ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்
பீரீயட் ஃபிலிம் என்றால் பழுபு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள், தங்கலான் அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம்.
அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள். ஒளிப்புதிவுக்காக இந்தப் படம் தனித்துப் பேசப்படும் என படம் குறித்த அப்டேட்டுடன் பேசத் தொடங்கினார் தங்கலான் படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்.
தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட எண்பது சதவீதம் முடிந்துவிட்டது.
இதுவரை நூற்று பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் இருபது நாட்கள் படப்பிடிப்பு இருக்கும். அது இந்த மாதம் நிறைவடையும்.
கோலார் தங்கவயலில் தான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது.
சென்னையில் கொஞ்சம் செட் போட்டு எடுத்துள்ளோம். மதுரை, ஒகேனக்கல் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
காலா படத்திற்கு தாராவி செட் போட்டு எடுப்பதற்கு எவ்வளவு கடுமையான உழைப்புத் தேவைப்பட்டதோ, அதை விஞ்சும் அளவுக்கு தங்கலான் உள்ளது.
படத்தின் ஒவ்வொரு கட்சியும் அவ்வளவு வலுவானதாக இருக்கும். நடிப்பும் வசனமும் தனித்துப் பேசப்படும்.
அண்மையில் விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியிட்ட வீடியோவைப் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியிலும் கேமரா ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்கும்.
கேமராவை எங்கு வைத்து எடுத்தார்கள் என்று கணிக்க முடியாது. நிறைய சிங்கிள் டேக் காட்சிகள் இருக்கும். சில காட்சிகள் எடுப்பதற்கு கேமராவை தூக்கிக் கொண்டு பத்து பதினைந்து கிலோ மீட்டர் நடந்தே சென்றிருக்கிறோம்.
படத்தில் ஒரு காட்சி எடுக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட்டோம். ரத்தம் கலந்திருக்கும் தண்ணீரில் குதிரை வேகமாக ஓடுவது தான் காட்சி.
அதை எடுக்கும் போது, தண்ணீரில் கலந்திருக்கும் ரத்தம் தெரியவேண்டும், குதிரை வேகமாக ஓடவேண்டும், குதிரை மேல் இருப்பவர் விழாமல் இருக்க வேண்டும்.
இதில் ஒன்று தவறினாலும். மீண்டும் அந்தக் காட்சியை எடுக்க வேண்டும்.
இப்படி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதிக கவனத்தோடும் நுட்பத்தோடும் எடுத்துள்ளோம்.
அதற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒளிப்பதிவின் அழகியலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.
நன்றி: அந்திமழை, 2023 மே மாத இதழ்.