பொறுப்புடன் செயல்படத் தயாராவோம்!

டாக்டர் க. பழனித்துரை

நாம் இன்று ஒரு அசாதாரண காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் புரிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.

இந்தக் கருத்தை நான் மட்டும் கூறவில்லை. ஐ.நா பொதுச் செயலர் காலநிலை மாற்ற அறிக்கை ஒன்றை வெளியிடும்போது இதே கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டிருந்தார்.

இன்று நாம் பார்ப்பது ஓர் ஆடம்பர அரசியல், வணிகமயமாக்கப்பட்ட தேர்தல், நாற்றமெடுக்கும் ஊழல் ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் அறமற்ற வணிகம். இவை அனைத்தும் மக்களாட்சியை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.

இந்தச் சூழலைப் புரிந்தவர்கள் ஓர் கொதிநிலைக்கு வந்துவிட்டனர். எப்படி மன்னராட்சி காலத்தில் மன்னரின் கொடுங்கோலாட்சியில் மக்கள் வதைபட்டு மாற்றுத் தேடுவதற்கு அலைந்தார்களோ அதேபோல் இந்த நாற்றமெடுக்கும் தேர்தல் மக்களாட்சிக்கு மாற்று என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வாக்கு எனும் ஒரே கவசத்தை வைத்து தங்களை மக்களாட்சியின் கொடூரப் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இல்லையேல் அரசு இயந்திரத்தை வைத்து மக்களை பூச்சிகளை நசுக்குவதுபோல் நசுக்கி விடுவார்கள் நம் ஆட்சியாளர்கள்.

இன்று நாம் சந்திக்கும் அசாதாரணச் சூழலை வென்றெடுக்க அரசியலில் இருப்பவர்கள் குறைந்தபட்சமாவது பொறுப்புடனும், பக்குவத்துடனும், நியாய உணர்வுடனும், கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக பெரும் தொற்று லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலிகொண்டது. அது மட்டுமல்ல கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.

உலகம் முழுவதும் பெருமளவு பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தி விட்டது. அதனைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் உலகத்தில் ஏற்படப்போகும் பாதிப்புக்களைப் படம் பிடித்து காண்பித்து இனிமேலாவது பொருளாதார வளர்ச்சி என்று புவியை துன்பியலுக்குக் கொண்டு செல்லாதீர்கள், சந்ததிகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்து பொறுப்புடன் செயல்படுங்கள் அரசியல் தலைவர்களே, நாட்டின் அதிபர்களே என்று அறிஞர்கள் தங்கள் ஆய்வறிக்கைகள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்து பொருளாதார மந்த நிலையின் விளைவாக பணியிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பதையும் ஆய்வு அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இந்தப் பின்னணியில் நம் போன்ற நாடுகளில் பெண்களின் பணித்தள பங்கேற்பு குறைந்து வருவது அடுத்து மிகப்பெரிய சோக நிகழ்வு.

இந்தச் சூழலில் நம் அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

இல்லையேல் மக்களை மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். இன்றைய நம் பொறுப்பற்ற செயல்பாடுகள் நம் சந்ததியினரின் வாழ்வை நிர்மூலமாக்கிவிடும்.

இன்றைக்கு நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது நாம் அனைவரும் பொறுப்பற்ற நிலையின் உச்சத்திற்கே வந்துவிட்டோமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்தியா மிகப் பழமையான நாடாக இருந்தாலும் இன்றைய சூழலில் நம் நாட்டிற்கு இருக்கும் பலம் இந்த நாட்டில் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கைதான்.

இதுதான் இந்தியா இளமையாக இருக்கின்றது. இந்தியா இளமையான நாடு என்று கூற வைத்திருக்கிறது. எனவேதான் இந்தியாவுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று அனைவரையும் கூற வைத்திருக்கிறது.

இந்தியாவின் இயற்கை வளம் குன்றிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதை சூழலியலாளர்கள் தொடர்ந்து கவனப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

இந்தியாவில் பல ஆறுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பல ஆறுகளை சாக்கடைபோல் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

தண்ணீரை புனிதமாக நினைத்து வாழ்க்கை வாழ்ந்த மக்களின் நாட்டில் அவை இன்று மாசுபடுத்தப்படுகிறது எந்த புரிதலும் இன்றி. பல நகரங்கள் வசிக்க லாயக்கற்றதாக மாறி விட்டன.

முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்தோம், கிராமங்களில் மக்களுக்கு தண்ணீர் குழாய் மூலம் தருகிறோம் என திட்டமிட்டு தண்ணீர் கொடுத்து நீர்நிலைகள் அனைத்தையும் அநாதைகளாக்கி அழிய விட்டுவிட்டோம்.

