“2000 நோட்டை ஏன் அறிமுகப்படுத்தினார்கள்? இப்போது ஏன் அதை மதிப்பிழக்கச் செய்தார்கள்?’’
- இந்தக் கேள்விகளை ஒவ்வொரு வங்கியிலும் காத்திருக்கும் சாமானிய மக்களிடமும் கேட்க முடிகிறது.
- மொத்தமாகக் கட்டுக்கட்டாக 2000 நோட்டுகளை வைத்துக் கொண்டு அவர்கள் வரிசையில் காத்திருக்கவில்லை. சேமித்து வைத்திருந்த பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு தான் அதை மாற்றுவதற்குத் தான் கால்கடுக்கக் காத்திருக்கிறார்கள்.
ஏன் இந்த பண மதிப்பிழப்பு – அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்? அப்படி என்றால் இனி எந்த விதமான நோட்டுக்களை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்தால் அதன் மேல் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?
சாதாரணமான – அவர்கள் மனதில் இருக்கிற கேள்விகளைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்.
இதையே இன்னொரு விதத்தில் தர்க்கபூர்வமாகக் கேட்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம்.
“2 ஆயிரம் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது மற்றும் அதைத் திரும்பப் பெற்றது இந்தியப் பணத்தின் மீதான நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே வளர்ச்சி விகிதம் சரிந்து கொண்டிருக்கிறது.
வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவிகிதமாக இருக்கிறது. விலைவாசி காரணமாகப் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது குறைந்திருக்கிறது.’’ என்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கேட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
இதற்குப் பதில் அளித்திருக்கிற மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் “அனைவரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ப.சிதம்பரம் அவர் வகித்த பொறுப்புக்குத் தகுந்தபடி பதில் சொல்வது நல்லது’’ என்று சொல்லியிருக்கிற அவரும், ஏன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தற்போது மதிப்பிழக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.
மறுபடியும் கள்ள நோட்டுப் புழக்கத்தையைக் கண்டுபிடிக்க அல்லது தீவிரவாதத்தை அடையாளம் கண்டுகொள்ள என்று வழக்கமாக அரசு தரப்பில் சொல்லப்படும் எந்த விளக்கமும் இப்போது தரப்படவில்லை.
அதனால் உருவான பொருளாதாரக் குழப்பம் நீடித்து, பொது மக்கள் – குறிப்பாக வியாபாரிகள் தடுமாறுவது வெளிப்படையாகத் தெரிகிறது.
பெட்ரோல் நிரப்பும் இடங்களிலோ, வேறு எந்தக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்குத் தற்போது எந்த மதிப்பும் இல்லை.
அண்மையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போதும், கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலின் போதும் தாராளமாகப் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் நோட்டுகளைச் சட்டென்று மதிப்பிழக்க வைத்த அறிவிப்பு பலரைச் சலிப்பான மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது தான் நிகழ்கால உண்மை.
– யூகி