இன்றைய மக்களுக்கு என்ன தேவை?

டாக்டர் கபழனித்துரை

மாற்றத்தை எங்கு ஆரம்பிப்பது, எந்தப் பணியில் ஆரம்பிப்பது என்றுதான் பலர் கேட்கக்கூடும். முதலில் நாம் வாழும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்து நம் வாழுமிடத் தூய்மையும், சுகாதாரமும், தேக ஆரோக்யமும் மக்கள் மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது.

அது நமக்கு மட்டுமல்ல நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் அது மிகவும் இன்றியமையாதது.

இன்று நம் பூமியையும், நம்மையும் காக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் பணி இயற்கை வளம் மற்றும் மனித வளம் பற்றிய புரிதலை நாம் நம்முடன் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

எந்த ஏழையும் அறிவும் (Knowledge), ஆற்றலும் (Skill) ஆரோக்யமும் (Health) இருந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

மக்களுக்கு இந்த மூன்றும் மிக முக்கியமான ஆயுதங்கள் என்பதை அறிந்து இவைகளைப் பெறவும், பெற்றபின் முறைமையுடன் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

முதலில் நம் ஆட்சியாளர்கள் முடிவுகள் எடுக்கும்போது வாக்குகளைக் கவர்வது என்பதைப் பின்புலத்தில் வைக்காமல் இயற்கையைப் பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வது,

மக்களைக் காப்பது, மனித வளத்தைக் காப்பது, மக்களை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றி எல்லா மேம்பாட்டுப் பணிகளிலும் பொறுப்புமிக்க குடிமக்களாகச் செயல்பட வைப்பது என்பனவற்றை பின்புலத்தில் வைத்துச் செயல்பட வேண்டும்.

அதுதான் இன்றைய பார்வையாக நம் அரசியலுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்க வேண்டும்.

அப்படியென்றால் எந்த முடிவு எடுக்குமுன் இது எந்த வகையிலாவது இயற்கையை சுற்றுச் சூழலைப் பாதிக்குமா என்று பார்க்க வேண்டும்.

அடுத்து இந்த முடிவு பெருமளவு மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குமா அல்லது வேலை வாய்ப்பைக் குறைக்குமா என்று பார்க்க வேண்டும்.

அடுத்து மக்களின் ஆரோக்கியப் பாதுகாப்புக்கு பணி செய்ய வேண்டும். முதலில் பொதுமக்களுக்கு ஆரோக்கியம் பேண தேவையான கல்வியை வடிவமைத்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.

தூய்மையின் முக்கியத்துவம், துப்புரவின் அவசியம், ஆரோக்யத்தின் தேவை, பெண்களின் உடல்நலம், வளர் இளம்பெண்கள் ரத்தசோகையின்றி இருப்பது,

ஆரோக்யமான மகப்பேறு, குழந்தைகளின் நலன், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு போன்ற செய்திகளை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்று பரப்புரை செய்து ஆரோக்கியப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்து குழந்தைகளின் கல்வியை கற்றோர் எண்ணிக்கை கூட்டுவதற்காகச் செய்யாமல் கற்றலின் மேன்மையை பெற்றோர்களுக்கு உணர்த்தி தாய்மொழியில் தரமான கல்வியை பொதுப் பள்ளிகளில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த அரசுப் பள்ளி ஆசிரியரும், அரசு ஊழியரும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அது மட்டுமல்ல இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும்.

இந்தக் கல்வியில் வாழ்வியல் கல்வியை ஓர் அங்கமாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அடுத்து திறன் மற்றும் ஆற்றல் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அறிவை வளர்ப்பதுடன் திறன் வளர்ப்பும் மிக முக்கியமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் பயனுள்ள வாழ்க்கையை நடத்த தாங்கள் தயாராவார்கள்.

அறிவும் திறனும், ஆற்றலும் கல்வியின் மூலம் தந்து பணித்தளத்திற்கு ஏற்றவர்களாக இவர்கள் மாற்றப்பட்டால் மனித வளத்தால் கிடைக்கும் பொருளாதார மேம்பாடு குடும்பத்திற்கும் நாட்டிற்கும் கிடைக்கும்.

மனித வளத்தின் மாண்பினை மக்களுக்குப் புரிய வைக்க பெண்கள் மத்தியில் ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

அதேபோல் கர்ப்பகால கவனிப்பு பேறுகால கவனிப்பு, குழந்தையை ஊட்டச்சத்து பாதிப்பின்றி வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பெண்களிடம் மட்டுமல்லாது அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

இந்த விழிப்புணர்வு இருக்கும் நாடுகளில் பெண்களின் அந்தஸ்து உயர்ந்திருக்கும். அதன் விளைவு, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, நிர்வாக அமைப்புக்கள், தொழில்துறை என அனைத்து இடங்களிலும் 50% பெண்கள் வந்துவிட்டனர்.

