கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் வெற்றி தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவதில்லை. சச்சின், தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தொட்டதெல்லாம் துலங்கிய அதே நேரத்தில், தங்கள் இடத்தை தக்கவைக்கவே காலம் முழுக்க போராடிய வீரர்களும் கிரிக்கெட் உலகில் இருக்கிறார்கள். அப்படி காலம் முழுக்க போராடிய வீரர்களில் ஒருவர்தான் அம்பதி ராயுடு.
ஒருசில வீரர்களுக்கு தொடக்கம் மிகப் பிரம்மாண்டமாக அமையும். ஆனால் அதன் பிறகு காலம் கைகொடுக்காது.
அம்பதி ராயுடுவுக்கும் இதுதான் நடந்தது. 2002-ம் ஆண்டில் டவுண்டன் நகரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் 114 பந்துகளில் 177 ரன்களைக் குவித்தார் ராயுடு.
17 வயது இளம் வீரராக ராயுடு அப்போது இந்த சாதனையைப் படைத்தபோது, அடுத்த சச்சின் வந்துவிட்டதாக எல்லோரும் கொண்டாடினார்கள். அடுத்த நட்சத்திரமாகப் பார்த்தார்கள்.
2004-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் ராயுடு.
பின்னாளில் இந்திய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா என்று பலரும் இந்தத் தொடரில் ராயுடுவின் கீழ்தான் ஆடினார்கள்.
கேப்டனாக ஆடிய அந்த தொடரிலேயே ராயுடுவுக்கு முதல் சிக்கல் வந்தது. அம்பயரின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்குப் பிறகும், குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களைப் போட்டு முடிக்காததால், அரை இறுதிப் போட்டியில் ஆட ராயுடுவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்க, பழி ராயுடு மீது விழுந்தது. அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க, ராயுடு காக்க வைக்கப்பட்டார்.
இந்தத் தொடருக்கு பிறகு இந்திய அணி அறிவிக்கப்படும்போதெல்லாம் தனது பெயர் அதில் இடம்பெறும் என்று ஆவலோடு காத்திருந்தார் ராயுடு.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் மனமுடைந்து போனார். 2007-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக கபில்தேவ் மற்றும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஐசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஒப்பந்தம் செய்துகொண்டார்.
இந்த கிரிக்கெட் தொடர் தனக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து ஐசிஎல் போட்டியால் ஜெயிக்க முடியவில்லை.
அதன் வளர்ச்சியை ஐபிஎல் பாதித்தது. சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் ஐசிஎல் தொடரில் ஆடியதற்காக ராயுடுவை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது.
2010-ம் ஆண்டுவரை ராயுடுவை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
அதன்பிறகு பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டு சஸ்பெண்ட் உத்தரவில் இருந்து மீண்டுவந்தார். 2010-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கோப்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார்.
மிகக்குறுகிய காலத்திலேயே மும்பை அணியின் பேட்டிங் தூணாக உருவெடுத்த ராயுடுவுக்கு, மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு 2013-ம் ஆண்டில் இந்திய அணியில் இடம் கிடைத்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக அந்த அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தன் முதல் போட்டியில் 63 ரன்களைக் குவித்தாலும், அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஓய்வில் இருந்து மூத்த வீரர்கள் வந்ததும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். மும்பை அணி ஐபிஎல் வெல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த அணியும் அவரை ஒதுக்கியது.
இந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவருக்கு ஆதரவளித்தது.
தனக்கு ஆதரவளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் தன் நன்றியைக் காட்டினார் ராயுடு.
அந்த தொடரில் 16 போட்டிகளில் ராயுடு 602 ரன்களைக் குவிக்க, கோப்பை சிஎஸ்கே வசமானது.
இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதால் இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
அப்போதைய சூழலில் மிக முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ராயுடு இருந்தார்.
ஆனாலும் இந்திய அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருக்கு பதில் விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தார்கள்.
இத்தொடரின் நடுவில் ஷிகர் தவனும், விஜய் சங்கரும் காயமடைந்தபோது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் அதன் பிறகும் ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தபோதிலும் 55 ஒருநாள் போட்டிகளிலும், 6 T20 போட்டிகளிலும் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதிலேயே 3 சதங்களை அவர் அடித்திருந்தார்.
இந்திய அணி ஓரம்கட்டிய நிலையில் ராயுடுவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாரி அணைத்தது.
அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை வாரிக் குவித்தார். அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் ராயுடு மொத்தம் 4,329 ரன்களைக் குவித்துள்ளார்.
இன்று நடக்கும் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் அம்பதி ராயுடு.
காலம் முழுக்க போராளியாகவே வாழ்ந்த ராயுடுவுக்கு விடை கொடுப்போம்.
-பி.எம். சுதிர்
நன்றி: வாவ் தமிழா இணையதளம்.