ஓவியர் ஆன்ட்டினா வெர்பூமும் கவிஞர் இந்திரனும்!

கவிதைப் பரிசோதனை என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.

அந்தப் பதிவு தாய் இணையதள வாசகர்களுக்காக…

1996 இல் நெதர்லாந்த் ஓவியரான ஆண்ட்டினா வெர்பூம் (Antina Verboom) இந்தியாவுக்கு வந்து என்னுடன் இணைந்து The Royal Netherlands Embassy, New Delhi மற்றும் Lalit Kala Akademi, Regional centre, Chennai உதவியுடன் ஒரு மாதம் ஒரு ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டார்.

அந்த ஆய்வின்படி இருவருக்கும் பொதுவான ஒரு காட்சியையோ, நிகழ்வையோ அனுபவத்தையோ தேர்ந்தெடுத்து அதனை ஆண்ட்டினா ஒரு ஓவியமாகவும் நான் ஒரு கவிதையாகவும் படைப்போம்.

உதாரணமாக ஒரு சிட்டுக் குருவி செத்துப்போன காட்சி அனுபவத்தை எடுத்துக் கொண்டு அவர் ஒரு ஓவியம் தீட்டினார். நான் சிட்டுக்குருவியின் மரணம் எனும் கவிதை எழுதினேன்.

எங்களின் ஆய்வில் கிடைத்த ஆண்ட்டீனாவின் ஓவியங்களையும் எனது கவிதைகளையும் சென்னை ABN Amro Bank காலரியில் கண்காட்சியாக வைத்தோம். எனது ஆங்கிலக் கவிதைகளை ஆண்டீனாவின் ஓவியங்களுடன் சேர்த்து ACRYLIC MOON என்கிற நூலாக வெளியிட்டேன்.

அந்த படைப்பைச் செய்யும்போது கண்டுபிடித்த அவரவர்களின் கலை சாதனங்களில் இருக்கும் குறை நிறைகளை விவாதித்து அதனை ஒரு ஆய்வறிக்கையாக்கினோம்.

வண்ணங்கள் சார்ந்து இயங்கும் ஓவியம் எனும் கலை சாதனத்தையும், மொழி சார்ந்து இயங்கும் கவிதை எனும் கலை சாதனத்தையும் ஒப்பு நோக்கிய ஆய்வில் ஒரு ஓவியம்போல் கவிதையை எப்படி எழுதுவது என்றும் ஒரு கவிதைபோல் ஒரு ஓவியத்தை எப்படி படைப்பது என்றும் பரிசோதனை செய்தோம்.

இதன்படி ஆண்ட்டீனாவின் ஓவியங்கள் மேலும் அரூப நிலையை அடைந்தன.

எனது கவிதைகள் வாசகனின் பன்முக வாசிப்புக்கு வசதி செய்யும் வகையில் திறந்த நிலையிலான மொழிப் பிரயோகத்துக்கு மாறியது.

இது குறித்த செய்திகளை ஆனந்த விகடன் சிறப்பாக வெளியிட்டு எங்களை ஊக்குவித்தது.

You might also like