‘புகையிலை’ கொடுத்ததைவிட எடுத்தது அதிகம்!

மே – 31 புகையிலை எதிர்ப்பு தினம்

உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும்.

அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல் வாய்ந்ததாகத் திகழ்கிறது மனிதர்கள் தாங்களாகவே முன்வந்து கைக்கொள்ளும் புகையிலையைச் சுவைக்கும் வழக்கம்.

மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் போதைப்பொருளாக இருப்பதால், இதற்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

அதேநேரத்தில், இப்பழக்கத்தைத் துறந்துவிடத் துடித்தாலும் விட முடியாத இக்கட்டான நிலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து பெருகி வருகிறது.

மலிவு விலை அரக்கன்!

வெறுமனே சிகரெட், பீடி குடிப்பவர்கள் மட்டுமே புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. இன்று புகையிலை பல வடிவங்களில் நம் வாழ்வுடன் உலா வருகிறது.

பான், குட்கா போன்ற போதை வஸ்துகளில் கணிசமான அளவு புகையிலை கலந்திருக்கிறது. ஜரூராக விற்கப்படுகிறது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல, இப்போதும் தமிழ்நாட்டின் எந்தவொரு இடத்திலும் இந்த வஸ்துகளை வாங்க முடியும் என்ற நிலையே நிலவுகிறது.

காரணம், இதனை விற்பதோ அல்லது வாங்குவதோ சமூகத்தில் ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை என்பதுதான்.

அது மட்டுமல்லாமல் 50 முதல் 100 ரூபாய்க்குள் இவற்றை வாங்கிவிட முடிவதால் பெரிதாக எவருக்கும் சந்தேகம் வராது என்பதே நிலைமை.

பென்சில், பேப்பர், பேனா என்று ஏதோ ஒன்றை வாங்கச் சென்று தவறாகப் பெயரைச் சொல்லிவிட்டீர்களானால், உங்கள் முன் ஏதோ ஒரு போதை வஸ்து நிரம்பிய பாக்கெட் வைக்கப்படுவது நிதர்சனம்.

நான் பார்த்தவரையில், உடல் உழைப்பை நம்பியிருப்பவர்களும் நாள் முழுக்க ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களும் இது போன்றவற்றை வாங்குகின்றனர்.

ஏதோ ஒரு வகையில் உற்சாகம், உத்வேகம், சுறுசுறுப்பு, சோம்பலின்மை, அயர்வின்மையைப் போக்க இது உதவுகிறது என்பதே அவர்களது நம்பிக்கை.

அத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறியாமல், அவை ஆற்றலைப் பொங்கச்செய்யுமென்ற போலியான பிம்பத்தை உடைத்தெறியாமல் இவ்வழக்கத்தையோ, விற்பனையையோ தடுத்து நிறுத்துவது கடினம்.

உயிருக்கு ஆபத்து!

புகையிலையை உட்கொள்ளும் வாய், நாக்கு, உதடு, மேலன்னம், கீழன்னம், உட்புற உதடுகள் தொடங்கி நுரையீரல், சுவாசக்குழாய், இதயம், கல்லீரல், குடல்பகுதி, நரம்பு மண்டலம் என்று உடலின் அனைத்து பாகங்களும் சீரழிவைச் சந்திக்கின்றன.

புகைப்பழக்கம் இருந்தால் சுவாச மண்டலம் முழுக்க பாதிப்புக்குள்ளாகும். ஐம்புலன்களில் நுகர்தலையும் ருசியறிதலையும் மட்டுப்படுத்துவதில் இதற்கு ஈடிணை எதுவுமில்லை.

அது மட்டுமல்லாமல், புகையிலையில் உள்ள நிகோடின் உணவு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைத்து முழுமையாக நம்மை மந்தத்தன்மையினுள் தள்ளிவிடும் அபாயம் கொண்டது.

தொடர்ந்து நாள் முழுவதும் புகையிலையை எடுத்துக்கொள்ளும் ஒருவர், சாதாரணமாக வாழ்வில் எதிர்கொள்ளும் அத்தனை சுகங்களில் இருந்தும் பல அடிகள் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.

இது நீளும்போது மரணத்திற்கு அருகில் கொடூரமான உடல் உபாதைகளைச் சந்திக்க வேண்டியதாயிருக்கிறது.

புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட கொடிய பாதிப்புகளால் வாழ்வே சிதைந்துபோகும் சூழ்நிலை உருவாகிறது.

வட இந்தியாவுக்குச் சென்றால் எங்கும் போதை பாக்கு சுவைத்த வாய்கள் வெளிக்கொட்டிய சிவப்பு எச்சில் படிந்திருப்பதைக் காணலாம் என்று சொல்லப்பட்டதுண்டு.

இப்போது கேரளா, தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை உடலுழைப்பு சார்ந்த, நிறுவனங்கள் சார்ந்த, அரசு சார் பணிகளுக்காக வட இந்தியர்கள் வந்துவிட்டனர்.

ஆனால், அவர்களைக் காட்டிலும் காலம்காலமாக இங்கிருப்பவர்கள்தான் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அதிகம் அடிமையாகி இருக்கின்றனர். சிவந்த மண்ணை அழுக்காக்கி வருகின்றனர்.

திகைக்க வைக்கும் புள்ளிவிவரம்!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று இந்தியாவில் 26 கோடி பேருக்கும் மேற்பட்டோர் புகையிலை பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

2020-ல் மரணமடைந்தவர்களில் 13% வரை புகையிலை பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்காக, வெறுமனே ஆண்கள் மட்டுமே இப்பழக்கத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

உலகளவில் வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகையிலை பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை நகரம், கிராமம் என்ற பாகுபாட்டைத் தாண்டி எல்லா இடங்களிலும் இப்பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருவதை மறுக்க முடியாது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே சிகரெட் புகைப்பதை ஸ்டைலாக மட்டுமே நோக்கும் மனோபாவம் இன்றில்லை.

ஆனாலும், அது போன்றதொரு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கத்தைப் பின்பற்றுவதென்பது இன்றைய தலைமுறையினரிடம் சகஜமாகியிருப்பதை காண முடிகிறது.

குறிப்பிட்ட போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், அதனைப் புறந்தள்ளிவிட்டு நாடும் மனப்பாங்கை ஆராய வேண்டிய நேரமிது. ஏனென்றால், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று மிக அதிகம்.

கடந்து வர வேண்டும்!

விளையாட்டாகவும், தெரியாமலும், ஒரு சாகசமாகவும், கெட்ட சகவாசத்தின் காரணமாகவும் நம்முடன் பயணிக்கத் தொடங்கும் புகையிலை, ஒரு கட்டத்தில் எவ்வளவு முயன்றாலும் நம்மை விட்டு அகலாத நிலையை ஏற்படுத்திவிடும்.

அபாரமான மன உறுதி இருந்தால் மட்டுமே, அதனைக் கடந்துவர முடியும்.
புகையிலைப் பழக்கம் என்றில்லை, எந்தவொரு போதைப்பழக்கத்திலிருந்தும் விடுபடுவதற்கு அசாதாரணமான மனச்சீர்மை வேண்டும். எந்த நொடியிலும் கால்களைப் பின்னிக்கிழுக்கும் வலிமை அப்பழக்கங்களுக்கு உண்டு.

அதன் பிடியிலிருந்து நழுவி முன்னோக்கிப் பயணிப்பது மிகச்சிரமமான காரியம். ஆதலால், கூடுமானவரை எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த கவலைகள், தினசரிப் பிரச்சனைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வாட்டும் கோவிட்-19 சார்ந்த பொருளாதார பாதிப்புகளுக்கு நடுவே உற்சாகமூட்டும் ஏதோ ஒன்றை தேடுவதற்கான மனநிலை எல்லோரிடத்திலும் உண்டு.

ஆனால், வெவ்வேறு வடிவிலமைந்த புகையிலைப் பழக்கங்களால் அதனை நிச்சயம் தர முடியாது.

’கொடுத்ததைவிட எடுத்தது அதிகம்‘ என்று சொல்வதைப் போல, புகையிலைப் பழக்கத்தால் நாம் பெறுவதை விட இழப்பது மிக மிக அதிகம்.

இந்த உண்மையை மனதார ஏற்றுக்கொண்டால், புகையிலையை அறவே நம்மை அண்டவிடாமல் தடுத்துவிடலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like