மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதென்றால், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும்.
வெற்றியோ, தோல்வியோ எதனை எதிர்கொண்டாலும், கூடவே முதல் பாகம் தொடர்பான ஒப்பீடும் சேர்ந்தே வரும். போலவே, முதல் பாகத்தில் இருந்து முற்றிலுமாக விலகி வேறொரு திசையில் கதையை இழுத்துச் சென்றால் எதிர்க்கருத்துகளும் ஆதரவும் ஒருசேர அணிவகுக்கும்.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படம் மேற்சொன்னவற்றில் எந்த வகையில் அடங்குகிறது? அது என்ன மாதிரியான காட்சியனுபவத்தைத் தருகிறது?
ஒரு சில ஒற்றுமைகள்!
விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி) எனும் பெரும் கோடீஸ்வரர், தனது நிறுவன சிஇஓ மற்றும் நெருங்கிய நண்பரான அரவிந்தின் (தேவ் கில்) பேச்சைக் கேட்டு நடப்பவர்.
ஆனால், விஜய்யின் தந்தையைக் கொலை செய்கிறார் அரவிந்த்; மூளை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக, விஜய்யின் உருவத்தையும் ரத்த வகையையும் கொண்ட வேறொரு நபரைத் தன் கைப்பாவையாக ஆக்க எண்ணுகிறார்.
‘பிசினஸ் ட்ரிப்’ என்ற பெயரில் விஜய் குருமூர்த்தியைத் துபாய்க்கு அழைத்துச் சென்று, சத்யா என்ற பிச்சைக்காரரின் மூளையை அவரது உடலில் பொருத்த ஏற்பாடு செய்கிறார்.
தன் தங்கையைச் சிறுவயதில் தொலைத்துவிட்டு 20 ஆண்டுகளாகத் தேடி வருபவர் சத்யா என்ற நபர். தானும் தங்கையும் பிரியக் காரணமாக இருந்த நபரைக் கொன்ற காரணத்தால் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர்.
அப்படிப்பட்ட சத்யா, அரவிந்த் கோஷ்டியின் குயுக்திக்குப் பலியாகிறார். அதன் விளைவாக, விஜய்யின் மூளையும் சத்யாவின் உடலும் பாலைவனத்தில் வீசப்படுகின்றன.
இனி தனது காலடியில் விஜய் குருமூர்த்தியின் நிறுவனமும் அவர் சம்பாதித்த பணமும் இருக்குமென்று அரவிந்த் நினைக்கிறார்.
மாறாக, அவரிடம் எதிர்க்குரல் எழுப்புகிறார் சத்யா. ஒரு காவல் துறை அதிகாரியைச் சந்தித்து நடந்த உண்மைகளைச் சொல்கிறார். அவரோ, அதனை வேடிக்கைக் கதையாகக் கேட்கிறார்.
ஒரு பிச்சைக்காரரான சத்யா எவ்வாறு பணக்கார வாழ்வை எதிர்கொள்கிறார்? தான் வாழ்ந்த சமூகத்திற்கு அவர் ஆற்றிய கைங்கர்யம் என்ன? விஜய் குருமூர்த்தி கொலையான விவரம் வெளியில் தெரிய வந்ததா போன்றவற்றை விளக்கிச் செல்கிறது ‘பிச்சைக்காரன் 2’ திரைக்கதை.
பிச்சைக்காரன் முதல் பாகத்தில், ஒரு பெரும் பணக்காரர் தனது தாய் நோய் பாதிப்பில் இருந்து மீளும் நோக்கில் ஒரு பரிகாரமாகப் பிச்சையெடுப்பதை மேற்கொள்வார்; அப்போது அவருக்குக் கிடைக்கும் அனுபவங்களே அப்படத்தின் கதையாக விரியும்.
பிச்சைக்காரன் 2விலும் நாயகன் பிச்சை எடுப்பவராக வருகிறார்; அதேநேரத்தில் பணக்காரராகவும் இருக்கிறார்.
அது போன்ற சில ஒற்றுமைகளைத் தவிர இரு படங்களும் வெவ்வேறு திசையில் பயணிப்பவை; வகைமை அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
ஆச்சர்யப்படுத்தும் இயக்கம்!
எப்போதும் உர்ரென்ற முகத்துடன் திரையில் தோன்றி, ஸ்டண்ட் கலைஞர்களை அந்தரத்தில் பறக்கவிடுவதையே தன் வேலையாக வைத்திருக்கிறார் என்பது விஜய் ஆண்டனியின் நாயக அவதாரம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ‘பிச்சைக்காரன் 2’விலும் அது தொடர்கிறது.
