நினைவில் நிற்கும் சூப்பர் ஹீரோ ‘வீரன்’!

நடிகர் ஆதி பெருமிதம்

‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகரும் பிரபல யூடியூபருமான சசி, “கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் இருந்த பல யூடியூபருக்கும் ஆதி அண்ணா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு யூடியூபரை கொண்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.

யூடியூபில் ஆதரவு கொடுத்தது போலவே சினிமாவிலும் மக்கள் எனக்கு தொடர்ந்து அன்பைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது “‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்லுகிறேன்.

இந்த படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஆதியோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் வினய், “சூப்பர் ஹீரோ படம் என்றால், அதை எப்படி அவர்கள் நம்பும்படி தரப் போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களைப்போல எனக்கும் இருந்தது.

ஒரு படக்குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது ‘வீரன்’ படத்தில் உள்ளது” என்று உற்சாகம் பொங்கப் பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன், “இது பொள்ளாச்சி கதை.

அதற்கேற்ற ஒரு முகம் தேவைப்பட்டதால் தேடி ஆதிராவை கண்டுபிடித்தோம். அவர் மிகவும் சிரமப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டு நடித்தார்.

சில படங்கள்தான் காலம் கடந்தும் நம்முடைய நினைவில் இருக்கும்.

அதுபோல ‘வீரன்’ இருக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். ஜூன் இரண்டாம் தேதி படம் வெளியாகிறது பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் ஆதி பேசியதாவது, “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி! சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களைப் போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

அடுத்து இயக்குநர் சரவன். எனக்கு ‘இன்று நேற்று நாளை’ சமயத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில்தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும்.

புதிய திறமைகளை ஒவ்வொரு படத்திலும் எடுத்து வருவதை நாங்கள் எங்களுடைய பாக்கியமாக கருதுகிறோம்.

அந்த வகையில் இந்த படத்தில் சசி, அவருடைய நக்கலைட்ஸ் டீம், டெம்பிள் மங்கி என அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி.

இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஒரு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் ‘முடியும் முடியும்’ என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு, ஜான் அவர்களுக்கு நன்றி.

என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல்தான். அந்த வகையில் எனக்கு 90’ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும்  நாஸ்டலஜியா.

இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளிப்போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த ‘வீரன்’ படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம்.

இன்னும் 10 வருடம் கழித்து ‘வீரன்’ ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும்” என்றார்.

You might also like