ஜுன் 12 – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு’ என்று ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலில் குழந்தைகளின் தினசரி வாழ்க்கையை வரையறுக்கிறார் மகாகவி பாரதி.
அதுவே கல்வியும் விளையாட்டும் கேளிக்கைச் செயல்பாடுகளுமே அவர்களுக்கான உலகம் என்பதை உணர்த்துகிறது.
ஆனால், பல குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட வாழ்க்கையே அமைவதில்லை. படிப்பிலும் ஆர்வமற்று, விளையாடுவதற்கும் இடமற்று, சரியான கேளிக்கைகளும் அமையாமல் மொபைலும் டிவியும் கதியென்று கிடக்கின்றனர்.
ஓரளவுக்குப் பொருளாதார, சமூகப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளே இப்படியொரு சூழலுக்கு ஆட்படும்போது, தாங்கள் உழைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று இருக்கும் பிஞ்சுகளின் மன வலியை என்னவென்று சொல்ல..?
அவ்வாறு உழைத்துச் சோர்ந்து எதிர்காலத்தையே இருண்மை வட்டத்துக்குள் அடகு வைக்கிற குழந்தைத் தொழிலாளர்கள் இன்றும் இருக்கின்றனர்.
அதீத லாபத்தை எதிர்நோக்கும் பேராசைக்காரர்களால் அவர்களது ஏழ்மைச்சூழல் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகக் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், இன்றும் அது முழுமையாக ஒழிந்தபாடில்லை.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 315 குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் தெருவோரச் சிறார்கள் மீட்டெடுக்கப்பட்ட தகவல் அதை உறுதிப்படுத்துகிறது.
நூற்றாண்டுகளாகத் தொடரும் சிக்கல்!
வளர்ந்து வருகிற, ஏழ்மையான மூன்றாம் உலக நாடுகளின் மிக முக்கியப் பிரச்சனையாக இருப்பது குழந்தைத் தொழிலாளர் பயன்பாடு.
பதினான்கு வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது.
அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் உலகம் முழுக்க மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இது குறித்த விழிப்புணர்வை முடுக்கி வருகிறது.
குழந்தைகளிடம் இருந்து குழந்தைத்தன்மையைப் பறிக்கிற, அவர்களது திறனையும் மதிப்பையும் சீர்குலைக்கிற, அவர்களது உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியைச் சிதைக்கிற பணிகளில் ஈடுபடுத்தப்படும்போது அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாகக் கருத வேண்டும்.
அப்படிப்பட்ட பணிகளால் அவர்களது எதிர்காலமே சுக்குநூறாகும். சமூக வாழ்விலும் அறம் சார்ந்த கோட்பாடுகளிலும் அபாயகரமான நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
இயல்பாக வளரும் குழந்தைகளின் எதிர்காலத்தோடு ஒப்பிடுகையில், அவர்கள் பல மடங்கு சரிவைச் சந்திக்க நேரிடும். இந்தக் காரணங்களாலேயே இக்கொடுமையை மிக வலுவாக எதிர்க்க வேண்டியுள்ளது.
கூடிப் பழகுதல் வேண்டாமா?
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதால் என்ன வந்துவிடப் போகிறது என்ற கேள்வி சிலரிடம் இருக்கலாம். நிச்சயமாக அந்த பிஞ்சுக் கரங்களால் கடுமையான பணிகளை எதிர்கொள்ள முடியாது.
அது அபாயமானது என்ற புரிதல் கூட அவர்களிடம் இருக்காது. அனைத்துக்கும் மேலாகப் பணி, பணம், ஓய்வின்மை, உழைப்பு என்று குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வேறொரு உலகம் இருப்பதே அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும். குறிப்பாக, பள்ளிப் பருவ வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும்.
பள்ளிக்குச் செல்வது கல்வி கற்கத்தான். அதை மறுப்பதற்கில்லை. அதைவிட மேலானதொரு காரியம் அங்கு நிகழும்.
அதுதான் கூடிப் பழகுதல். நம்மைப் போலிருக்கும் குழந்தைகள் எப்படியெல்லாம் பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர், செயல்படுகின்றனர் என்பதிலிருந்து ஒரு கற்றல் ஆரம்பமாகும்.
எந்நேரமும் வகுப்பறைக்குள் அடைந்து கிடப்பதால், அந்த அளவு குறையலாம். ஆனால், நிச்சயமாக இல்லாமல் போகாது.
ஏனென்றால், அந்த கற்றல்தான் இந்த சமூகத்தில் மற்றவர்களோடு எப்படி ஒத்திசைந்து வாழ வேண்டுமென்பதைச் சொல்லித் தரும். அந்தப் பருவம் தரும் மகிழ்ச்சி வாழ்வு முழுமைக்கும் நமக்கு வழிகாட்டும்.
இன்றும் பள்ளி, கல்லூரி வாழ்வைத் தவறவிட்ட பல பிரபலங்கள் அதனை எண்ணி வருந்துவதைக் காண முடியும்.
நம்மைப் போல பால்ய காலம் வேறொவருக்கும் அமைந்துவிடக் கூடாது என்ற அக்கறை அவர்களது பேச்சிலும் செயல்பாட்டிலும் தொனிக்கும். அதுவே, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டியதை உணர்த்தும்.
