தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக காவல் துறை பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்கும்போது பாதுகாப்பு குறைவு என நினைத்தால் காவல் துறையை உதவி எண்கள் மூலம் அழைக்கலாம்.
இந்த உதவி எண்களில் பேசும் காவலரிடம் பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறி, அவா்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால், அருகே உள்ள காவல் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
அதோடு இந்த வாகனம், பெண்கள் இருக்கும் இடத்துக்குகே வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையை 1091, 112 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலமாகவும், 044-23452365, 044-28447701 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை பெண்களுக்கு இலசமாக வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.