பொம்மை – பேண்டஸி கதையில் யதார்த்தம் எதற்கு?

எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாமாக ஏதோ ஒன்றை முடிவு செய்வோம். தியேட்டருக்கு சென்றால், நாம் நினைத்தது போலவே 100 சதவீதம் திரையில் தென்படும்.

‘இறைவி’ படத்தில் அவர் நடித்தபிறகு அந்தக் கணிப்புகளில் ஒரு சதவீதம் கூட உண்மையாவதில்லை. மாறாக, ஒவ்வொன்றும் எஸ்.ஜே.சூர்யாவினுள் இருக்கும் நடிப்பு அரக்கனை நம் கண் முன்னே காட்டுகின்றன.

ராதாமோகனின் ‘பொம்மை’ படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?

பொம்மை அழகி!

ஜவுளிக்கடை உட்பட பல இடங்களில் வைக்கப்படும் பெண்ணுருவ பொம்மைகளுக்கு கண், உதடு போன்றவற்றை வரையும் கலைஞன் ராஜ்குமார் (எஸ்.ஜே.சூர்யா).

நடுங்கியவாறே தூரிகையைக் கையில் எடுத்தாலும், அவர் வரைந்து முடித்தபிறகு அந்த பொம்மை நம்முடன் உரையாடத் தயாராவது போலிருக்கும்.

அப்படியொரு கலைஞனாகத் திகழும் ராஜ்குமார் சிறு வயதிலேயே மனச்சிதைவுக்கு ஆளானவர். காரணம், அவரது தோழி நந்தினி ஒரு திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போனது. அதற்குத் தானே காரணம் என்ற குற்றவுணர்ச்சி அவரைக் கொன்றெடுக்கிறது.

அந்த பாதிப்பிலேயே இருப்பவரை ஒரு பொம்மையின் வருகை தடம் மாற்றுகிறது. நந்தினியின் தாடையில் வித்தியாசமான ஒரு மச்சம் இருக்கும்; அதைப் போன்றே அச்சுஅசலாக அந்த பொம்மையின் தாடையிலும் ஒரு உடைசல் இருக்கிறது.

மனச்சிதைவு பாதிப்பைத் தடுப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருக்கும் ராஜ்குமாருக்கு, அந்த பொம்மை நந்தினியாகவே தெரிகிறது.

அந்த பொம்மை அழகியின் (பிரியா பவானி ஷங்கர்) முன்னே மெய்மறந்து நிற்கும்போதெல்லாம், அவருக்குள் ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது காதலாக வளர்கிறது.

ஒருநாள் ராஜ்குமார் தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, ஆலையில் அந்த பொம்மை இல்லை.

அதனை ஷோரூமுக்கு அனுப்பிவிட்டார்கள் என்று தெரிந்ததும், அவர் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார்.

அதற்குக் காரணமான மேலாளர் ஜெயராமனோடு சண்டையிடுகிறார். அதுவரை அவரை ராஜ்குமார் எதிர்த்துப் பேசியது கூட இல்லை.

அன்றிரவே ஜெயராமன் கொலையாகிறார். கொலைக்குக் காரணம் தெரியாமல் விழிக்கும் போலீசாரின் சந்தேகப் பார்வை ராஜ்குமார் மீது விழுகிறது.

அப்போது, அவர் ஒரு ரெடிமேட் ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்கிறார். காரணம், அங்குதான் அந்த பொம்மை இருக்கிறது.

அங்கும் ஒரு நபர் அந்த பொம்மை அழகியின் மீது காமப்பார்வையை வீசுகிறார். அதனைக் காணும் ராஜ்குமார் என்ன செய்தார் என்று நீள்கிறது ‘பொம்மை’ கதை.

ஒரு அழகான பொம்மையைத் தனது தோழியாக நினைத்து உருகும் ஒரு கலைஞனின் மனச்சிதைவு பாதிப்பையே படம் மையப்படுத்துகிறது. அதனை நியாயம் செய்வது போல, மிகச்சிறப்பான பிளாஷ்பேக்கும் படத்தில் உண்டு.

சூர்யா எனும் அரக்கன்!

‘இறைவி’ படத்தில் மெலிதான நீரோடை போலத் தொடங்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, கிளைமேக்ஸில் உச்சம் கொள்ளும்.

அதே பாணியில், இப்படத்திலும் ஒரு காட்சி உண்டு. அந்த ஒரு காட்சிக்காகவே இந்த படத்தைத் தான் ஒப்புக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறார் சூர்யா. அதில் ஆச்சர்யமில்லை.

அந்தக் காட்சியில் சூர்யா எனும் நடிப்பு அரக்கனை நாம் நிச்சயம் ரசிப்போம். வாவ்! அதில் கொஞ்சமும் மிகையிருக்காது. அதற்காகவே அவருக்கு ஒரு ‘பொக்கே’ கொடுக்க வேண்டும்.

இந்தப் படத்தில் ஒரு சிண்ட்ரெல்லா போலத் தோன்றியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். விதவிதமான மாடர்ன் உடைகளில் வரும்போது, அவரைக் காதலிக்காமல் போனால்தான் ஆச்சர்யம் என்றாகிறது.

கிட்டத்தட்ட ‘குணா’வில் வரும் நாயகிக்கு ஒப்பான பாத்திரம். ஆனால், ரொம்பவே எளிதாக அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் பிரியா.

சாந்தினிக்கு இதில் ஒரு சிறிய பாத்திரம். அதனை லாவகமாகக் கையாண்டிருக்கிறார். ஆதித்யா டிவி டவுட் செந்தில் நான்கைந்து இடங்களில் நம்மைச் சிரிக்கவைத்தாலும், அவருக்கும் படத்தில் சீரியசான பாத்திரம் தான்.