என்று பெண்கள் முடிவு எடுக்கும் பணித் தளங்களுக்கு வருகின்றார்களோ அன்றே சமூகச் சூழல் மாறிவிடும். அப்படிப் பெண்கள் மாற்றி விடுவார்கள். பொது இடத்திலும் சரி, குடும்பத்திலும் சரி பெண்கள் மேம்பாட்டை உறுதி செய்து விடுவார்கள்.

பெண்கள் கைக்கு நிதி வருகின்றபோது அந்த நிதி பெண்கள் மேம்பாட்டை நோக்கியதாக மாறிவிடும். அதைத்தான் நார்வே, டென்மார்க், நெதர்லாண்டு, ஸ்பெயின், ஸ்வச்சர்லாந்து போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன.

இதைத்தான் வங்க தேசத்தில் கிராமியன் வங்கி சுய உதவிக்குழுப் பெண்களின் மூலம் நிரூபணம் செய்துள்ளது.

ஏன் இந்தியத் திருநாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் சென்றவுடன் அந்தப்பணம் என்ன செய்தது என ஆய்வு செய்யப்பட்டபோது மிக ஆச்சரியப்படக்கூடிய தாக்கங்களை உருவாக்கியிருந்தது தெரிய வந்தது.

பெண்கள் தாங்கள் உழைத்த பணம் தங்கள் கையில் வந்தபோது, குடும்பத்தில் முடிவெடுக்கும் முறை மாறியது, தாங்கள் உழைத்த பணம் தங்கள் பெண் குழந்தைகளின் படிப்புக்குச் செலவழிக்கப்பட்டிருந்தது, தங்கள் பெண் குழந்தைகளின் உடல் நலம் பேணுவதற்கு செலவழிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் தங்கள் பெண் குழந்தைகளின் உடைகளுக்குச் செலவழிக்கப்பட்டிருந்தது, பெண் குழந்தைகள் படிப்பதற்கு நாற்காலி மேஜை வாங்கப்பட்டிருந்தது, நல்ல படுக்கை வாங்கப்பட்டிருந்தது.

இவைகளெல்லாம் 100 நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பாராத விளைவுகள். இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து அடங்கியுள்ளது.

அதாவது ஒரு பெண் பணித்தளத்திற்கு வருகின்றபோது, அந்தப் பெண் சம்பாதிக்கின்ற பணம் என்பது பெண்களின் ஆரோக்யம் பேணப்படுவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும்,

அவர்களின் நிலையை குடும்பத்தில் உயர்த்தி அங்கு முடிவுகள் எடுக்கும்போது தங்களின் பங்கைச் செலுத்தி குடும்ப முடிவுகள் அனைவருக்கும் நல் விளைவுகளை உருவாக்கத்தக்க நிலையில் எடுப்பார்கள் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்று உலகம் முழுவதும் நிரூபணம் ஆகி வருகின்றது.

எனவேதான் ஒரு சமூகத்தின் மேம்பாட்டை நிர்ணயிக்கும்போது, அங்கு பெண்களின் நிலையை, அந்தஸ்தை பாருங்கள் அதை வைத்தே அந்தச் சமூகத்தின் மேம்பாட்டை கணக்கிட்டு விடலாம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

எனவே ஒவ்வொரு நிலையிலும், நாம் பொறுப்புடன் ஆரோக்யமாக வாழ, மகிழ்ச்சியாக வாழ மனித வளத்தை மேம்படுத்துவதற்கு கல்வியும், சுகாதாரமும், தூய்மையும் துப்புரவும் மிக முக்கியமான காரணிகள்.

எனவே பொறுப்புமிக்க குடிமக்களாக நாம் அனைவரும் பொறுப்புமிக்க உடல்நலம் பேண நாம் தயாராக வேண்டும். அதற்கான புரிதலை நாம் ஏற்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த சமூகமும் செயல்பட வேண்டும்.

அதேபோல் நம் உள்ளாட்சி அதற்கான ஒரு பொது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைய வேண்டும். அடுத்து நல்ல கல்வி தாய் மொழியில் நம் குழந்தைகளுக்கு வாழ்வியல் பற்றி கிடைக்க வேண்டும்.

அத்துடன் தங்களின் திறன் மற்றும் ஆற்றலை வளர்க்க செயல்பட வேண்டும். இவை அனைத்தும் நம் பொது நிறுவனங்களை வலுப்படுத்தி செயல்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கத்தை பொதுமக்கள் நிர்பந்தப்படுத்தி பொது நிறுவனங்களை வலுப்படுத்தி செயல்பட வைக்க வேண்டும்.

உலகில் எந்தச் சூழலிலும் மனித வளம் முறையாக பராமரிக்கும் சமூகம் தங்களின் மேம்பாட்டை உறுதி செய்து கொண்டுவரும். அதுதான் இன்று நமக்குத் தேவையானது. அதற்கு ஒவ்வொரு நிலையிலும் நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

(தொடரும்…)

You might also like