உதிரம் வளர்த்த மலைநாடு!

மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல் நூல் விமர்சனம்

தான் சுவைத்ததை, ரசித்ததை, உணர்ந்த பெரும்பிரவாகத்தைப் பிறரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது பெருங்குணம்.

அது பலரும் அறியாமல் விடுபட்ட நிலைக்கு ஆளாகும்போது, உரக்கச் சொல்லி கவனத்தை ஈர்ப்பது அரியதொரு விஷயம்.

மு.நித்தியானந்தன் எழுத்தில் உருவாகியிருக்கும் ‘மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்’ எனும் விமர்சன நூலையும் அவ்வகையில் சேர்க்கலாம்.

வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில், தான் எதிர்கொண்ட எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள் மீதான அபிப்ராயங்களை விருப்பு வெறுப்பின்றி வெளிப்படுத்திய விதத்தில் கவனத்திற்குரியதாகிறது இந்நூல்.

எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நிகழ்ந்த தகவல்களை, செய்திகளை வரலாறாக அறிய நேரும்போது, அதனை ஆக்கியவர்கள் ஆதிக்க பீடங்களில் இருந்தவர்களா அல்லது அவர்களது உத்தரவுகளை எதிர்கொண்டு ஒடுங்கிய உடல்மொழியுடன் திரிந்தவர்களா என்ற கேள்வி எழும்.

அப்படியொரு பார்வையை வீசினால், பல வரலாறுகள் ஒருசார்பாக எழுதப்பட்டவையாகத் தெரியும்.

மு.நித்தியானந்தன்

சாமான்யர்களின் பிறப்பும் வாழ்வும் ஒரு பொருட்டாகக் கருதப்படாத சூழலே இன்றும் நிலவுகிறது எனும்போது, பசுமை படந்த பெரும் மலைப்பரப்புகளே சிறைச்சாலைகளாக மாறிக் கிடந்த நூற்றாண்டு கால அவலங்களாக விரிகிறது பலரது அனுபவங்கள்.

அவை மலையகத்தைப் பற்றிய வெறும் தகவல்களாக மட்டுமின்றிப் புனைவுகளாக மாறுகிறபோது எத்தகைய இலக்கியத் தரத்தை எட்டுகின்றன என்று இந்த நூலில் விவரித்திருக்கிறார் மு.நித்தியானந்தன்.

மலையகத்தைப் பற்றியோ, அங்கு வாழ்ந்த தலைமுறைகள் பற்றியோ அறியாதவரும் கூட, அவர் சொல்லும் தகவல்களை எதிர்கொண்டது வியப்பின் உச்சத்தை அடைவார்.

இலக்கியவாதி எனும் அடையாளம்!

எழுத்தாளன் என்பவன் தான் சார்ந்த சமூகத்தைப் பிரதிபலிப்பவன் என்பதால், வெறுமனே எழுத்து சார்ந்து மட்டும் இயங்கிவிட முடியாது.

சமூகத்திற்குப் பங்களிக்கும் வகையிலான அவர்களது செயல்பாடுகளே, எதிர்காலத் தலைமுறையிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனைக் கோடிட்டுக் காட்டுவதோடு, ஒவ்வொரு கலைஞரையும், படைப்புகளையும் அந்த அளவுகோல் கொண்டே நோக்குகிறார் ஆசிரியர்.

1940-ல் பலரும் அறியாமல் ஆங்கிலக்கவியாகத் திகழ்ந்த சி.வி.வேலுப்பிள்ளையின் பெருமையினைச் சொல்கிறபோது, அந்த தலைமுறையின் மாபெரும் அரசியல் ஆளுமையாகவும் அவர் திகழ்ந்ததைச் சொல்கிறார்.

தனக்கு முந்தைய, சமகாலத்திய, எதிர்காலத்திற்கான மலையக அரசியல் தலைவர்கள், தளபதிகளாக இருந்தவர்கள் குறித்து வேலுப்பிள்ளை வரைந்த எழுத்துச் சித்திரம் காலத்தோடு இயைந்தது என்று பெருமிதம் கொள்கிறார்.

ஒரேநேரத்தில் வெவ்வேறு துறைகளில் சிகரம் தொட்டாலும், அவை முழுமையான வெற்றிகளாக வெளிப்படுத்தப்படவில்லை என்கிறார் நித்தியானந்தன்.

கவிதை, நாட்டுப்புறப் பாடல்கள், நாடகம், சிறுகதை, நாவல் என்று வெவ்வேறு வகை எழுத்துகளில் முத்திரைப் படைப்புகளைத் தந்த பல ஜாம்பவான்களுக்கும் இது பொருந்தும்.

