கவிஞர் மீராவும் நவகவிதை வரிசையும்!

கலை விமர்சகர் இந்திரன்

கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம் போன்ற கவிஞர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் உட்கார வைத்தவர் கவிஞர் மீராதான்.

1981-82-இல் இவர்களது முதல் புதுக்கவிதைத் தொகுதிகளை “நவ கவிதை வரிசை” என்று தனது அன்னம் பதிப்பகத்தில் வெளியிட்டு பிள்ளையார் சுழி போட்டவர் மீராதான் என்று நினைவுகளை பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.

இவர்களோடு விஷ்ணு நாகராஜன், அகல்யா, கிவி போன்ற கவிஞர்களின் நவீன கவிதைகளின் முதல் தொகுதிகளையும் நவகவிதையாக மீராதான் வெளியிட்டார். இந்த வரிசையில் பாலகுமாரன், மாலன் போன்றோரின் கவிதைகளும் வருவதாக இருந்தது.

விக்கிரமாதித்யன்

எதனாலோ அவர்களால் சொன்னபடி கொடுக்க இயலாமல் போயிற்று. இந்த நிலையில் ஞானம்பாடி என்ற பெயரில் 1973-ல் மரபுக் கவிதை வெளியிட்டிருந்த என்னை புதுக்கவிதை வடிவில் கவிதை எழுதச் சொல்லி நவகவிதை வரிசையில் வெளியிட்டார்.

1981இல் மும்பையிலிருந்து என் இதய நண்பர்கள் நாஞ்சில்நாடன், ஞான.ராஜசேகரன், கலைக்கூத்தன் ஆகியோரை விட்டுப் பிரிந்து நான் சிவகங்கை இந்தியன் வங்கிக்கு மாற்றலாகி வந்தேன்.

கவிஞர் மீரா எனும் இலக்கிய சக்தி சிவகங்கையை எனது மெக்காவாக்கி விட்டது. தினந்தோறும் நாங்கள் இருவரும் மாலை வேளைகளில் மேலூர் ரோட்டில் காலாற நடப்போம். இரு கை விரல்களில் வேட்டி நுனியைப் பற்றியபடி கம்பீரமாய் அவர் நடக்கும் அழகே தனி.

வண்ணநிலவன்

ஒருநாள் மாலை உலாவில் அவர் சொன்னார் பாரதி நூற்றாண்டை ஒட்டி உருப்படியான ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்று.

உடனே நான் சொன்னேன் “உங்களது புத்தகங்கள் அதிக விலையாக உள்ளன. எனவே மிகக் குறைந்த விலையில் கொஞ்சம் புத்தகங்களை நீங்கள் வெளியிட வேண்டும்.”

உடனே உற்சாகமாகி அவர் சொன்னார். ”நாம் இதுவரை கவிதைத் தொகுதி கொண்டுவராத கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுதிகளை வெளியிடுவோம்… அதன் விலை வெறும் 4 ரூபாய்தான்” என்றார்.

அதற்கு உடனே “நவகவிதை வரிசை“ என்றும் பெயரிட்டார்.”என்னையே அதன் வடிவமைப்பைச் செய்யச் சொன்னார். அதன் அட்டைப் படத்தை ஞான. ராஜசேகரனை வடிவமைக்கச் சொல்வதாக முடிவு செய்தோம்.

இதற்கென வந்த கையெழுத்துப் பிரதிகளைப் படித்து எவற்றைப் போடலாம் என்று சிபாரிசு செய்யும் வேலையும் என்னுடையது.

கல்யாண்ஜி

முதல் பக்கத்தில் மகாகவி பாரதியின் பொன்மொழி ஒன்றை ஒவ்வொரு புத்தகத்திற்கும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.

பின்னட்டையில் அந்தந்த கவிஞர்கள் குறித்த சிறு அறிமுக உரை எழுதும் பொறுப்பையும் எனக்குக் கொடுத்தார்.

“விடிந்திருக்கும் புதிய யுகத்தின் உச்சி வெயிலில் வியர்த்து பிசுபிசுத்திருக்கும் சொற்காளால் கவிதை செய்யும் கல்யாண்ஜி” என்றும்,

“முப்பத்தைந்து வயதாகியும் வேலை தேடும் வேலையில் இருக்கும் விக்கிரமாதித்யனின் கற்பனைகள், கனவுகள், ஏக்கங்கள், இதயத்தைக் கிழிக்கும் சோகங்கள் இங்கு கவிதையாகியுள்ளன.

வாழ்க்கை முட்கள் ஒரு சோக ரசாயனத்தால் இங்கு கவிதையாகியுள்ளன” என்றும், பின்னட்டையில் என் பெயர் போடாமல் எழுதிவந்த எனக்கு ஒரு சோதனை வந்தது.

இந்திரன்

எனது கவிதைத் தொகுதியையும் மீரா நவகவிதை வரிசையில் சேர்த்தபோது எனக்கு நானே அறிமுக உரை எழுதிக்கொள்ள வேண்டியதாயிற்று.

“தனக்குத்தானே உண்மையாய் இருத்தலைத் தவிர, வேறு உத்தி முறை ஏதும் அறியாத இவரது கவிதைகள் காற்றைப் போல் எளிமையானவை; ஊற்றைப்போல் புதுமையானவை” என்று தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் தென்னை மரத்துக் குரங்கின் நிலைக்கு ஆளானேன். மீராவுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இன்றைக்குத்தான் வெளியாகிறது.

You might also like