விமானம் – தரை இறங்கும் வானம்!

ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவமே தனி. அதுவும் அந்த படம் குறித்த எந்த தகவலையும் அறிய முற்படாமல், பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்குள் நுழைவதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவதற்கு ஒப்பானது. ஆனால், அதிலும் சில முத்தான அனுபவங்கள் கிடைக்கும்.

சமுத்திரக்கனி ஒரு தெலுங்குப் படத்தில் கதை நாயகனாக நடித்திருக்கிறார் என்பதற்காக மட்டுமே நம் கவனத்தை ஈர்த்த ‘விமானம்’ அப்படியொரு திரைப்படம். இதன் தமிழ் பதிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

விமானக் காதல்!

பெரிதாக வசதிகள் இல்லாத கட்டணக் கழிப்பறை ஒன்றை நடத்தி வருகிறார் வீரய்யா (சமுத்திரக்கனி). அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவரது மகன் ராஜு (மாஸ்டர் துருவ்).

நன்றாகப் படிக்கும் இயல்புள்ள ராஜுவுக்கு விமானம் என்றால் உயிர்.

எந்நேரமும் விமானம் எப்படியிருக்கும்? அதில் பயணிப்பவர்கள், பணியாற்றுபவர்கள், அதோடு சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்வார்கள்? விமானத்தை ஓட்ட என்ன படிக்க வேண்டும்? இப்படி நிறைய கேள்விகள் அவருக்குள் ஓடும்.

அந்தக் கேள்விகளுக்கு வீரய்யாவினால் பதில் சொல்ல முடியாது.

அதனால், ஒருகட்டத்தில் விமானம் தொடர்பான ஆசையையே மகன் துறந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் எண்ணத் தொடங்குகிறார்.

அந்த நேரத்தில், ஒரு சைனிக் பள்ளியில் பயிலும் வாய்ப்பு ராஜுவுக்குக் கிடைக்கிறது. அதில் பயில்வதால், நேரடியாக விமானப்படையில் சேர முடியும்.

தாயில்லாப் பிள்ளையாக வளரும் ராஜுவை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதே வீரய்யாவின் ஆசை.

அது மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒடுங்கிய நிலையில் இருக்கும் தனது நிலைமை குழந்தைக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறார். சைனிக் பள்ளி படிப்பு அவருக்கு வரமாகப் படுகிறது.

இந்த நிலையில், வீரய்யாவின் எதிர்கால ஆசையில் இடி விழுகிறது. லூக்கீமியா நோயால் அவதிப்படும் ராஜு, இன்னும் சில நாட்களே உயிரோடு இருப்பார் என்ற தகவல் தெரிய வருகிறது.

ராஜுவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களும் அந்த உண்மையைத் தெரிந்துவிடக் கூடாது என்றெண்ணும் வீரய்யா, தன் மகனின் விமானப் பயண ஆசையை உடனடியாக நிறைவேற்ற விரும்புகிறார். ஆனால், அது ஈடேறாத வகையில் பல தடங்கல்கள் வருகின்றன.

அவற்றை எதிர்கொண்டு வீரய்யா தனது மகனின் ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் ‘விமானம்’ படத்தின் கிளைமேக்ஸ்.

ஒரு ஏழைச் சிறுவன் விமானம் மீது கொண்டிருக்கும் காதலே இப்படத்தின் அடிப்படை. அதனை மிக நேர்த்தியாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவபிரசாத் யனலா.

அனசுயாவின் கவர்ச்சி!

அப்பா, சாட்டை போன்ற படங்களில் கம்பீரமான நாயகனாக சமுத்திரக்கனியைப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு விமானம் பெரிதாக ஆச்சர்யத்தைத் தராது.

அதேநேரத்தில், அவரை ரசித்துப் பாராட்டும் அளவுக்கே படத்தில் வீரய்யா பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ராஜுவாக வரும் மாஸ்டர் துருவன் நடிப்பில் குறைகள் ஏதும் தென்படவில்லை. ஆழ்ந்த அமைதியும் சோகமும் அவரது தோற்றத்தில் நிரம்பியிருப்பது பாத்திர வார்ப்பைப் பலப்படுத்தியிருக்கிறது.

ஆட்டோ டிரைவர் டேனியலாக வரும் தன்ராஜ் கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டியிருக்கிறார். அவரது மகனாக வரும் சிறுவனும் அருமையாக நடித்துள்ளார்.

செருப்பு தைப்பவராக வரும் ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் விலைமாதுவாக வரும் அனசுயா பரத்வாஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிளுகிளுப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

ஆனால், அவற்றைக் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தாமல் மனதை உருக்கும் காட்சிகளாகவும் மாற்றியிருக்கிறார் இயக்குனர்.

