தண்டட்டி – காதலைக் கொண்டாடும் கதை!

போஸ்டர், டீசர், ட்ரெய்லர், படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள் என்று எல்லாவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து தியேட்டருக்கு சென்றால், திரையில் ரொம்பவே வித்தியாசமானதொரு அனுபவம் கிடைக்கும்.

அது நம் மனதையும் தொடுவதாக இருந்தால், அப்படத்தின் வெற்றி மிகப்பெரியதாக அமையும்.

அப்படியொரு தாக்கத்தை உருவாக்கின ‘தண்டட்டி’ படத்திற்கான புரோமோஷன் உத்திகள். அதற்கேற்ற பலனை நாம் திரையில் பெறுகிறோமா?

ஒரு தண்டட்டியின் கதை!

தங்கப்பொண்ணு (ரோகிணி) என்றொரு பெண். தேனி அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர்.

அவருக்கு நான்கு மகள்கள். இரண்டு மகன்கள். ஒரு மகன் இறந்துவிட, மருமகளும் பேரனும் அவரோடே வசிக்கின்றனர். ஒரு மகனுக்குத் திருமணமாகவில்லை.

நான்கு மகள்களும் பக்கத்து ஊர்களில் குடும்பம் நடத்தி வருகின்றனர். தாயிடம் இருந்த உடைமைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்கின்றன பிள்ளைகள்.

நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு ஆளாகும்போது, அந்தத் தாயின் காதில் இருக்கும் தண்டட்டி மீது அவர்களின் கவனம் திரும்புகிறது.

பாட்டியின் மருத்துவச் செலவுக்கு ஆகுமே என்றெண்ணும் பேரன் செல்வராசு, அதனைக் கழற்றித் தருமாறு தங்கப்பொண்ணுவிடம் கேட்கிறான்.

சீறி வெகுண்டெழும் அப்பெண், அந்த தண்டட்டியை வாங்கித் தந்தது மறைந்து போன தனது காதலன் என்கிறார்.

சாதீயக் கட்டுப்பாடுகளை மீறித் திருமணம் செய்த காரணத்தால், தனது காதலன் ஆணவக்கொலைக்கு ஆட்பட்டதைச் சொல்லி அழுகிறார். அதற்கடுத்த நாள், அவர் காணாமல் போகிறார்.

எங்கு தேடியும் பாட்டி கிடைக்காத காரணத்தால், தேவாரம் காவல்நிலையத்தில் புகார் செய்யச் செல்கிறார் செல்வராசு.

அங்கிருக்கும் போலீசாரோ, ‘கிடாரிப்பட்டிக்குள் போலீஸை விடமாட்டார்கள்’ என்று வர மறுக்கின்றனர். அதனை மீறி சுப்பிரமணி (பசுபதி) எனும் போலீஸ்காரர் செல்வராசுவுக்கு உதவுகிறார். சொன்னபடியே தங்கப்பொண்ணுவைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்.

ஆனால், அந்தப் பெண் இறந்துபோகிறார். செல்வராசுவின் வற்புறுத்தலால் ஈமச்சடங்கு நடக்கும்வரை உடனிருப்பதாக வாக்குறுதி அளிக்கிறார் சுப்பிரமணி.

அதற்கான பலனாக, கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து அவர் இதுவரை சந்தித்திராத மரியாதை கிடைக்கிறது. அதற்குப் பிறகும், அவர் அந்த துக்க வீட்டிலேயே இருக்கிறார்.

அடுத்த நாள் காலையில் தங்கப்பொண்ணு காதில் இருந்த தண்டட்டி காணாமல் போகிறது.

அதனைத் திருடியது யார் என்று ஒருவரையொருவர் சந்தேகப்படுகின்றனர், சண்டையிடுகின்றனர் தங்கப்பொண்ணுவின் மகள்கள்.

‘இது தங்கள் பிரச்சனை’ என்று சொல்லும் ஊர்க்காரர்கள், சுப்பிரமணியைத் திரும்பிச் செல்லுமாறு கூறுகின்றனர்.

தங்கப்பொண்ணுவின் மகனோ, ‘தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் ஓரடி நகரக் கூடாது’ என்று சுப்பிரமணியை மிரட்டுகிறார்.

இறுதியில் என்னவானது? காணாமல்போன தண்டட்டியை சுப்பிரமணி கண்டுபிடித்துக் கொடுத்தாரா என்று நீள்கிறது இத்திரைப்படம்.

முழுக்க முழுக்க தண்டட்டியையும் தங்கப்பொண்ணு எனும் பெண்ணையும் மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அதனூடே இருக்கும் காதல் கிளைமேக்ஸில் ஒரு தாண்டவத்தை நிகழ்த்துகிறது.

அற்புதமான பாத்திர வடிவமைப்பு!

‘தண்டட்டி’ முழுக்க நிறைய மனிதத் தலைகள் நிறைந்திருக்கின்றன. அவர்களது நடிப்பு மிகப்பொருத்தமாக இருப்பதாலேயே, நம்மால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுமை காக்க முடிகிறது.

தங்கப்பொண்ணுவாக வரும் ரோகிணி இதில் நடித்தாற்போலவே தெரியவில்லை. அப்படிச் சொல்வதே அவருக்குப் பெருமை. போலவே, நீண்ட நாட்களுக்குப் பிறகு பசுபதியும் இதில் அசத்தியிருக்கிறார். அவரைவிடப் பொருத்தமாக எவரும் நடித்துவிட முடியாது என்று சொல்லும்படியாக, சுப்பிரமணியாக அதகளம் செய்கிறார்.

