ஊடக உலகத்தை ஊடுருவிக் காட்டும் ‘ஸ்கூப்’!

ஊடக உலகத்தை உள்ளும், புறமுமாக அச்சு அசலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவு!

ஊழல், குற்றம், கொலை, மோசடி, அரசியல் ரகசியங்கள் போன்றவற்றை முந்தி தருவதிலும், போட்டி, பொறாமை, வதந்திகளை எதிர் கொள்ளுவதிலும் ஒரு பெண் பத்திரிகையாளர் சந்திக்கும் சவால்களை உயிர்ப்புடன் எடுத்துள்ளனர்!

பொது வெளிக்கு தெரிந்திராத ஒரு செய்தியை, முந்தித் தருவது ‘ஸ்கூப்’ எனப்படும்.

நெட்பிளிக்சில்,  தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஸ்கூப்’ என்ற இந்தித் தொடர், பத்திரிகையாளர்களை மையப்படுத்தி, அரசியல்வாதிகள், நிழல் உலக தாதக்கள் பற்றிச் சொல்லும் கதையாகும்.

மும்பையைச் சார்ந்த பத்திரிகையாளரான ஜிக்னா வோரா, Behind the bars in Byculla: My days in prison என்ற நூலை எழுதியிருக்கிறார்.

சிறைக்குச் சென்றவர். அவருடைய கதைதான் தொடராக வந்துள்ளது.

பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களது குடும்பங்கள், செய்தி எடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள், சந்திக்கும் இடர்கள், அவர்களுக்கு இடையில் நிலவும் போட்டி… என பல யதார்த்தமான காட்சிகள் உள்ளன!

தன் வரலாற்று நூலுடன் நிஜ நாயகியும், நிழல் நாயகியும்!

ஜாக்ருதி பதக் என்ற பெண் இதில் கதாநாயகி. மும்பை நாளிதழில் குற்றச் செய்திகளை எழுதும் பத்திரிகையாளர். பல செய்திகளை முதல் பக்கத்தில் தரும் அளவுக்கு தொடர்புகளை வைத்திருப்பவள்.

பள்ளி  மாணவனுக்குத் தாயாக இருந்தாலும், நேரம் கெட்ட நேரத்தில் உழைத்து, ஆண்கள்  கோலோச்சும் உலகில் நட்சத்திரமாக வலம் வருகிறாள்.

இவளது முன்னேற்றத்தை சந்தேகத்தோடு பார்ப்பவர்களும் உள்ளனர். இவளைக் கண்டு பொறாமைப்படுபவர்களும்  உள்ளனர். கரிஷ்மா டானா என்பவர் இந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.

மேலைநாடுகளில் மருத்துவம், நீதிமன்றம், உளவியல்  என விதவிதமான பிரிவுகளில் தொடர்கள் வருகின்றன.

அதேபோல இது, பத்திரிகையாளர்களை மையப்படுத்தி, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் நேர்த்தியாக  எடுக்கப்பட்டுள்ளது. ஹன்சால் மேத்தா இயக்கி உள்ளார். ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை மோசடியை மையப்படுத்தி ‘ஸ்கேம் 92’ என்ற புகழ்பெற்ற தொடரை எடுத்தவர்.

இயக்குனர் ஹன்சல் மேத்தா.

கதை மும்பையில் நடக்கிறது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடக்கும் இக்கதையில் சோட்டா ராஜன், தாவூத் இப்ராகிம் போன்ற நிழலுலக தாதாக்கள் வருகிறார்கள்.

கதை நாயகியான ஜாக்ருதி பதக்கிற்கு செய்தி கொடுக்க காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள். தாதாக்களை எப்படி அணுக வேண்டும் என்பது ஜாக்ருதிக்குத் தெரியும். அவர்களை மூலமாகக் (source) கொண்டு செய்திகளை வெளியிடுகிறாள்.

இந்த நிலையில், வேறொரு பத்திரிகையில் குற்றச் செய்திகளை எழுதும் சென் என்கிற பத்திரிகையாளரை, பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்கிறார்கள். 

பத்திரிகையாளர்கள் போராடுகிறார்கள். எதிர்க்கட்சி சிபிஐ விசாரணை கோருகிறது. வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம் விரும்புகிறது.

சோட்டா ராஜன் தான் கொலைக்காரன். ஜாகிருதி பதக் கொடுத்த தகவலால் தான் அவன் கொல்லப்பட்டான் என்று சொல்லி இவளைக் காவல்துறை கைது செய்கிறது.

பல்வேறுச் சம்பவங்களின் கோவைதான் இந்தக்கதை எனலாம். இதில் பல நுட்பமான செய்திகள் சொல்லப்படுகின்றன.

அதுதான் இந்த தொடரின் சிறப்பாகும். ஜாகிருதி பதக்கை,  தன்னுடைய ‘வளர்ப்பாக’ பார்க்கிறான் ஆசிரியரான இம்ரான். அவள் தரும் செய்தி, உறுதியாக இருந்தால் தான் வெளியிட அனுமதிக்கிறான்.

ஒருவர் சொன்னதன் அடிப்படையில் மட்டும் செய்தி வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். இம்ரானை இதழியல் அறம்  கொண்டவனாக வடிவமைத்து உள்ளனர்.