இன்ஸ்பெக்டராக வரும் அருள், ஜெயராமனாக நடிப்பவர், ஷோரூம் மேனேஜராக வருபவர் உட்பட சுமார் அரை டஜன் கலைஞர்களே திரையில் வசனம் பேசுகின்றனர். அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘இந்தக் காதலில்’, ‘எனதுயிர் எங்கே’, ‘முதல் முத்தம்’ மூன்றுமே நம் மனதின் அடியாழத்தைத் தொடுகின்றன. அதைவிட மேலானதொரு ஆச்சர்யம், படத்தின் பின்னணி இசை.

மிகச்சில வாத்தியங்களைக் கொண்டு எளிமையாக அமைக்கப்பட்டாலும், அதன் நுட்பம் நம்மைத் திரையுடன் ஒன்ற வைக்கிறது. நாயகனுக்கு என்னாகுமோ என்று பதைபதைப்பைத் தந்திருக்கிறது.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் தேர்ந்தெடுத்துப் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களாகத் தெரிகின்றன.

ஆண்டனியின் படத்தொகுப்பில் கதையோட்டம் சீராக நகர்ந்து நம் மனதைக் கவ்விப் பிடிக்கிறது.

கிளைமேக்ஸில் நாயகனோடு இருப்பது பொம்மைதான் என்பதை உணர்த்த ஓரிரு ஷாட்களை மட்டுமே காட்டியிருப்பது திரைக்கதையின் மீதான அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

‘தமிழ் சினிமாவை ரொம்ப புரட்டிப் போட்டுரதடா, உருண்டு ஆந்திரா பக்கம் போயிரப் போகுது’ என்பது போன்ற வசனங்களால் நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் வசனகர்த்தா பொன்.பார்த்திபன்.

ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையிலேயே நாயகனுக்கான வசனங்களைப் படம் முழுக்கப் படைத்திருப்பது அழகு.

இந்தப் படத்தின் மாபெரும் பலவீனம் இதன் எளிமை. கோவிட்-19 காலகட்டத்தில் படம்பிடிக்கப்பட்டது அதற்கான காரணமா என்று தெரியவில்லை.

மையப்பாத்திரங்களின் பின்னே பெரிதாக மனித நடமாட்டமே இல்லை. திரையில் பெருங்கூட்டத்தையே பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு அது ஒவ்வாமையைத் தருகிறது. ஆனால், நாயகனின் உலகத்தில் நாயகியைத் தவிர வேறு எவருமில்லை என்ற எண்ணத்தை அது சரியாகக் கடத்தியிருக்கிறது.

இதுவொரு ராதாமோகன் படம்!

‘அழகிய தீயே’ முதல் ஓடிடி வெளியீடான ‘மலேசியா டூ அம்னீஷியா’ வரை, தன் அனைத்துப் படங்களிலும் ஒரு அம்சத்தைப் பிரதானப்படுத்தியிருப்பார் ராதாமோகன். அது, அக்கதையில் தென்படும் மென்மை.

அவரது படங்கள் தரும் காட்சியனுபவம், ஒரு மென்பஞ்சைக் கையிலெடுத்து நம் கன்னத்தோடு உரசினாற் போன்றிருக்கும்.

கதையமைப்பிலோ, காட்சியாக்கத்திலோ பெரிதாக அடுக்குகள் இல்லாமல் போனாலும், படம் பார்த்துப் பல நாட்கள் ஆனபின்னும் நம் நெஞ்சுக்குள் அது மீண்டும் மீண்டும் சுழன்றாடும்.

மிக முக்கியமாக, இந்த உலகின் எந்த மொழியிலும் ‘ரீமேக்’ செய்யலாம் என்றளவுக்கு எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கும். ‘பொம்மை’யும் அதற்கு விதிவிலக்கல்ல.

ராதாமோகன் படங்களில் ஒரு உதவி இயக்குனர் அல்லது திரையுலகோடு சம்பந்தப்பட்ட ஒரு நபர் இருப்பார்.

இதிலும் அப்படியொரு பாத்திரம் உண்டு. நாயகியை மிகக்கண்ணியமாகத் திரையில் காட்டுவார். அதுவும் கூட தொடர்ந்திருக்கிறது.

அவரது படங்களில் வன்முறை ரொம்பவே குறைவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சுவற்றில் பந்தை எறிவது போல அடியாட்களை வீசும் வழக்கம் அறவே தென்படாது. ‘பொம்மை’யில் அது மட்டும் மீறப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தின் அடிநாதமாகவும் அதுவே இருக்கிறது.

இந்த படத்தின் மாபெரும் பலவீனம் இதன் கிளைமேக்ஸ். அதேபோல, சிறுவயதில் காணாமல் போன தோழி என்னவானாள் என்பதை எந்த இடத்திலும் சொல்லாமல் விட்டது நம் மனதை அரிக்கிறது.

அவற்றைச் சரிப்படுத்தியிருந்தால், ஒரு நேர்த்தியான காதல் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

உண்மையைச் சொன்னால், இந்த படத்தில் வரும் காதலே கொஞ்சம் பேண்டஸியானது.

அப்படியிருக்க, பின்பாதியை முழுக்கவே பேண்டஸியாக மாற்றிக் கதை சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டு, யதார்த்தத்தைப் புகுத்துகிறேன் என்று இயக்குனர் தடம் மாறியது கவிழ்ந்த ரயிலில் மாட்டிக்கொண்ட உணர்வை உருவாக்குகிறது. அதைச் செய்திருந்தால், இந்த ‘பொம்மை’யை உலகமே கொஞ்சிக் கொண்டாடியிருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like