிகு ரயில்’ தந்து ‘பீல்குட்’ மனநிலையுடன் நம்மை அனுப்பி வைக்கிறார்.
யுகபாரதியின் பாடல் ஆக்கம் அதில் சரிபாதி பங்கு வகிக்கிறது. இப்படத்தில் ரஹ்மான் தந்திருக்கும் பின்னணி இசை புத்துணர்வைத் தந்திருப்பதுடன், முந்தைய படங்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டு நிற்கிறது.
படம் முழுக்க தேனி ஈஸ்வரின் கேமிரா நகர்வு நம்மைக் கவரும் வகையில் அமைந்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் அது பரபரப்புத் தீயை சட்டென்று பற்ற வைத்திருக்கிறது.
என்ன, ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்திருக்கும் பொலிவு திரைக்கதை கோடிட்டுக் காட்ட விரும்பிய யதார்த்தத்தை மங்க வைத்திருக்கிறது.
ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு ஆக்ஷன் காட்சிகளில் அளவெடுத்தாற் போன்று அமைந்துள்ளது. அதிலும் இண்டர்வெல் சண்டைக்காட்சி ‘வாவ்’ ரகம்.
வேட்டைநாய், குதிரை, பன்றிகள் என்று மூன்று வெவ்வேறு விலங்குகள் திரைக்கதையில் இடம்பெறுகின்றன. அவை இருக்குமிடத்தைக் காட்டியதில் தொடங்கி நாயகன், வில்லன் நடமாடும் இடங்கள் வரை பல பகுதிகளைத் திரையில் காட்ட மெனக்கெட்டிருக்கிறது குமார் கங்கப்பனின் குழு.
இன்னும் ஆக்ஷன் கொரியோகிராஃபி, ஒலிக்கலவை, காஸ்ட்யூம் டிசைன் என்று பல அம்சங்கள் படத்தில் ரொம்பவே கூர்ந்து நோக்கிச் செதுக்கப்பட்டுள்ளன.
மாரி செல்வராஜின் பலம்!
ஒரு கதை பலமுறை எழுதப்பட்டாலும், அவசரத்திற்கு ஏற்ப கூட்டுழைப்பில் பேசிப் பேசித் தயாரானாலும், அதனை எப்படிக் காட்சியாக்கம் செய்வது என்பதில் மாரி செல்வராஜின் பலம் தென்படும்.
எழுத்தில் இருக்கும் குறியீடுகளைத் திரையில் வடிக்கும் லாவகமும் அவரிடம் உண்டு. ‘மாமன்னன்’ படத்திலும் அது உண்டு. ஆனால், ‘கர்ணன்’ அளவுக்கு அதனை அவர் திரையில் நிறைக்க முற்படவில்லை.
மேட்டுக்குடியினர் ஒடுக்கப்பட்டவர்களை வேட்டை நாய் போல எண்ணுகின்றனர் என்பதைக் காட்சிகளாக மட்டுமின்றி வசனங்களிலும் சொல்கிறார் இயக்குநர்.
ஒருகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆதிக்க மனப்பான்மைக்குப் பலியானதை, காத்திருக்கும் வேட்டை நாய்களுக்கு நடுவே பட்டுப்போன மரமொன்றில் ஒரு குழந்தை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுவதாக உருவகப்படுத்துகிறார்.
நாய், பூனை போல சிலருக்குப் பன்றியும் வீட்டு விலங்குதான் என்று காட்டியிருக்கிறார்.
குதிரை மேல் ஏறி உலா வருவதை ஆதிக்க மனப்பான்மை, வெற்றியின் அடையாளம் என இருவேறு நிலைகளாகக் காண்கிறார்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த படத்திலாவது இந்த குறியீடுகளை, படிமங்களை மாரி செல்வராஜ் குறைத்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால், அவை திகட்டும் அளவுக்கு இருக்கக் கூடாது.
கர்ணனில் வரும் காவல்நிலைய தாக்குதல் காட்சி போல, இதில் பகத் பாசில் – உதயநிதி மோதல் எழுச்சியூட்டுவதாக உள்ளது.
‘வன்முறையைத் தூண்டுகிறார்’ என்று மாரி செல்வராஜ் மீது குற்றம்சாட்டுபவர்களுக்கு அக்காட்சி அறவே பிடிக்காது.
இக்கதையில் வடிவேலு ஒரு எம்.எல்.ஏவாக இருந்தபோதும், அவரோடு ஒரு போலீஸ் அதிகாரி கூட இல்லை. அவரது வீட்டிலும் ஆட்பலம் இருப்பதாகக் காட்டப்படவில்லை.
கவுன்சிலரே ‘பந்தா’வாக திரியும் சூழலில், அவை கொஞ்சம் செயற்கையாகத் தெரிகின்றன.
‘மாமன்னன்’ படத்தில் இரு வேறு கட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் சின்னங்களாக ஒற்றை நட்சத்திரம், அரிக்கேன் விளக்கு காட்டப்படுகின்றன.
இவை தவிர்த்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற சொல்லாடல்களும் திரைக்கதை எக்கட்சிகளை முன்னிறுத்துகின்றன என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்.
அதோடு, மேற்கு மண்டலத்தில் செல்வாக்கைப் பெற இக்கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் லேசாகச் சொல்லப்படுகிறது.
தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சிகள் எப்படி அணுகும் என்றும் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
கதை முழுமையாகத் தெரிந்தபிறகும், இப்படியொரு அரசியல் படத்தில் தான் பங்கேற்றாக வேண்டும் என்ற உதயநிதியின் முனைப்புக்கு சபாஷ் சொல்லத்தான் வேண்டும்.
அதேநேரத்தில், இப்படத்தில் வரும் சென்டிமெண்ட் காட்சிகள் பரியேறும் பெருமாள், கர்ணன் போல சட்டென்று ஈர்க்கவில்லை.
நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அழுத்தம், மாரி செல்வராஜின் காட்சியாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தியதா என்று தெரியவில்லை.
ஆனால், அதனை மீறி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தரும் ‘மாமன்னன்’.
முக்கியமாக, வடிவேலுவைப் புதிய கோணத்தில் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்!
-உதய் பாடகலிங்கம்