தொடக்கத்தில் வரும் ‘கள்ளூறும் பூவே’ பாடலில் நாயகி காவ்யா தாபர் உடன் ரொமான்ஸில் அசத்துபவர், அதன்பின் தனது ‘டெம்ப்ளேட்’ நடிப்புக்கு மாறுகிறார்.
தனது வழக்கத்தை விட்டு விலகி முற்றிலுமாக நகைச்சுவை, காதல், பாசத்தை வெளிப்படுத்தும் கதைகளில் நடிக்க முன்வந்தால், விஜய் ஆண்டனியின் நட்சத்திர நடிகர் அந்தஸ்து வேறொரு உயரத்தை எட்டும்.
ஒரு பாடலைத் தவிர காவ்யாவுக்குத் தனது நடிப்பையோ, கவர்ச்சியையோ காட்ட வாய்ப்பு தரப்படவில்லை.
அனுஷ்கா, டாப்ஸி போல ப்ளஸ் சைஸ் பெண்களின் பிரதிநிதியாகத் தோன்றுவதால் இருபது வயதுக்கு மேற்பட்ட பெண்களின் ஆதரவை நிச்சயம் பெறுவார்.
வில்லன்களாக வரும் தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி மூவரும் முன்பாதியில் திரையை ஆக்கிரமிக்கின்றனர்.
பின்பாதியில் அந்த இடத்தை ராதாரவியும் மன்சூர் அலிகானும் நிரப்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்சைகுரிய பாத்திரங்களே ராதாரவிக்கு வாய்க்கின்றன; இதிலும் அப்படியே.
ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஓரிரு காட்சிகள், ஷாட்கள் முகம் காட்ட வாய்ப்பு தந்துள்ளார் இயக்குனர் விஜய் ஆண்டனி.
யோகிபாபுவுக்குக் காட்சிகள் அதிகமில்லை என்றபோதிலும், தோன்றும் இடங்களிலெல்லாம் சிரிப்பூட்டியிருக்கிறார்.
கடல்பகுதியில் தரையிறங்கும் விமானம், துபாய் பாலைவனம் போன்றவற்றைக் காட்டும் இடங்களில் விஎஃப்எக்ஸ் கொஞ்சம் சுமார் ரகத்தில் அமைந்தாலும், ஆய்வகக் காட்சிகள் பளிச்சென்று அமைந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. ஓம் நாராயணன் ஒளிப்பதிவு இப்படத்திற்குப் பெரும்பலம்.
கலை இயக்குனர் ஆறுசாமிக்கு இப்படத்தில் விதவிதமான களங்களில் பணிபுரிய வேண்டிய கட்டாயம்.
ஆனால், திரையில் தென்படும் வண்ணங்களால் கதையோட்டத்திலும் காட்சியமைப்பிலும் இருந்து ரசிகர்கள் விலகிச் செல்லாவண்ணம் சிறப்புற அனைத்தையும் வடிவமைத்திருக்கிறார்.
வழக்கமாகத் தன் படங்களில் இசையமைப்பது, தயாரிப்பது, நடிப்பது என்றிருந்த விஜய் ஆண்டனி, இதில் இயக்கத்தோடு சேர்த்து படத்தொகுப்பையும் கையாண்டிருக்கிறார்.
தேவ் கில் பாத்திரத்தின் பிளாஷ்பேக்கை சில ஷாட்களில் சொல்லியிருப்பது, விஜய் ஆண்டனியின் அபார தைரியத்தைக் காட்டுகிறது.
அதேநேரத்தில், பாலைப் பரப்பில் ஊரும் விஷப்பாம்பைத் தொடர்ந்தாற்போலக் காட்டும் இடங்கள் சலிப்பூட்டுகின்றன.
பாடல் காட்சிகளை அவர் ‘எடிட்’ செய்திருக்கும் விதமும், ஒரு குரங்கு போலத் தாவித் திரியும் திரைக்கதையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையும் அவருக்குக் கைவைந்திருக்கிறது.
அதுவே, படத்தொகுப்பாளர் என்பதையும் மீறி ஒரு ‘மெகா பட்ஜெட்’ படத்தை இயக்கவல்ல திறமைக்குரியவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது.
கே.பழனி, பால் ஆண்டனி உடன் இணைந்து விஜய் ஆண்டனி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை அமைத்திருக்கிறார்.
சில இடங்களில் வசனங்கள் கைத்தட்டல்களைப் பெறுகின்றன. அதேநேரத்தில், திரைக்கதை நகரும் விதம் பல கேள்விகளை எழுப்புகிறது.
