தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!

– ‘தாய்’ தலையங்கம்

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ – என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள்.

இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தபோது, சின்னச்சாமி, நடராசன் துவங்கி ஏராளமான உணர்வாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

மாணவர்கள் பெரும் கொந்தளிப்புடன் போராடினார்கள். துப்பாக்கிச் சூடு நடந்து சில மாணவர்கள் உயிரிழந்தார்கள்.

மொழியுணர்ச்சி தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியமைத்தது என்பது நம் கண் முன்னால் நடந்த வரலாறு.

மொழி மீது பற்றுக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தார்கள்.

“இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும்’’ என்று நாடாளுமன்றத்தில் பேசிய அறிஞர் அண்ணா,

“எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த தமிழ்மொழி மற்ற எதற்கும் தாழாத வகையில் ‘ஆட்சிமொழி’ என்ற தகுதி தரப்படும் வரை, நான் அமைதி பெற மாட்டேன். திருப்தி அடைய மாட்டேன்’’ என்பதையும் அவையில் பதிய வைத்தார்.

1967 க்குப் பிறகு திமு.க ஆட்சிக்கு வந்ந பிறகு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாறியது. பின்னர் தமிழ் செம்மொழி எனத் தகுதியைப் பெற்றது.

இதெல்லாம் நடந்தும் கல்விக் கூடங்களில் ஆங்கிலம் நிலைத்த அளவுக்கு தமிழுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை.

பள்ளி, கல்லூரிகளிலும் சரி, கோவில்களிலும், நீதிமன்றங்களிலும் சரி, தமிழுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாத நிலை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழைத் தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இதே தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் போராட்டமே நடத்தினார்கள்.

இருந்தாலும் எதிர்தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணையைப் பெற்று தமிழ் மொழியைப் பயில்வதைத் தடுக்கும் எல்லா வேலைகளையும் செய்தனர்.

இதனால் என்ன ஆயிற்று? தமிழ்நாட்டில் படித்த இளைய தலைமுறையினருக்குத் தாய்மொழியான தமிழ் மொழியை வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலை உருவாகிவிட்டது.

அவர்களிடம் போய் தமிழ்மொழிக்காக இங்கு போராட்டங்கள் நடந்து உயிரைக் கொடுத்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை,

ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலுவை நினைவில் வைத்திருக்கிற அளவுக்கு மொழிக்காகப் போராடிய தமிழ்நாட்டில் அதற்காக உயிரைக் கொடுத்தவர்கள் நினைவில் நிறுத்தப்படவில்லை – தியாகி நாளைத் தவிர.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழைப் படிப்பது கட்டாயம் என்கிற அறிவிப்பு வெளிவந்திருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது.

அண்டை மாநிலங்களில் அங்குள்ள தாய் மொழியைப் படிப்பது கட்டாயமான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தாமதமாக இத்தகைய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

திரும்பவும் தனியார் பள்ளிகள் எந்த‍விதமான தடைகளையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சொந்த மாநிலத்திலேயே தமிழ் மொழியை அந்நிய மொழியைப் போன்று கருதும் மனநிலை மாற வேண்டும்.

இதையடுத்து நீதிமன்றங்களிலும், கோவில்களிலும் தமிழை மதிப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.

இம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்’’ என்று பாரதி இனிதாக‍க் கொண்டாடியதற்குக் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.

You might also like