எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே’ என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர்.
வெறும் படைப்பாளியாக மட்டுமில்லாமல், அரசியலிலும், சமூக பிரச்னைகளிலும் தம் கவிதையோடு களத்தில் நின்றவர்.
1937, நவம்பர் 9ம் தேதி மதுரையில், வைகை ஆற்றின் தென்கரையிலுள்ள கீழ்ச்சந்தைப்பேட்டையில் பிறந்தவர் அப்துல் ரகுமான். தந்தை சையத் அஹமத், புகழ்பெற்ற உருதுக் கவிஞர். மஹி என்ற பெயரில் பல படைப்புகளை வழங்கியவர். அம்மா பெயர் ஜைனத் பேகம்.
சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் ஒட்டிக்கொள்ள தமிழார்வமும், திராவிட இயக்க ஈடுபாடும் அப்துல் ரகுமானை எழுத்து நோக்கி நகர்த்தியது. ஒன்பது வயதில்
“எழிலன்னை ஆட்சியடா! -அது
எங்கெங்கும் காணுதடா!
பொழிலெங்கும் பாடுகிறாள் -புதுப்
பூக்களில் புன்னகைத்தாள்
மாலை மதியத்திலும் -அந்தி
மந்தார வானத்திலும்
சோலையின் தென்றலிலும் -சுக
சோபனம் கூறுகிறாள்
மலைகளின் மோனத்திலே- அந்த
வானவில் வண்ணத்திலே
அலைகளின் பாடலிலே -அவள்
அருள் பொங்கி வழியுதடா! “
என்ற தனது முதல் கவிதையை எழுதினார் அப்துல் ரகுமான்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி.பரந்தாமனார், அ. மு. பரமசிவானந்தம் போன்ற பெரும் ஆளுமைகளிடம் பயின்ற அனுபவம் அவரின் சிந்தனையையும் எழுத்தையும் செம்மைப்படுத்தியது. புதுக்கவிதையின் நுட்பங்களில் ஒன்றான குறியீடுகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது, ‘காதல் கொண்டேன்’ என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் ஒரு கவிதை எழுதினார். அக்கவிதை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அவர் எழுதி அச்சாக்கம் பெற்ற முதல் கவிதை அதுதான். ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அப்துல் ரகுமான், படிப்பு முடிந்ததும் தியாகராசர் கல்லூரி நிறுவனர் கருமுத்து தியாகராசர் நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் பிழை திருத்துனராக பணியில் சேர்ந்தார். பிறகு, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இணைந்தார். 1961-ல் சிற்றுரையாளராக பணியில் சேர்ந்த கவிக்கோ, படிப்படியாக உயர்ந்து, சுமார் 20 ஆண்டு காலம் தமிழ்த்துறை தலைவராக செயலாற்றினார்.
1964-ல் கவிக்கோவின் முதல் கவிதைத்தொகுப்பு ‘பால்வீதி’ வெளியானது. பல இளம் படைப்பாளிகளுக்கு இந்தத் தொகுப்பு பெரும் ஆதர்சமாக இருந்தது. இன்றளவும் இருக்கிறது. ‘சர்ரியலிசம்’ என்ற ‘மீமெய்மையியல்’ பாணியைத் தமிழுக்குக் கற்றுத்தந்த தொகுப்பாக அதைக் கருதலாம்.
கவியரங்கக் கவிதை வாசிப்பை ஒரு நிகழ்த்துக் கலையாக உருமாற்றியவர் கவிக்கோதான். ‘நேயர் விருப்பம்’, ‘ஆலாபனை’, ‘பித்தன்’, ‘பாலைநிலா’, ‘கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் கவிக்கோவின் பேராளுமைக்குச் சான்று. அரபி மொழியில் தோன்றி, பாரசீகத்திலும் உருதுவிலும் மலர்ந்து மணம் வீசும் கஜல் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது அப்துல் ரகுமான்தான். ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்ததும் கவிக்கோதான்.
‘பூப்படைந்த சப்தம்’, ‘தொலைப்பேசிக் கண்ணீர்’, ‘காற்று என் மனைவி’, ‘உறங்கும் அழகி’, ‘நெருப்பை அணைக்கும் நெருப்பு’ உள்பட 17-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. கவியரங்கக் கவிதைகளும் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ‘ஆலாபனை’ என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
அப்துல்ரகுமான் ஜூனியர் விகடனில் எழுதிய ‘சொந்தச் சிறைகள்’, ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’, ‘முட்டைவாசிகள்’, ‘அவளுக்கு நிலா என்று பெயர்’, ‘கரைகளே நதியாவதில்லை’ போன்ற தொடர்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை.
இதுகுறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “கவிதையே கரைகாணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம். எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக்கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்..” என்று பதிலளித்தார்.
– நன்றி விகடன்