இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன.
பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான படங்களைத் தேர்வு செய்து வருகிறார்.
கொஞ்சம் விஜய்யும் சிவகார்த்திகேயனும் கலந்த கலவையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.
அதன் ஒருபகுதியாக குழந்தைகளையும் பெரியோர்களையும் ஒருசேரக் கவரும் வகையில் ‘வீரன்’ படத்தில் தோன்றியிருக்கிறார்.
சரி, படம் எப்படி இருக்கிறது?
ஒரு வீரனின் கதை!
பொள்ளாச்சி அருகேயுள்ள வீரனூரைச் சேர்ந்தவர் குமரன். அவரது தோழி செல்வி, தோழன் சக்கரை.
பத்தாம் வகுப்பு பயிலும் மூவரும், ஒருநாள் பள்ளியில் இருந்து வீடு திரும்புகின்றனர்.
வரும் வழியில், வீரன் கோயில் அருகே குமரன் மீது திடீரென்று இடி விழுகிறது (இத்தனைக்கும் மழை பெய்யும் அறிகுறி துளி கூட இல்லை).
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும், குமரன் இயல்பு நிலைக்குத் திரும்புவாரா என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அதையடுத்து, வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் குமரனை அவரது சகோதரி சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, அவரிடம் சிறப்புச் சக்திகள் இருப்பது தெரிய வருகிறது.
சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் வீரனூரை நினைவுபடுத்தும் விதமாக ஒரு கனவு காண்கிறார் குமரன் (ஹிப்ஹாப் ஆதி).
அது நிகழ்ந்தால், அந்த ஊருக்குப் பெரும்பாதிப்பு ஏற்படும். அதனால், அதைத் தடுத்து நிறுத்த வீரனூர் திரும்புகிறார்.
வந்த கையோடு நேராக சக்கரையையும் (சசி செல்வராஜ்) செல்வியையும் (ஆதிரா ராஜ்) பார்க்கச் செல்கிறார். அவர்களிடம் வீரனூருக்கு ஆபத்து வரப்போவதாகச் சொல்கிறார்.
அப்போதுதான், லேசர் கேபிள் வழியே மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் திட்டத்திற்காகச் சிலர் தங்கள் நிலங்களை விற்ற விஷயம் தெரிய வருகிறது.
வீரன் கோயில் அமைந்துள்ள இடத்தில் மட்டுமே கேபிள் பதிக்கும் பணிகள் பாக்கி. அதற்கு, அந்தக் கோயிலை இடித்தாக வேண்டும்.
அதை அறிந்ததும், ஊர்க்காரர்களை ஒன்றுதிரட்டினால் அந்த திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிறார் குமரன். ஆனால், அது எப்படிச் சாத்தியம் என்று செல்வியும் சக்கரையும் திகைக்கின்றனர்.
அப்போது, இடி விழுந்தபிறகு தன்னிடம் உண்டான மின்காந்த ஆற்றல் கொண்டு, எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று ‘சாம்பிள்’ காட்டுகிறார் குமரன்.
அதன் தொடர்ச்சியாக, தனது ஹீரோயிச வேலைகளுக்கு வீரன் சாமியைக் கைகாட்டுகிறார் குமரன்.
ஊரில் இருப்பவர்கள் அதனை நம்பினார்களா? வீரன் கோயிலுக்கு ஆதரவாகக் கிளர்தெழுந்தார்களா? சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அதனைக் கண்டு சும்மாயிருந்தார்களா? என்ன நடந்தது என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
வீரன் என்ற பெயர் கொண்ட நாட்டார் தெய்வத்தை முன்னிறுத்தி, ஒரு சூப்பர்ஹீரோ தனது சாகசங்களை நடத்துகிறார் என்பதே இக்கதையின் மையம்.
மக்கள் மனதார ஏற்றுக்கொள்ளும் தெய்வ சக்தியோடு ஹீரோயிசத்தை பொருத்திப் பார்க்கும் உத்தி ‘பலே’ ரகம் தான். ஆனால் அதனைத் திரையில் சொன்ன விதம்தான் ‘ப்ப்பா..’ என்று நம்மை ‘பீல்’ பண்ண வைக்கிறது.
வீரனின் ‘வீக்னெஸ்’!
