உற்றுக் கவனிக்க வேண்டும் – சுந்தர ராமசாமி!

சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து சிறு பகுதி :

“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக்கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.

கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம் எதுவுமில்லை. இதே போல் நம் கவனங்கள் நம் தன்மையாக மாற வேண்டும்.

இதில் தான் நான் அமிழ விரும்புகிறேன். என் பேச்சு இப்போது என்னை அறியாமலேயே மட்டுப்பட்டு வருகிறது. அர்த்தம் ஊடுருவும்போது அளவு குறைந்துவிடுகிறது போலும்.

*மனிதக்குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாக புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனத்தில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்?

அதனால் தான் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல் அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.”

– காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

You might also like