கொலையாளியைக்  கண்டுபிடிக்க, அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்று சங்க உறுப்பினர்கள் சொல்லுகிறபோது, காவல்துறை விசாரித்துக் கொண்டு இருக்கும்போது, அதற்கு அழுத்தம் தர வேண்டாம், சற்று பொறுப்போம் என்கிறான்.

எல்லோரும் கைவிட்ட நிலையிலும், இவளுக்காக தனியொருவனாக முதலமைச்சரை பார்க்க முயற்சிக்கிறான்.

இரவு நேரங்களில் தூக்கம் வராமல் புரள்கிறான். இவன் மனைவி, தனியாளாக இருந்தாலும்,  நியாயத்திற்கு குரல் எழுப்ப வேண்டும் என்கிறாள்.

இவளைப் பற்றிய செய்தியை தொடர்ந்து எழுத, அவள் வேலை செய்த பத்திரிகை முதலாளியே, விரும்பவில்லை. நாளிதழில் எழுத வாய்ப்பில்லாத நிலையில், இம்ரான் நூலாக எழுதுகிறான். முகமது சீஷன் அயூப் இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இம்ரானுக்கும், ஜாக்ருதிக்கும் உள்ள தொடர்பு தவறாகப் பேசப்படுகிறது. அது செய்தியாகிறது. இவனது சாட்சியத்தை எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் சொல்லும். இப்படி தொடர் முழுவதும் அடர்த்தியாக உள்ளது.

ஆறு அத்தியாயங்கள். சில நேரங்களில் தொடர் வசனங்கள் சோர்வைக் கூட ஏற்படுத்தலாம். மும்பையை பற்றி, குறிப்பாக அக்காலக் கட்டத்தை தெரிந்தவர்களுக்கு இது கூடுதல் ஆர்வத்தைத் தரலாம்.

செய்திகளை முந்தித் தந்தவள், கைதானதில் தானே ஒரு செய்தியாக மாறினாள்!

ஜாக்ருதியை குற்றவாளியாக்குவது என்று முடிவு செய்துவிட்டபிறகு, அவளை அவதூறு செய்யும் கதைகளை பத்திரிகையாளர்களை வைத்தே காவல்துறை வெளியிடுகிறது. தங்களுக்கு பிடிக்காத ஒரு அதிகாரியோடு இணைத்து கதை கட்டிவிடுகிறது.

விவாகரத்தானவள் என்பது கதைக்கு கூடுதல் மசாலாவைத் தருமல்லவா? இத்தகைய கதைகள் பள்ளிக்குச் செல்லும் அவளுடைய மகனை எப்படி பாதிக்கும்? அவளுடைய குடும்பத்தாரை எப்படி பாதிக்கும்?  தனது ‘முன்னேற்றம்’ ஒன்றே குறியாக இருக்கும் இவளுடைய ஜூனியர் பெண் பத்திரிகையாளரே இதைப் பற்றி எழுதுகிறார்.

சிறை அனுபவங்கள், பிணைக்கான நீதிமன்ற போராட்டம் என்று தொடர் முடிகிறது.

கடைசி இரண்டு அத்தியாயங்கள் சற்று மந்தமாகச் செல்கின்றன. நீளத்தைச் சற்று குறைத்திருக்கலாம்.. பிணை கோரி நடைபெறும் நீதிமன்ற விசாரணை சிறப்பாக உள்ளது.

ஜாக்ருதியை பற்றி போட்டி பத்திரிக்கைக்கு தெரிந்தாலும், அறம் கருதி அதை செய்தியாக்க மறுக்கிறது. நம்பகத் தன்மையோடு பல காட்சிகள் உள்ளன.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரம் காவல்துறை அதிகாரியாக வரும் ஷ்ராப்.

உண்மை குற்றவாளியை கண்டிபிடிக்க விரும்புவனாகவும், அதே நேரத்தில் மேல் அதிகாரி சொல்லும் ஒருத்தியை மாட்டி விடுபவனாக இருக்கிறான்.

ஜாக்ருதியிடம் கிறங்குகிறான். அவள் ஒத்துக் கொண்டால் அவனுக்கு மகிழ்ச்சிதான்.

பணியிடத்தில் ஒருத்தி எதிர்கொள்ளும் தொழில்சார் நோய்களையும் இதில் நாம் காணலாம்.

ஒருவருடன் படுப்பதால்தான் அவளுக்கு செய்தி கிடைக்கிறது, அல்லது  பதவி உயர்வு கிடைக்கிறது என்று பெண்களைப் பற்றி அவதூறாக  உலவும் கதைகளையும் நாம் கண்ணுற முடியும்.

இது ஒரு விறுவிறுப்பான தொடர். படம் நெடுகிலும் வசனங்கள். பத்திரிகைத் தொழிலை, சிறைச் சாலையை, நீதிமன்றத்தை யதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு தொடர்.

நெருக்கடிகாலத்தில் சிறை சென்ற பத்திரிகையாளரான  குல்தீப் நய்யார் ‘ஸ்கூப்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரின் நினைவாக கூட இந்த தலைப்பை வைத்திருக்கலாம்!

– பீட்டர் துரைராஜ்

நன்றி: அறம் இணைய இதழ்

You might also like