ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இப்போது வரை 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் கம்பீரமாக நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இந்த ஐபிஎல்லின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு கிடைக்க இது போதுமா?
நிச்சயம் போதாது.
ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேறு சில தேவைகளும் இருக்கின்றன.
நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றிருக்க வேண்டும். ஆனால் தோற்றுவிட்டது. இந்தத் தோல்வி சிஎஸ்கேவுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.
சனிக்கிழமை (மே 20) நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்.
அப்படி ஜெயித்தால் சிஎஸ்கேயின் புள்ளிகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துவிடும்.
17 என்று உயர்ந்துவிட்டால் யார் தயவும் தேவையின்றி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம்.
சரி, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோற்றுவிட்டால்….? சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்குள் போக முடியாதா?
அப்போதும் முடியும். ஆனால் அதற்கு மற்ற அணிகளின் உதவி தேவைப்படும். அவை எப்படி ஆடுகின்றன என்பதை பொருத்து சிஎஸ்கேயின் தலையெழுத்து நிர்ணையிக்கப்படும்.
இப்போதைய கணக்குப்படி சென்னையின் இடத்தை உடனடியாக நெருங்கும் அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இருக்கின்றன.
இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 போட்டிகளில் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளை எதிர்த்து ஆடவுள்ளது.
இந்த 2 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோற்றால் அதனால் 15 புள்ளிகளைத்தான் பெற முடியும்.
அப்போது சிஎஸ்கேவும், லக்னோ அணியும் தலா 15 புள்ளிகளுடன் இருக்கும்.
சிஎஸ்கேவின் நெட் ரன் ரேட் (0.381) லக்னோ அணியின் (0.309) நெட் ரன் ரேட்டை விட அதிகமாக இருப்பதால் சிஎஸ்கேவுக்கு ப்ளே ஆஃப் ஆட வாய்ப்பு கிடைக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி 12 ஆட்டங்களில் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டங்களில் லக்னோ மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் ஆடுகிறது.
இதில் ஏதாவது ஒன்றில் ஜெயித்தாலும் மும்பை அணி சிஎஸ்கேவைக் கடந்துவிடும்.
இந்த சூழலில் மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி சிஎஸ்கேவுக்கு ரொம்ப முக்கியம்.
இந்தப் போட்டியில் மும்பை வென்றால் அது 16 புள்ளிகளுடன் சிஎஸ்கேவை கடந்து சென்று்ிடும். அதன்பிறகு அடுத்த போட்டியிலும் லக்னோ தோற்க நாம் ஆண்டவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.
மும்பை, லக்னோ அணிகளைப் போலவே ஆர்.சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக உள்ளன. இரு அணிகளும் இப்போது 12 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளுடன் இருக்கின்றன.
இந்த 2 அணிகளும் தாங்கள் ஆடவுள்ள 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றால்தான் 14 புள்ளிகளில் நிற்கும்.
அப்படி நடந்தால் 15 புள்ளிகளுடன் இருக்கும் நாம் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கால் வைக்கலாம்.
இப்படி பல அணிகள் தோற்று சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றை நெருங்குவதைவிட, கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வென்று ப்ளே ஆஃப் சுற்றில் நுழைவதுதான் தோனிக்கும் அவரது சகாக்களுக்கும் பெருமை. ரசிகர்கள் அதற்குதான் விசில் போடுவார்கள்.
நன்றி: வாவ் தமிழா இணையதளம்