பதவியேற்ற நாளில் அதிரடி காட்டிய சித்தராமையா!

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே 2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமார் துணை முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் டிகே சிவகுமார், M.P.பாட்டீல், பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ஜமீர் அகமது கான், ராமலிங்கா ரெட்டி, பிரியங் கார்கே ஆகியோர் அமைச்சரவையில் பதவிவேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, சரத் பவார், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாதங்கள் சட்டசபைக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டு, அவற்றை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த உத்தரவாதங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.

முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டன. அவற்றில், தேர்தலையொட்டி மக்களுக்கு 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது.

அவற்றில் கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல், அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதோருக்கு 2 ஆண்டுகளுக்கு அலவன்ஸ் தொகை (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500) வழங்குவது, சக்தி எனப்படும் திட்டத்தின் கீழ் கர்நாடகா முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் ஆகிய 5 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like