நாட்டார் தெய்வத்தை பூஜிக்கும் நாவிதர், அக்கோயிலைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆதிக்க சாதியினர், தனியார் நிறுவனங்களைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் மனோபாவம்,
எதிர்க்குரல் எழுப்புபவர்கள் மீது குத்தப்படும் ‘சமூக விரோதி’ முத்திரை, மக்களைக் காப்பாற்றத் தனது சிறப்பு சக்திகளைப் பயன்படுத்தும் நாயகன் என்று ‘வீரன்’ கதையில் பலமான அம்சங்கள் நிறைய உள்ளன. ஆனால், அதைவிட மிக அதிகமாகப் பலவீனங்கள் இருக்கின்றன.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலாவது, ஒரு ‘சூப்பர் ஹீரோ’ கதையில் நாயகனுக்கு இருக்கும் சக்தி என்னவென்பது நாம் எதிர்பாராத தருணத்தில் வெளிப்பட வேண்டும்.
இரண்டாவது, ‘தனக்கு இன்னென்ன ஆற்றல்கள் இருக்கின்றன’ என்று நாயகன் ஒருபோதும் ‘தம்பட்டம்’ அடித்துக்கொள்ளவே கூடாது.
மூன்றாவது, நாயகனின் ‘சூப்பர் பவர்’ ஊர் மக்களைக் காப்பாற்றிவிடும் என்ற திரைக்கதை நியதியை மீறிச் சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் நிறைந்திருக்க வேண்டும். இந்த பட்டியல் இன்னும் நீளும்.
ஆனால், மேற்சொன்ன மூன்றையும் ‘புஸ்’ஸென்றாக்கி இருக்கிறது ‘வீரன்’ திரைக்கதை. ‘என்கிட்ட என்னென்ன பவர் இருக்குன்னு பார்த்தியா’ என்று சிறு குழந்தைகள் முஷ்டி முறுக்குவது போலப் படம் முழுக்க ‘சொடக்கு’ போடுகிறது ஆதி ஏற்ற குமரன் பாத்திரம்.
’காந்தாரா’ போன்ற படங்களால் நாட்டார் தெய்வங்கள் மீது கொஞ்சமாக மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. அதனைக் கேலிக்கூத்து ஆக்குவது போலாக, வீரன் தோற்றத்தில் வந்து நாயகன் சாகசங்கள் செய்வதாக நீள்கிறது திரைக்கதை.
சூப்பர் ஹீரோ தகுதிகளையும் நாட்டார் தெய்வங்கள் மீதான நம்பிக்கையையும் மிக்ஸியில் அடித்து ஒரு ஜூஸ் ஆக பரிமாறலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் ஏஆர்கே சரவணன். அவரது கணக்கு அப்படியே ‘உல்டா’ ஆகியிருக்கிறது.
சூப்பர் பவர் தன்னிடம் இருப்பதைச் சிலாகித்துப் பேசும் நாயகன், அதனை அறிவியல்பூர்வமாகப் பார்ப்பதாகச் சொல்கிறது திரைக்கதை.
கூடவே, அவரைக் கடவுள் நம்பிக்கையே இல்லாதவராகக் காட்டுகிறது. அப்படியென்றால், அவர் வீரன் தோற்றத்தில் வருவதற்கு எவ்வளவு பலமான காரணத்தைச் சொல்லியாக வேண்டும்.
அதை விடுத்து சூப்பர் ஹீரோ காஸ்ட்யூம், கொஞ்சம் கிராபிக்ஸ், ரசிகர்களை உணர்ச்சியைத் தூண்டும் சில காட்சிகள் இருந்தாலே போதும் என்று களமிறங்கியிருப்பதை என்னவென்று சொல்வது?
பில்டப் பரிதாபங்கள்!
இளைய தலைமுறையைக் கவரும்விதமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆதி காட்டும் ஆர்வத்துக்குப் பாராட்டுகள்.
அஜித், விஜய் போன்றவற்களே ’அதீத பில்டப் ஆபத்து’ என்று இறங்கி வரும் வேளையில், அப்படியொரு திரை இருப்புக்கு ஆசைப்படுவது ஆபத்தாக முடியுமென்று ஆதியிடம் யாராவது சொன்னால் நல்லது.
சமீபகாலமாகத் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஏற்றுவரும் பாத்திரங்களையும், அதற்கான அவர்களது மெனக்கெடல்களையும் உற்றுநோக்குவது, திரையில் அவர் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதற்குப் பாடமாக அமையும்.
நாயகி ஆதிரா ராஜ் பார்க்க அழகாயிருக்கிறார்; அதீத மேக்கப்பில் இன்னும் ஜொலிக்கலாம். அதற்கேற்ற்ற திரைக்கதைகளை எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கட்டும்.
ஆதியின் நண்பராக வரும் சசி, கோவைத் தமிழில் பேசி அசத்துகிறார். காமெடி அவருக்கு நன்றாகவே வருகிறது.
