முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.

சங்கத்தின் சாசனத் தலைவரான இளஞ்செழியன் அவர்கள், வருங்கால ரோட்டரி ஆளுநர் வினோத் சரோகி தலைமையில் முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு இந்தப் பொறுப்பினை வழங்கினார்.

அப்போது ரோட்டரி மேனாள் ஆளுநர் கோ. ஒளிவண்ணன் மற்றும் புதிதாகப் பதவியேற்ற செயலாளர் மருத்துவர் பாலமுரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான கிரீன் பார்க்கில்  நேற்று (23.06.2023) மாலை நடைபெற்றது‌.

இதில் ஏராளமான ரோட்டரி நண்பர்கள் மற்றும் சென்னையைச் சார்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த கல்வியாளருக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கும் குமார் ராஜேந்திரன், சட்டம், நூலகவியல், உளவியல், பொது நிர்வாகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் என 7 துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளையும் கற்றிருக்கிறார்.

தமிழ்நாடு வில் வித்தை சங்கத்தின் தலைவராகவும், பன்னாட்டு ரோட்டரி அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கும் முனைவர் குமார் ராஜேந்திரன், தாய் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் இருக்கிறார்.

திருமதி ஜானகி அம்மாவின் நூற்றாண்டையொட்டி இவரது உழைப்பினால் உருவான ‘அன்னை ஜானகி-100’ என்ற நூற்றாண்டுச் சிறப்பு மலரும், நாடாண்ட முதல் நாயகி என்ற விரிவான நூலும் உருவாகி இருக்கிறது.

அதோடு மிக அண்மையில் இவர் எழுதித் தொகுத்த ‘பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்’என்ற நூலை வெளியிட்டவர் தமிழ்நாடு முதல்வரான மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த பதிப்பகத்திற்கான விருது, குமார் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் தாய் வெளியீடு நிறுவனத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு மணி நேரத்திய ஆவணப் படத்தையும், திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் பற்றிய சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கும் குமார் ராஜேந்திரன் தற்போது மக்கள் திலகத்தை அடையாளப்படுத்திய ‘தாய்’ மின்னிதழின் ஆசியராகவும், வெளியீட்டாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like