காட்டு யானையைக் கண்காணிக்க துரித நடவடிக்கை!

– தமிழக அரசு அறிக்கை

தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ”ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின், கள இயக்குநர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலரின் தலைமையில் மேகமலை கோட்டத்தின் துணை இயக்குநர்,

தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட துணை இயக்குனர்; மேகமலை கோட்டத்தின் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் துணை வனப் பாதுகாவலர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

மதுரை வனப் பாதுகாப்புப் படையின் மூலம் வனப்பகுதிக்குள் யானைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் உள்ளூர் யானை கண்காணிப்பாளர்கள் உட்பட முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 16 யானைத் தட கண்காணிப்புக் காவலர்கள் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து ‘சுயம்பு’ மற்றும் ‘முத்து’ மற்றும் முதுமலை யானைகள் முகாமில் இருந்து ‘உதயன்’ ஆகிய 3 கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு வந்து மேற்படி நடவடிக்கைகளுக்கு துணை நிற்கின்றன.

யானையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது” தமிழக அரசு தெரிவித்துள்ளது.

You might also like