அதையே ஆக்கிரமித்து அரசும் மக்களும் வீடும் அரசாங்கத்திற்கு கட்டிடங்களும் கட்டிவிட்டனர்.

அகலமாக 4 வழி மற்றும 6 வழி சாலை அமைக்கிறோம் எனக் கூறி லட்சக்கணக்கில் சாலைகளில் உள்ள மரங்களை வெட்டினோம். எல்லா சமூக நியதிகள் வாழ்க்கைக்கான விழுமியங்கள் அனைத்தையும் நாம் அழித்தோம்.

பொதுமக்களை பொறுப்பற்று செயல்பட பழக்கினோம், அரசியலில் மக்களுக்கான கடப்பாடு என்பதை அறவே நீத்துப்போகச் செய்தோம்.

சமூகம் இந்தச் சூழலுக்கு வந்ததற்கு காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றால் நமக்குத் தெரிவது பல தவறான அரசின் கொள்கைகள். அடுத்து கொள்கை ஊழல்கள். அடுத்து ஒரு பொறுப்பற்ற அரசியலைக் கட்டமைத்தது.

கம்பெனிகளிடம் பணம் வாங்கி அரசியல் நடத்தும் வணிக அரசியல் இவைகள்தான் நம் ஆட்சி, அதிகாரம், ஆளுகை அனைத்தையும் தடம் புரள வைத்துள்ளது.

இவற்றை சரிசெய்ய என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கின்றபோது, பலர் கூறுவது அரசாங்கம் இருக்கிறது, அரசியல் கட்சிகள் இருக்கின்றன, தலைவர்கள் இருக்கின்றார்கள், விஞ்ஞானிகள் இருக்கின்றார்கள், படித்தவர்கள் இருக்கின்றார்கள், தொழில் செய்வோர் இருக்கின்றார்கள், ஊடகங்கள் இருக்கின்றன, பொதுக்கருத்தாளர்கள் இருக்கின்றார்கள்.

இவர்களெல்லாரையும் விட நான் என்ன மேலானவனா, எனக்கு இந்தச் சமுதாயத்தில் என்ன அதிகாரம் இருக்கின்றது, என்ன பங்கு இருக்கிறது, நான் என்ன வசதி படைத்தவனா என்று கேட்பதை வாடிக்கையாக்கி வைத்து வாழ்கின்றோம்.

எனக்கு என்ன பங்கு அதைச் செய்ய எனக்கு என்ன பார்வை உள்ளது, புரிதல் உள்ளது எனச் சிந்தித்து நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் செயல்படும் தருணம் வந்துவிட்டது.

காரணம் அரசுக்கு ஆலோசனை வழங்கிய பொருளாதார நிபுணர்கள் ஒன்றைத் தெளிவாகக் கூறுகின்றார்கள். நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் தீர்த்துவிடும் என்று உறுதி கூறினர்.

1991ஆம் ஆண்டு மிகத் தெளிவாக அரசுக்கு மக்களின் எல்லாத் தேவைகளையும் தீர்க்கும் சக்தி இல்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

ஆகையால்தான் சந்தையின் துணைகொண்டு மக்கள் பிரச்சினையை தீர்க்க முயல்கிறோம் என புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினர்.

அதை அடுத்து 30 ஆண்கள் கழித்து இன்று சந்தையாலும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை, இனிமேல் மக்கள் தங்களை அதிகாரப்படுத்திக் கொண்டு ஆளுகையிலும், மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்கேற்று தீர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை என தெரிவிக்கின்றனர்.

ஆகையால்தான் பொதுச் சிந்தனையாளர்கள் அனைவரும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த மாற்றத்தையும் சமூகத்தில் நம்மால் கொண்டுவர இயலாது என்பதை மட்டும் மனதில் வலுவாக செலுத்தி செயல்பட அனைவரும் முயல வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

இதைத்தான் காந்தியர்களும் இடதுசாரிகளும் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் பங்கேற்காது ஒரு நாளும் நாடு முன்னேறாது என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் காந்தியர்கள் நிர்மானப் பணிகளிலும் இடதுசாரிகள் மக்களைத் திரட்டி போராடி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முனைந்தனர்.

இந்தச் சூழலில் இன்று அரசியல்வாதியில் துவங்கி, அறிவியலாளர், குடிமக்கள் வரை அனைவரும் பொறுப்புமிக்கவராக எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

(தொடரும்…)

You might also like