தமிழ் சினிமாவில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதையடுத்து, அவர் கயல் ஆனந்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமான ஆனந்தியை ரசிகர்கள் பரியேறும் பெருமாள் ஆனந்தி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர்.
அதன்பிறகு விசாரணை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனந்தி.
‘மூடர்கூடம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நவீனின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்துவந்த ஆனந்தி, கடந்த 2021-ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த ஆனந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததாகத் தகவல் வெளியாகியது.
தற்போது ‘அலாவுதினின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’ போன்ற படங்களில் நடித்துவரும் ஆனந்தி நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ‘இராவணக் கோட்டம்’ படத்திலும் நடித்துள்ளார்.
இராவணக் கோட்டம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புரமோஷன் விஷாவில் பேசிய நடிகை ஆனந்தி, தன்னுடைய மகனுக்கு சாதியில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இந்த முடிவிற்கு தான் படித்த புத்தகங்களும், சந்தித்த நபர்களின் உரையாடலுமே காரணம் என்று கூறியுள்ள நடிகை ஆனந்தி பரியேறும் பெருமாள் படத்தில் சாதி உணர்வுக்கு எதிராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் சாதியை எதிர்த்ததைப் போலவே நிஜ வாழ்க்கையிலும், தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ள ஆனந்திக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.