அதேபோல, பல எழுத்தாளர்கள் மிகக்குறைந்த பக்கங்களில் தங்கள் படைப்புகளை வெளியிட்டமைக்குப் பொருளாதார வளம் இல்லாமையே காரணம் என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.

என்.எஸ்.எம்.ராமையாவை மலையக இலக்கியத்தின் சிற்பி என்று கொண்டாடும் வேளையில், ஒரு இரும்புக்கடையில் அந்தக் கலைஞன் பணியாற்றிய விதம் கண்டு தான் மனம் நொந்த அனுபவத்தையும் பகிர்கிறார்.

வாழும் காலத்தில் எந்தவொரு கலைஞரையும் இந்த சமூகம் கொண்டாடுவதே இல்லை என்ற சிந்தனைதான் அப்போது நினைவுக்கு வரும்.

அவர் மட்டுமல்ல, பல கட்டுரைகளில் அந்த மாந்தர்களோடு கொண்டிருந்த நட்பும், அவை முகிழ்த்த சூழலும் கூட ஆசிரியரால் விளக்கப்படுகிறது.

தொடர்ந்து இர.சிவலிங்கம், திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப், பன்னீர்செல்வம் என்று மலையகத்தில் தொடர்ந்து தம் வாழ்வுக்காக ஒரு பணியைச் செய்து, இலக்கிய வேட்கையையும் தணித்து, தனித்துவமானவர்களாக தம்மை நிறுவிக்கொண்ட சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகளை விமர்சிக்கிறது இந்நூல்.

அதேநேரத்தில் ஒரு சில படைப்புகளோடு தமது எழுத்தை நிறுத்திக் கொண்டவர்களை, அதனைத் தொடர முடியாத வாழ்வுச் சிக்கல்களை, அவரவர் நிலையில் நின்று பேசுகிறது.

மலையகத்தில் இருந்து தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தங்கவேலு என்ற குறிஞ்சித் தங்கத்தின் சிறுகதைத் தொகுப்பைச் சிலாகிக்கும் நித்தியானந்தன், மலையகத்தை விட்டுச் சென்ற எத்தனை பேர் இதேபோல தம் எழுத்து வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதை எண்ணி வருந்துவார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசு கொண்டுவந்த சட்டதிட்டத்தினால் எத்தனையோ பேர் மலையகத்தைவிட்டு தமிழ்நாட்டுக்குப் பெயர்ந்தபோதும் சுகமான வாழ்க்கையைப் பெறவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

மலையகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் வெவ்வேறு கட்சி சார்புடன் இருந்தநிலையில், அதில் இணைந்து போராடியவர்களின் பணிகளை எந்தப் பாகுபாடும் இல்லாமல் எடுத்துரைக்கிறார் நித்தியானந்தன்.

குறிப்பிட்ட ஆளுமையைப் பற்றிய தனது கருத்துகளைத் தெரிவிப்பதோடு, அவரது கற்பனைகளுக்கு இணையான படைப்புகளைத் தந்த பிற கலைஞர்களைப் பற்றியும் கூறுகிறார்.

சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு உதவியவர்களை, அவர் தொடர்பான சம்பவங்களை நினைவு கூர்கிறார்.

அதனால், குறிப்பிட்ட நூல் குறித்த அல்லது அந்த எழுத்தாளர் குறித்த விமர்சனமாக இருந்தாலும் கூட, அவற்றில் வரலாற்றின் சில பக்கங்களை நம்மால் காண முடிகிறது.

பி.ஆர்.பெரியசாமி, தமிழோவியன் போன்றோரின் கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் திராவிடச் சிந்தனைகளையும், அவற்றை உரக்கப் பேசிய தமிழகத் தலைவர்கள் பலரை மலையகத் தோட்டங்களுக்கு அழைத்து வந்தது குறித்தும் சொல்கிறார் நித்தியானந்தன்.

மலைநாட்டில் வந்து பணியாற்றி, தொழிற்சங்கத்தில் இணைந்து போராடி, பின்னர் மீண்டும் தமிழ்நாட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்ட முஹையதீன் அப்துல் காதரின் வாரிசுகளிடத்தில் அவரது நூலைப் பெற்றுப் படித்த பாங்கினை இந்த நூலில் விவரிக்கையில் ஆச்சர்யம் பெருகுகிறது.

சா.காந்திமணி என்ற இயற்பெயர் கொண்ட மல்லிகைக்காதலன் எனும் எழுத்தாளரின் கதைகள் இப்போது எங்கேயுமே கிடைக்கப் பெறுவதில்லை. அக்கலைஞரும் அகாலமாக மரணத்தைத் தழுவிவிட்டார்.