எங்கும் பார்க்கலாம்!
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அப்போதைய குழந்தைகள் தொகையில் இது 3.9% ஆகும்.
சரி, குழந்தைத் தொழிலாளர்களை எப்படி அடையாளம் காண்பது? நம் கண்களுக்குப் புலப்படாத செங்கல் சூளைகளிலும் கல் குவாரிகளிலும் ஆபத்தான பணிகளைக் கொண்ட ஆலைகளிலும் சுரங்கங்களிலும் தான் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்றில்லை.
அன்றாடம் கடந்து செல்லும் சாலைகளில் ஏதாவது ஒரு விற்பனையில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதைப் பார்க்கலாம்; ஹோட்டல்களிலும் ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்களிலும் கட்டுமானத் தளங்களிலும் வீட்டு வேலைகளிலும் கூட அவர்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
அதற்காகத் தங்களது பள்ளி வாழ்வை அவர்கள் தியாகம் செய்திருப்பார்கள். அவர்களது சம்பளப் பணம் குடும்ப வருமானத்தில் 25 – 45% வரையிலான பங்களிப்பைக் கொண்டிருக்கும்.
நிச்சயமாக அவர்களனைவருமே மீட்டெடுக்கப்பட்டு நல்லதொரு கல்வி வாய்ப்பைப் பெற வேண்டியவர்கள் தான்.
1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மட்டும் 17 இடங்களில் அவர்களது புனர்வாழ்வுக்கான கல்விநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதன் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முறையான கல்வியைப் பெற்றிருக்கின்றனர். நாடு முழுக்கக் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்காக அமையலாம்.
இது தவிர்த்துப் பல மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் தமக்கான வெளிச்சத்தைக் கண்ட பல குழந்தைகள் இந்த அபாயத்தைத் தாண்டி வந்திருப்பார்கள்.
இன்றைய யூடியூப் உலகில் குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.
பகுதி நேரமாகப் பணியாற்றும் குழந்தைகளை எப்படி இதில் வகைப்படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம்.
பள்ளிப் படிப்புக்கு நடுவே குறைந்தபட்சமாகச் சில வேலைகளைச் செய்து காசு சம்பாதிக்கும் சிறார்களும் உண்டு. வீடுகளிலும் குடும்ப வணிகத்திலும் ஈடுபடும் குழந்தைகளும் கூட உண்டு.
சினிமா, தொலைக்காட்சி உலகில் குழந்தை நட்சத்திரங்களாக மின்னுபவர்களும் கூட அதை ஒரு தொழிலாக மேற்கொண்டிருப்பவர்கள்தான். கட்டாயமோ, வற்புறுத்தலோ இல்லாமல் அவர்கள் அவ்வேலைகளைச் செய்யும்போது அவை விதிவிலக்காகக் கருதப்படுகின்றன.
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தவும் பின்பற்றவும், ஜுன் 12ஆம் தேதியன்று ‘உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. அது தொடர்பான விழிப்புணர்வும் பரப்பப்படுகிறது.
கொரோனா ஏற்படுத்திய பாதகம்!
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. பலர் வேலைவாய்ப்புகளை இழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
சமூக, பொருளாதார அளவில் ஏற்பட்ட சரிவானது அக்குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளையும் பாதித்துள்ளது. வறுமையின் காரணமாகப் பல குழந்தைகள் பள்ளிக்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அந்த எண்ணிக்கை குறைவென்றபோதும், அந்தக் குழந்தைகள் எல்லாம் பணிகளுக்குச் சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது.
பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதாமல் தவிர்த்தோர் எண்ணிக்கை கணிசம் என்ற நிலையில், கல்லூரிப் படிப்பினை மேற்கொள்ளாமல் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் சமீபமாக அதிகரித்துள்ளது.
அந்தக் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் பொருளாதாரரீதியாக வலுப்படுத்தும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு.
சமீபகாலமாக வறுமையையும் குடும்பச்சூழலையும் தாண்டி படிப்பின் மீதான ஆர்வமின்மையும் கூட கல்வி இடைநிற்றலுக்குக் காரணமாகின்றன.
எல்லாக் காலத்திலும் இப்படிப்பட்ட மனோபாவம் உண்டு என்றபோதும் தற்போது இதன் வீச்சு அதிகமாகியிருக்கிறது. அதனை இல்லாமல் ஆக்கக் கல்வியின் மகத்துவத்தை இளந்தளிர்களிடம் உணர்த்துவது அவசியம்.
‘பருவத்தே பயிர் செய்’ என்பது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கை முறை.
குழந்தைப் பருவம் கற்பதற்கானது என்பதை அறிந்தால், குழந்தைகளைத் தொழிலாளர்களாக அணுக மனம் இடம் தராது.
அதனைப் புறந்தள்ளிச் செயல்படுபவர்களை அறத்தின் வழி நிறுத்துவது நம் ஒவ்வொருவரது கடமை.
குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவோரை, அவர்கள் மூலமாகத் தயாரிக்கப்படுபவற்றைப் புறக்கணிப்பது நமது குறைந்தபட்ச எதிர்ப்பாக அமையும்!
– உதய் பாடகலிங்கம்