இவ்விருவரையும் தவிர்த்து விவேக் பிரசன்னா, தீபா சங்கர், செம்மலர் உட்படப் பலர் திரையில் வந்து போகின்றனர்.

மிக முக்கியமாக, ஒப்பாரி வைக்கும் பாட்டிகளும் ஊர் பஞ்சாயத்து பேசும் மனிதர்களும் எளிதாக நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர்.

பிளாஷ்பேக்கில் வரும் அம்மு அபிராமியும் அவரது காதலராக வருபவரும் நேர்த்தியான நடிப்பைத் தந்திருப்பதே, இறுதியாக நாம் கனத்த மௌனத்துடன் திரும்ப வழி வகுத்திருக்கிறது.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, தொடக்கத்தில் ஒரு தொலைக்காட்சிப் படம் பார்க்கும் உணர்வை உருவாக்குகிறது; போகப் போக, அதுவே படத்தோடு நம்மை ஒன்றவைத்து விடுகிறது.

குறிப்பாக, ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு மத்தியில் பசுபதி நிற்கும் காட்சிகளில் ரசிகர்களின் குதூகலத்திற்குக் காரணமாகிறது.

சிவாநந்தீஸ்வரன் படத்தொகுப்பானது, எவ்விதக் குழப்பமும் இன்றி ஒரு கதையைத் திரையில் சொல்லியிருக்கிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘காக்கி பய கலங்க’ பாடல் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது.

பின்னணி இசையில் சோகத்தையும் காதலையும் பரபரப்பையும் நிரப்பி, குறிப்பிட்ட காட்சிகளில் ரசிகர்கள் அதிக தாக்கம் பெற வழியமைத்திருக்கிறார் சாம் சி.எஸ்.

ஈகோ பார்க்காமல் அவர் பின்னணி இசையமைத்துத் தந்திருப்பது போல, பிற இசையமைப்பாளர்களும் முன்வந்தால் திரையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இந்தப் படத்தில் வீரமணி கணேசனின் கலை வடிவமைப்பு ரொம்பவே முக்கியமானதொரு இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக, ஒரு இறப்பு நிகழ்ந்த வீட்டுக்குள் நாமே இருப்பது போன்ற உணர்வை உருவாக்கியிருக்கிறது அவரது குழு.

‘தண்டட்டி’யின் மாபெரும் சிறப்பம்சமே அதில் இடம்பெற்ற பாத்திரங்களின் அற்புதமான வார்ப்புதான்.

தங்கப்பொண்ணுவின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தவளைவாயன் எனும் திருடன், கோளாறாகப் பேசும் கிழவி, முரண்டு பிடிக்கும் பஞ்சாயத்து தலைவர், மதிக்க மாட்டேங்கிறாங்க என்று புலம்பும் சம்பந்தி என்று சின்னச் சின்ன பாத்திரங்களையும் நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ராம் சங்கையா. அது மட்டுமல்லாமல், தான் சொல்ல வந்த சமூக நீதியை இனிப்பு பூசிய மருந்தாகத் தந்திருக்கிறார்.

ஒரு ஆணவக் கொலை!

‘தண்டட்டி’யில் சுப்பிரமணியாக வரும் பசுபதி கிடாரிப்பட்டிக்குள் நுழையும் வரை கதை ஆமையை விட மெதுவாக நகர்கிறது. தங்கப்பொண்ணு பாத்திரம் இறந்ததாகக் காட்டப்பட்டபிறகே, கதை சூடுபிடிக்கிறது. அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது.

இந்த கதையை, காட்சிகளை அழகியல் உணர்வை அள்ளியிறைத்துப் படம்பிடித்திருக்கலாம். ஆனால், அது நிகழவில்லை.

இயக்குனர் ராம் சங்கையா அந்த பாணியை விரும்பியிருக்கலாம் அல்லது அதுவே தானாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அது மட்டுமே பார்வையாளர்கள் இந்த படத்தோடு ஒன்றுவதற்கும் விலகுவதற்கும் முதல் காரணமாக அமைகிறது.

ஆணவக் கொலைகள் நிகழ்வது பற்றிப் பல படங்கள் பேசியிருக்கின்றன.

அவற்றில் இருந்து விலகி நின்று வேறொரு கோணத்தில் இத்திரைக்கதையை வடித்திருக்கிறார் இயக்குனர்.

சாதீயப் பெருமை பேசும் படமாக இது இருக்கும் என்று நம்பி தியேட்டருக்கு வந்தவர்களை நிச்சயம் அது திருப்திப்படுத்தாது.

அதேநேரத்தில் முதல் மரியாதை, காதல், டைட்டானிக் என்று நாம் பார்த்த எத்தனையோ ரொமான்ஸ் படங்களை நினைவூட்டும்படியாக ‘தண்டட்டி’ நிச்சயம் இருக்கும்.

காதல் இந்த சமூகத்தை மாற்றும் என்று நம்புவராக இருந்தால், உங்களுக்கு இப்படம் பிடிக்கும். காதலாவது கருமமாவது என்பவர்கள், தண்டட்டியைப் பார்க்காமல் இருப்பதே நல்லது!

– உதய் பாடகலிங்கம்

You might also like