அடுத்தடுத்து அத்தகவல்களைச் சொல்லிவிட்டு, அந்த கதைகளை என்னிடம் வைத்திருக்கவில்லையே என்ற புலம்பலையும் சேர்த்தளிக்கிறார்.

கதைகள் இல்லாதபோதும், அவற்றைப் படித்தபோது நித்தியானந்தன் மனதில் எழுந்த சிந்தனைகள் மட்டுமே தற்போது நமக்குக் கிடைக்கின்றன.

சாரல் நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நூலானது, புசல்லாவை ஸ்டெலென்பேர்க் தோட்டத்துரை போப் கொலையான சம்பவத்தை மையமாகக் கொண்டது.

அவ்வழக்கு விசாரணை நடந்து ஓராண்டுக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதன்மையானவர்களான வீராசாமியும் வேலாயுதமும் தூக்கில் இடப்பட்டனர்.

அந்த வழக்கின் சாராம்சத்தை வைத்துக்கொண்டு சாரல்நாடன் ஒரு நாவலைப் படைத்திருக்கிறார்.

ஆனால், அதில் உண்மைத் தகவல்களுக்கும் அவர் குறிப்பிடும் பெயர், காலம், இடம் அனைத்தும் முற்றிலுமாக மாறியிருக்கின்றன என்று அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

வரலாற்றுப் புனைவு என்றாலும் துல்லியம் அவசியம் என்பதற்கு மேற்கத்திய உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார். அந்த வழக்கின் சாட்சியங்களை, நீதியரசர்கள் தந்த குறிப்புகளை அப்படியே தமிழில் தந்திருக்கிறார்.

ஒரு விதையை நட்டால், அது முளைத்துப் பல திசைகளில் கிளைக்கும் விருட்சமாவது போல, இந்த எழுத்துப் போக்கு அமைந்திருப்பது சிலருக்கு அயர்ச்சியைத் தரலாம்.

அதேநேரத்தில், ஒரு தகவலை 360 டிகிரியில் நோக்கும் ஆசிரியரின் பார்வையை ரொம்பவே அரிதானது என்பதையும் நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

நூலின் தலைப்புக்கேற்ப, மலையக இலக்கியமே அம்மண்ணின் வாழ்ந்து மடிந்த முந்தைய தலைமுறையின், இன்றைய மனிதர்களின் துயரங்களையும் அவை இலக்கியக் கருப்பொருளாக ஆனது பற்றியும் பேசுகிறது.

பல கட்டுரைகளில், குறிப்பிட்ட நூலைப் பெற உதவிகரமாக இருந்த ஹெச்.ஹெச்.விக்கிரமசிங்கேவுக்கு நன்றி சொல்கிறார்.

பலவற்றில் நித்தியானந்தன் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகள், தமிழ்நாட்டு எழுத்துலகில் இன்று புழக்கத்தில் இல்லை.

ஆனாலும், அவை பயன்படுத்தப்பட்ட இடங்களைக் கொண்டு அவற்றின் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

மிகச்சில இடங்களில் தென்படும் தவறுகள் இன்னும் கவனமாக மெய்ப்பு பார்த்திருக்கலாமே என்று எண்ண வைத்திருக்கிறது.

வெகு சில இடங்களில் சிற்சில தகவல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருக்கின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை, அளவில் பெரிய கால வெளியில் மிகக்குறைவான படைப்புகளே மலையகத்தில் இருந்து வந்திருப்பதைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டியிருக்கிறார் நித்தியானந்தன்.

அந்த படைப்புகள் வேண்டிய தீர்வுகள் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை என்பதையும் தெளிவுறச் சொல்லியிருக்கிறார்.

ஒரு நூலகத்தில் மலையக இலக்கியத்தில் தனக்கு வேண்டியதைப் பெற முனையும் ஒருவருக்கு, இந்நூல் ஒரு வழிகாட்டியாகவும் அமையலாம்.

அந்தக் கண்ணியைப் பிடித்துக்கொண்டு எதிர்காலத் தலைமுறை மலையக இலக்கியத்தை அடுத்த உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

நூலாசிரியரின் விமர்சனங்கள் வழியே நாம் பெறும் சேதியும் கூட அதுதான் எனத் தோன்றுகிறது.

****

மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்

மு.நித்தியானந்தன்.
எழிலினி பதிப்பகம்.
276 பக்கங்கள்.

– உதய் பாடகலிங்கம்

You might also like