இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
சுமார் 10.8 சதவிகித அளவுக்கே 2000 நோட்டுகளின் புழக்கம் இருப்பதால் அவை பெறப்பட்டுவிடுவதால், பெரிய அளவில் நெருக்கடி நிலவ வாய்ப்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
2016 ல் பண மதிப்பிழப்பின் போது வங்கி ஊழியர்களுக்குக் கூடுதலான பணிச்சுமை இருந்தது. பொதுமக்களும் அவதிப்பட வேண்டியிருந்தது.
அப்போதைய பண மதிப்பிழப்பின் போது பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பண மதிப்பிழப்பின் தேவையைப் பற்றிப் பேசினார்.
கள்ளத் தனமாகப் பதுக்கி வைக்கப்படும் பணத்தை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையைப் பற்றிப் பேசினார்.
அவர் குறிப்பிட்ட அளவுக்குக் கள்ளப்பணம் மீட்கப்பட்டதா என்பது குறித்த வியரங்கள் அதன் பிறகு தெரியப்படுத்தப்படவில்லை.
தற்போது பிரதமர் பேசாமல், ரிசர்வ வங்கி ஆளுநரான சக்தி காந்த தாஸ் தான் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
மாநில அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளைப் பெறக்கூடாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதே சமயம் டாஸ்மாக் கடைகளில் 2000 நோட்டுக்களைத் தாராளமாகக் கொடுக்கலாம் என்றும் குடிப்பிரியர்கள் மீதான தெளிவான அக்கறையுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஏன் 2000 நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்கிறோம் என்பதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி ஆளுநரும் சொல்லவில்லை.
உக்ரைன் போரினால் சர்வதேச அளவில் உண்டாகும் பொருளாதார நெருக்கடி பற்றியும், மேற்கத்திய நாடுகள் பலவற்றில் முக்கிய வங்கிகள் செயலிழந்து வருவது பற்றியும் பேசியிருப்பவர் இந்த நடவடிக்கைக்கான காரணத்தைத் தெளிவாக விளக்கவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது மாதிரியே சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் – ஏனிந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை?
இதனால் ஏற்னவே இந்தியாவில் சிதைந்திருக்கிற பொருளாதாரம், வேலையிழப்புகள், விலையேற்றங்கள் என்று எந்த மாற்றங்களும் நடக்கலாம்.
2016 ல் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை. தற்போது இன்னொரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை.
எத்தனை மதிப்பிழப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், சாமானிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் யதார்த்தம்.