கதையின் வகைமை, திரைக்கதை அமைக்கப்பட்ட விதம், கதாபாத்திரங்களின் தனித்துவம் உட்படப் பல விஷயங்களில், ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்திற்கும் இப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இதில் முதல் பாதி முழுக்க ‘மெடிக்கல் த்ரில்லர்’ ஆக அமைந்து, இரண்டாம் பாதி முழுக்க ‘பொலிடிகல் சட்டயர்’ ஆக மாறியிருக்கிறது. இதிலிருந்தே முதல் பாதியில் மருந்துக்குக் கூட காமெடி இல்லை என்பது தெரியவரும்.
உண்மையைச் சொன்னால் பில்லா, இந்தியன், ரமணா உட்படப் பல படங்களைக் கலந்து கட்டி பார்த்த உணர்வையே தருகிறது ‘பிச்சைக்காரன் 2’.
நிச்சயமாக, சசி தந்த பிச்சைக்காரனை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
அதிரும் இசை!
வழக்கமாக விஜய் ஆண்டனியின் பாடல்களில் புரியாத வார்த்தைகள் திரும்பத் திரும்ப இடம்பெற்று ரசிகர்களை முனுமுனுக்க வைக்கும். இதிலும் அந்த முயற்சிகளைத் தொடர்ந்திருக்கிறார்.
ஆன்ட்டி பிகிலி, நானா புலுகு பாடல்கள் அந்த வகையறாவைச் சேர்ந்தவை. அதேநேரத்தில் ‘கோயில் சிலையே’ பாடல் நம் மனதை உருக்கும் ரகம்.
பின்னணியில் ஒலிக்கும் இசை கொண்டு, திரையில் பிரமாண்டம் கூட்ட முடியும் என்பதை இளையராஜா முதற்கொண்டு பலர் தமிழ் திரையுலகில் நிரூபித்திருக்கின்றனர்.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, யுவன் போன்றோரின் பின்னணி இசை ரசிகர்களை ஆட்டுவிப்பதாக உள்ளது. சமீபகாலமாக, கதைக்கும் காட்சியமைப்புக்கும் தகுந்தவாறு பின்னணி சேர்த்து வியப்பூட்டி வருகிறார் சாம் சிஎஸ்.
இந்த நிலையில், காதைப் பிளக்கும் பின்னணி இசையுடன் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதை ரசிகனுக்கு உணர்த்துகிறார் விஜய் ஆண்டனி. அவர் உண்டாக்கும் அதிர்வு, காட்சிகளின் உண்மையான தாக்கத்தைப் பன்மடங்காக மாற்றுகிறது.
ஒரு இயக்குனராக, ‘பிச்சைக்காரன் 2’ மூலமாகச் சம அளவில் கெட்ட பெயரையும் நற்பெயரையும் விஜய் ஆண்டனி சம்பாதிப்பது உறுதி. ஏனென்றால், முதல் பாகத்தில் நிறைந்திருந்த ‘அம்மா செண்டிமெண்ட்’ அளவுக்கு இதில் ‘தங்கை செண்டிமெண்ட்’ வலுவானதாக இல்லை.
ஒருவேளை முதல் பாகத்தைப் பிரதியெடுத்தாற்போல இப்படத்தையும் ரொமான்ஸ், ஆக்ஷன், ட்ராமா பாணியில் தந்திருந்தால் ரசிகர்கள் நிராகரிக்க வாய்ப்புகள் அநேகம்.
அதனாலேயே, விஜய் ஆண்டனி மேற்கொண்ட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், முதல் பாகம் போல இது பெண்களையும் பெரியோர்களையும் குழந்தைகளையும் கவர்வது சந்தேகமே!
உண்மையைச் சொன்னால், ‘பிச்சைக்காரன்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளின்போது சசி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்தினாரோ, அதனை மட்டுமே இதில் பிரதியெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
‘நீங்க யாரு சார்’ என்ற கேள்விக்கு, அதே பாணியில் ‘பிச்சைக்காரன்’ என்று பவ்யமாகப் பதில் சொல்லியிருக்கிறார்.
அதைத் தவிர்த்து, முதல் பாகத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
ஆனால், ‘பிச்சைக்காரன்’ என்ற டைட்டிலையும் ஒரு தீம் மியூசிக்கையும் வைத்துக்கொண்டு வித்தியாசமான பாணியில் கதை சொல்ல முயன்றதற்காகவே ‘விஜய் ஆண்டனி’யைப் பாராட்டலாம், திட்டலாம்; ஆனால், நிச்சயமாகப் புறக்கணித்துவிட முடியாது.
– உதய் பாடகலிங்கம்