உதயசூரியனுக்கு நூற்றாண்டு!

1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் தேதி திருக்குவளையில் உதயமானது அந்தச் சூரியன்.

50 ஆண்டுகள், தமிழக அரசியலை தன்னை நோக்கியே சுழலவிட்ட, கலைஞர் கருணாநிதி எனும் கதிரவன். இன்று (ஜுன் 3) நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

“வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்பார்கள். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது’’ என தனது சுயசரிதை நூலான ‘நெஞ்சுக்கு நீதி’யில் முன்னுரை தீட்டி இருப்பார் கலைஞர்.

உண்மை.

மழலைப் பருவத்தில் இருந்து மறையும் வரை, அவர் வாழ்க்கை, போராட்டக் களமாகவே விளங்கியது.

ஒரே இரவில் கோட்டையைப் பிடித்த கோமான் அல்ல, அவர்.

அடித் தளத்தில் இருந்து அடிமேல் அடி எடுத்து வைத்து, சுடுசொல் – அவமானங்களை தாங்கி, விசிறியடிக்கப்பட்ட புழுதிகளை எதிர்கொண்டு உச்சத்துக்கு வந்தவர் கலைஞர்.

அரசியல் தலைவர், எழுத்தாளர், நாடக நடிகர், வசனகர்த்தா, கவிஞர், மேடைப் பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என ஒரே சமயத்தில் பெருஞ்சுமை தூக்கி, மெல்ல மெல்ல உயரம் தொட்டவர்.

1949 ஆம் ஆண்டு தி.மு.க. பிறந்தபோது, அதன் பிரசாரக்குழு உறுப்பினர்களில் ஒருவராக அறிஞர் அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தனது, நீண்ட நெடிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தார், கலைஞர்.

அதன் பின் அவர் தொட்ட உயரங்கள் இவை:

1953-தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்

1957- சட்டமன்ற உறுப்பினர்

1960- தி.மு.க.பொருளாளர்

1967- பொதுப்பணித்துறை அமைச்சர்

1969- தி.மு.க. தலைவர், முதலமைச்சர்

5 முறை முதல்வர்

1957 முதல் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக 13 முறை வெற்றி பெற்ற ஒரே தலைவர் இவரே. 5 முறை முதலமைச்சராக பணியாற்றியவர்.

கலைஞரின் வெற்றிகள்

தேர்தல்களில் கலைஞர் ஈட்டிய வெற்றிகள் மகத்தானவை. மலைக்க வைப்பவை.

1984 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மட்டும் போட்டியிடவில்லை.

அந்த ஆண்டு நீங்கலாக 1957 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு, அனைத்திலும் வென்று வரலாறு படைத்தவர்.

தமிழகத்தின் ‘தலை’ முதன் முதலில் தேர்தலில் நின்றது – குளித்தலையில் (1957) அந்தத் தேர்தலில் 8, 290 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசை வீழ்த்தினார்.

அதிக பட்சமாக சேப்பாக்கம் தொகுதியில் மூன்று முறை நின்றுள்ளார்.

கடைசியாக போட்டியிட்டது திருவாரூரில் (2016).

அந்தத் தேர்தலில்  1,21, 473 வாக்குகள் வாங்கி, கிட்டத்தட்ட 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

தமிழ்நாட்டிலேயே கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற  பெருமையையும் பெற்றார்.

1980 ஆம் ஆண்டு அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் அங்கு பிரசித்தி பெற்ற மருத்துவராக விளங்கிய எச்.வி.ஹண்டே நிறுத்தப்பட்டார். அப்போது கலைஞர் 699 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ஜெயிக்க முடிந்தது.

திருவாரூரை சொந்த ஊராகக்கொண்ட கலைஞர், ஆரம்ப காலத்தில் ஏன் அங்கு போட்டியிடாமல் தனது இறுதி நாட்களில் நின்றார்?.

திருவாரூர் அப்போது தனித் தொகுதியாக இருந்ததால் அவர் போட்டியிட முடியாமல் போய்விட்டது.

பொதுத்தொகுதியாக மாற்றப்பட்ட பின்னரே அங்கு நிற்க முடிந்தது.

அண்ணாவின் பிரதிபலிப்பு:

அண்ணாவின் மொழி நடையும், பேச்சாற்றலும், கலைஞருக்குள்ளும் ஊறிக் கிடந்தது குரலையும் கூடச்சொல்லலாம்.

1967 ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த மாநாட்டில்  சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் அறிஞர் அண்ணா அறிவித்தார்.

மாநாட்டு நிதியாக கலைஞர், தான் திரட்டிய 11 லட்சம் ரூபாயை மேடையில் வழங்கினார். அண்ணா பெற்றுக் கொண்டார்.

பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

“சைதாப்பேட்டை – ரூபாய் 11 லட்சம்’’ என அண்ணா அறிவித்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

சைதாப்பேட்டை வேட்பாளராக கலைஞரை, அப்படித்தான் அண்ணா அறிமுகம் செய்தார்.

1996 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கலைஞர் சேப்பாக்கம் தொகுதியில் களம் இறங்கினார்.

சேப்பாக்கத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தனது பெயரைத்தவிர அனைத்து வேட்பாளர்கள் பெயரையும் கலைஞர் அறிவித்து விட்டார்.

கூட்டத்தில் நிசப்தம்.

நான் எங்கே நிற்கிறேன்? என கேள்வி எழுப்பிய கலைஞர் “இங்கே நிற்கிறேன்’’ என சேப்பாக்கம் மண்ணை விரல் சுட்டிக் காண்பித்தார்.

35, 784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றினார்.

கடலோரம் துயிலும் கலைஞரின் பிறந்தநாளில், அவரது ருசியான எழுத்துக்களை நினைவு கூறி, கட்டுரையை மகிழ்வோடு நிறைவு செய்வோம்.

“பள்ளி நாடக சங்க ஆண்டு விழாவில் ‘துருவன்’ நாடகம். இந்திரனாக நடிக்க இருந்த மாணவனுக்கு காய்ச்சல். பழைய மாணவனான நானே இந்திரனாக நடித்தேன்.

அந்த நாடகத்தில் துருவனின் தம்பியாக நடித்த பாலநடிகன் யார் தெரியுமா? என் கண்களின் கருமணியாக விளங்குகிற செல்வ மருமகன் முரசொலி மாறன்.

துருவனை பார்த்து ”ஏய். துதுவா! நான் யார் தெரியுமா? எங்கப்பா மதியில் நீ உக்காத கூதாது” என்று பேசிய மழலை மொழியை, நான் இன்னும் மறக்கவில்லை. சமயத்தில் அதனை சொல்லி நான் கேலி செய்யும்போது, மணமகளைப்போல் நாணிக்கோணி ஓடிவிடுவான்’’.

– பி.எம்.எம்.

You might also like