மொட்டை ராஜேந்திரன் இரண்டு காட்சிகளில் தோன்றியிருக்கிறார். இறுதிக் காட்சியில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

இவர்கள் தவிர்த்து சிறிதும் பெரிதுமாக ஒரு டஜன் பாத்திரங்கள் திரையில் வந்து போகின்றன.

‘விமானம்’ படத்தின் மிகப்பெரிய பலம் காஸ்டிங் தான். எந்த காட்சியிலும் கலைஞர்களின் நடிப்பு துருத்தலாகத் தெரியவில்லை.

சரண் அர்ஜுனின் பின்னணி இசை இப்படத்தின் இன்னொரு பலம். பல காட்சிகளில் அவரது இசையே நம் கண்களின் திரளும் கண்ணீரைத் தரையில் உருட்டிவிடுகிறது. பாடல்கள் ஓகே ரகம்.

மார்த்தாண்ட் கே.வெங்கடேஷின் படத்தொகுப்பில் சீரான கதை சொல்லலை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

ஜே.கே.மூர்த்தியின் கலை இயக்கத்தில் கழிப்பறை செட் சட்டென்று நம் கவனம் ஈர்க்கிறது.

பிரபாகர் எழுதிய வசனங்கள் வெகு சாதாரணமாக இருப்பதோடு, நம் மனதில் லபக்கென்று ஒட்டிக்கொள்வதாகவும் உள்ளன.

இயக்குனர் சிவ பிரசாத் யனலா, ஒரு நாடகத்தனமான கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதேநேரத்தில், திரையில் புத்துணர்வைப் பெறும் விதமான காட்சியாக்கத்தைத் தந்திருக்கிறார். ஆனால், பல இடங்களில் சோகம் மட்டும் ‘ஓவர்டோஸ்’ ஆக உள்ளது.

ஏன் இவ்வளவு சோகம்?

தாயில்லாப் பிள்ளை, எல்லோருக்கும் நல்லது செய்யும் நாயகன், ஒரு விலைமாது, அவரை ஒருதலையாகக் காதலிக்கும் ஒரு மனிதன் என்று ‘விமானம்’ படத்தில் இடம்பெற்ற பல பாத்திரங்களை நாம் ஏற்கனவே பார்த்த உணர்வு உண்டாகிறது.

உண்மையைச் சொல்வதானால், அவை அனைத்தும் ‘டெம்ப்ளேட்’ ரகம். அது மட்டுமே கொஞ்சம் போரடிக்கும் அம்சம். ஆனால், அதை திரைக்கதை நகர்வு ஈடுகட்டுகிறது.

துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பள்ளி ஆசிரியர்களுக்குத் தரப்படவில்லை.

அதேபோல சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் பணியாற்றும் இடத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கோ, மாநகராட்சிப் பணியாளர்களுக்கோ பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம்.

ராகுல் ராமகிருஷ்ணா – அனசுயா சம்பந்தப்பட்ட காட்சிகளில் கவர்ச்சி தளும்புவதும், படத்தின் கிளைமேக்ஸும் குழந்தைகளோடு படம் பார்க்க வரும் பெற்றோரை இடையூறுகளுக்கு ஆளாக்கலாம். படத்தின் மைனஸ்களில் அவை நிச்சயம் சேரும்.

‘விமானம்’ படத்தின் ஆகப்பெரிய பலவீனம் அதீத சோகத்தில் தோய்க்கப்பட்ட காட்சிகள். சமீபகாலத்தில் இவ்வளவு சோகமானதொரு படத்தைக் காணவில்லை.

போலவே, இந்த படத்தின் கிளைமேக்ஸும் பலருக்குப் பிடிக்காமல் போகலாம். அந்தக் குறையச் சரி செய்துகொள்ளும் வகையில், சாதாரண மக்களுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காட்டிக் கருத்துகளைப் பெற்றிருக்கலாம்.

எழுத்தாக்கத்திலும் பாத்திரப் படைப்பிலும் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், நல்லதொரு காட்சியனுபவத்தைத் தர வேண்டுமென்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் இயக்குனர் சிவ பிரசாத் யனலா.

அதனால், பல இடங்களில் நம் கண்களில் இருந்து நீர் வழிகிறது.

அந்த வகையில், நீண்ட நாட்கள் கழித்து ஒரு கண்ணீர் காவியத்தைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது.

விமானப் பயணத்தில் விண் நோக்கி எழுவதும், முடிவில் தரை இறங்குவதும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டிய விஷயங்கள்.

‘விமானம்’ திரைக்கதையைப் பொறுத்தவரை வானமே தரை இறங்கி வருவதுதான் படத்தின் அடிப்படை அம்சம்.

அதனைக் கனகச்சிதமாகக் கையாண்டதற்கு வாழ்த்துகள்!

  • உதய் பாடகலிங்கம்

You might also like