அவரைப் போலவே, டிராக்டர் டிரைவராக வரும் ஜென்சன் திவாகரும் மிக எளிதாக நம்மைச் சிரிக்க வைக்கிறார்; அவரது பாத்திரத்தை இன்னும் ‘டீட்டெய்ல்’ ஆக வடிவமைத்திருக்கலாம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது தோன்றிக் கிச்சுகிச்சு மூட்டுகிறது முனீஸ்காந்த், காளி வெங்கட் கூட்டணி.
நம்மைச் சோர்வடையாமல் பார்த்துக்கொள்வதே அவர்கள் இருவரும்தான்.
இன்னும் சின்னி ஜெயந்த், போஸ் வெங்கட், நக்கலைட்ஸ் செல்லா மற்றும் சில கோவை யூடியூப் பிரபலங்கள் இப்படத்தில் தோன்றியிருக்கின்றனர்.
வில்லனாக வினய்க்குப் பெரிய வேலை இல்லை; அவரது சகோதரராக வரும் பத்ரி, அந்த வேலையைக் கவனித்துக் கொள்கிறார்.
இருவரது பாத்திரங்களையும் பலம் மிக்கதாகப் படைத்திருந்தால் ‘வீரன்’ வீறுகொண்டு எழும் காட்சிகள் நம்மைச் சுண்டியிழுத்திருக்கும்.
மழை பெய்து வடிந்தாற்போல, தீபக் மேனன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன.
திரைக்கதையில் காட்சிகளை மாற்றி அடுக்கி ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கத் தவறியிருக்கிறது பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு. நேர்க்கோட்டில் கதை சொல்ல முயன்றிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
‘ஹிப்ஹாப் தமிழா’ இசையில் பாடல்கள் சட்டென்று நம்மைக் கடந்து விடுகின்றன. அதேநேரத்தில் பின்னணி இசை நம்மை ‘ஜிவ்’வென்றாக்குகிறது.
‘மரகத நாணயம்’ மூலமாக வித்தியாசமான நகைச்சுவையைத் தந்தவர் இயக்குனர் ஏஆர்கே சரவணன். இந்த படத்திலும் கொஞ்சம் வேறுபட்ட கதை சொல்லலைக் கையாள முயன்றிருக்கிறார்.
ஆனால், பாட்டி வடை சுட்ட கதையைக் குழந்தைகளுக்குச் சொல்லும்போது பலவிதமான விளக்கங்களைச் சேர்த்தால் என்ன நிகழுமோ அது இப்படத்திலும் நிகழ்ந்திருக்கிறது. அது போதாதென்று அரைகுறையான பாத்திரப் படைப்பும் பல்லிளிக்கிறது.
சின்னி ஜெயந்த் தோன்றும் காட்சி மட்டுமே, இந்த படம் எப்படிப்பட்டது என்பதை அறிவதற்கான உதாரணம்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த படத்தை என்ன வகைமையில் அடக்க வேண்டுமென்பதை இறுதிவரை படக்குழு முடிவு செய்யவே இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
அது போதாதென்று, ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற தொனியிலமைந்த நாயக பாத்திரத்தின் செயல்பாடு நம் ‘எனர்ஜி’யை வறண்டுபோகச் செய்கிறது.
இதையெல்லாம் கொடுமையான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘வீரன்’ ஒவ்வாமையை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணம்.
நாட்டார் தெய்வங்கள் பற்றிய முன்னுரையுடன் ஆரம்பிக்கும் இந்த திரைப்படம், அவற்றைச் சிறுதெய்வங்கள் என்று வகைப்படுத்துகிறது.
அதைக் கேட்டதும், ‘தெய்வத்தில் ஏதடா பெரிது சிறிதெனும் பாகுபாடு’ என்ற கேள்வி மனதில் உடனடியாக எழுகிறது. அப்புறம் முழுப்படமும் இனிக்கவா செய்யும்?
‘ஈயம் பூசினாப்லயும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கோணும்’ என்று ஒரு படத்தில் கவுண்டமணி ‘டயலாக்’ பேசியிருப்பார்.
கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கமர்ஷியல் படம் எடுப்பவர்களுக்கு அது சாலப் பொருத்தம்.
’வீரன்’ பார்த்து முடித்தபிறகு, கவுண்டமணி பாணியில் ‘ஏன் இந்த வேலை’ என்று கேட்கத்தான் தோன்றுகிறது. அட போங்கப்பா?!
– உதய் பாடகலிங்கம்