சினிமாவில் ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் பல போராட்டமான கதைகள் இருக்கின்றன. இப்போது கேட்டால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும்!
கமல்ஹாசன் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்த முதல் திரைப்படம் ‘உணர்ச்சிகள்’. அதற்கு முன்பே பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் நாயகனாக ஒப்பந்தமானப் படம் இதுதான். ஆர்.சி.சக்தி இயக்கி இருந்தார்.
தங்கப்பன் மாஸ்டர் மூலம் ஆர்.சி.சக்திக்கு அறிமுகமான கமல்ஹாசனுக்கு அப்போது டெக்னீஷியனாகவும் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது.
இருவரும் நெருங்கிய நண்பர்களான பின்பு, கமல்ஹாசனை நடிப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்த அறிவுரை கூறியவர் ஆர்.சி.சக்தி.
தான் படம் இயக்கினால் அதில் ஹீரோவாக கமல்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த அவர் ‘உணர்ச்சிகளி’ல் நாயகனாக்கினார்.
1972 ஆம் ஆண்டு இந்தப் படம் தொடங்கப்பட்டது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது படம்.
ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்க முடியாது என்பதால், கமல்ஹாசன் வீட்டிலேயே படத்தை எடுத்தார்கள். ஆனாலும் நான்காயிரம் அடி எடுத்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுவிட்டது.
எடுத்தவரை சில தயாரிப்பாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினார் ஆர்.சி.சக்தி.
எல்லோரும் சொன்னது: ‘கதை நல்லாயிருக்கு. அந்தப் பையனை (கமல்) மாத்திட்டு வேறொரு நடிகரை வச்சு ரீ-ஷூட் பண்ணுங்க!’.
மறுத்துவிட்டார் இயக்குனர். பிறகு இந்தப் படத்தின் மலையாள ரீமேக் உரிமையை கமல்ஹாசன் மூலமாக சிலர் கேட்டார்கள். அதை விற்றால் கிடைக்கும் பணத்தை வைத்து மீதி படத்தை எடுத்துவிடலாம் என்று கமல் சொல்ல விற்றார் ஆர்.சி.சக்தி.
மலையாளத்தில், சங்கரன் நாயர் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயசுதா நடிப்பில் ‘ராசலீலா’ என்ற பெயரில் உருவானது உணர்ச்சிகள்.
பிறகு தமிழில் ஒருவழியாக படத்தை முடித்தார் இயக்குனர் ஆர்.சி.சக்தி. பிறகு சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தாமதமானது. ஆனால், மலையாளத்தில் உருவான ‘ராசலீலா’வை மூன்றே மாதத்தில் முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள்.
படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படம் தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு நான்கு வருடம் கழித்துதான் தமிழில் ‘உணர்ச்சிகள்’ ரிலீஸ் ஆனது.
படம் பெரிய வசூலை எட்டவில்லை என்றாலும் இயக்குனராக ஆர்.சி.சக்திக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்த படம் இது.
உணர்ச்சிகள் ரிலீஸ் ஆனபோது, மலையாளப் படத்தை காப்பி அடித்து எடுத்ததாக அப்போது சொல்லப்பட்டது.
இதற்குப் பிறகு கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தை இயக்கிய ஆர்.சி.சக்தி, ரஜினி நடிப்பில் ‘தர்மயுத்தம்’ படத்தை இயக்கினார்.
ஸ்ரீதேவியின் அம்மா ரஜினியிடம் சிபாரிசு செய்து வாங்கித் தந்த படம் இது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஆர்.சி.சக்தி.
இந்தப் படத்தை பீட்டர் செல்வகுமார் எழுதிய ‘கோமா’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கி இருந்தார். சுமார் 22 படங்கள் வரை அவர் இயக்கி இருந்தாலும் ராஜேஷ், லட்சுமி நடித்த ‘சிறை’ அவர் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது.
– அழகு