சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!

பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு

நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர்.

ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பற்றிய அனுபவத்தை அழகிய பதிவாக எழுதியுள்ளார்.

“அது ஏன் தோன்றியது என்று தெரியவில்லை! இன்று காலை நேரடியாக கடற்கரை சென்று சூரியனை வணங்கி விட்டு வரலாம் என்று முடிவு செய்தேன்!

ஐந்தரை மணிக்கு ஓஎம்ஆர் சோழிங்கநல்லூரில் தொடங்கிய என் இரு சக்கர வாகனப் பயணம் சரியாக 5:55 மணிக்கு உதயசூரியன் கடலில் இருந்து முகிழ்த்து எழுந்து நாம் காணும் வானில் மேலேறி வரும் வேளையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்தேன்!

ஐந்தரை மணிக்கு கடற்கரை நோக்கி கிளம்பினேன்! இங்கிருந்து சரியாக 13 கிலோமீட்டர்கள் தொலைவு! பயண நேரம் 32 நிமிடம் காட்டியது!

போகும் வழியெங்கும் அதிகாலை வேளையில் வாகன நெரிசல்கள் எதுவும் இன்றி பயணம் சுகமாக இருந்தது!

ஒரு போக்குவரத்து சிக்னல் கூட என்னை தடுக்கவில்லை! வேகப்படுத்தி எனும் ‘அக்சலரேட்டர்’ கருவியை கையால் அசைக்கும் வேலைகூட அதிகம் இல்லை!

வானில் மிதப்பது போல தரையில் உருண்டு, தார்ச் சாலையில் பறந்து இரண்டு சக்கர வாகனம் அசைந்தாடி தேர் போல அமைதியாகச் சென்றது!

35 நிமிடம் போக வேண்டிய பயணம் 25 நிமிடத்திலேயே முடிந்து விட்டது! ஒருவேளை, மாலையில் ஐந்து முதல் எட்டு வரை இந்த பயணம் சென்றால் 35க்கு பதிலாக 95 நிமிடங்கள் நிச்சயம் பிடிக்கும்!

எனக்கு அந்த அலுவலக நேரத்தில் அடித்துப் பிடித்து பயணம் செய்ய வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருந்ததில்லை!

கடலோரம் சென்றதும் முதலில் நேரடியாக கடற்கரை சென்று சூரியனுடன் இணைந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். மனதில் பற்பல எண்ணங்கள் ஓடின!” என்று அவர் எழுதியுள்ளார்.

You might also like