வார்த்தைகளால் வானத்தை அளந்த வலம்புரிஜான்!

வலம்புரிஜான் – ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர். தொலைக்காட்சியில் இயற்கை உணர்வைப் போதித்தவர். பழகியவர்களிடம் உண்மையான இயல்போடு இருந்தவர்.

எல்லாவற்றுடன் ‘தாய்’ வார இதழை முன்னிலைப்படுத்திய ஆசிரியர். பல பத்திரிகையாளர்களை அரவணைத்து வளர்த்தவர். அவரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.

பத்திரிகையாளரும், கவிஞரும், தற்போது கவனிக்கத்தக்க ஆய்வாளராகவும், பேச்சாளராகவும் பன்முகம் கொண்ட கடற்கரயின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் :

“என் தலைமுறை ஆட்களுக்கு எல்லாம், அந்த அகத்திக் கீரை இருக்கிறதே அகத்திக் கீரை…” என தினமும் காலை தொலைக்காட்சியில் கதையளந்த வம்புரியைத்தான் தெரியும்.

ஆனால் அழகு தமிழில் ‘மனம் மயங்கும் மல்லிகைப் பூ’ வாசத்தைப் போல் பாடம் போதித்த ஜானைத் தெரிவதற்கு நியாயமில்லை.

என் முந்தைய தலைமுறை இன்னும் செம்மாந்த குரலைக் கேட்டிருக்கலாம். உஷ்ணம் குறையாத பசும்பால் பருகி இருக்கலாம்.

கறவைப் பசுவிடம் வைக்கோல் கன்றைக் காட்டி பால் கரப்பவர்கள் நிரம்பி விட்ட காலத்தில் வார்த்தைச் சித்தரின் வசன மொழிக்கு வாய்ப்புகள் இல்லை.

கடற்கரை மணல் பரப்பில் நந்தியாவட்டைப் பூக்களைப் போல் நிறம் குன்றாமல் பொங்கு தமிழில் தெம்மாங்குப் பாடிய வலம்புரி ஜானை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பழகி இருக்கிறேன். இரண்டொரு முறை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.

நான் சென்னைக்கு வருவதற்கு முன்னால் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் பங்கு உத்திரம் கோயில் திருவிழா உற்சவத்தின் போது மாலைதோறும் நடக்கும் பட்டிமண்டப நிகழ்வுகளில் அவர் பங்கேற்றபோது எல்லாம் உதவியாளனாக இருந்து உதவி இருக்கிறேன்.

இரண்டு இட்லியை அவர் தண்ணீரில் நனைத்து உண்டதைக் கண்டு கலங்கி இருக்கிறேன்.

ஊருக்கே உணவை ஆகாரமாக்க ஆயிரம் கதை சொன்ன ஆசானுக்கு அவ்வளவு நோய்களா என நேரில் உணர்ந்து நொந்திருக்கிறேன்.

சென்னை வந்த காலத்தில் அவர் வீடு சாந்தோமில் இருந்த நினைவு. ஒரு மாலை வேளையில் அவர் கதவைத் தட்டியபோது, படிய வாரிய சிகை, கருத்த முகத்தை முந்திக் கொண்டு காட்டும் பவுடர் பூச்சுடன் அவரே வாசலைத் திறந்து உள்ளே அழைத்துப் போனார்.

அதுபோல் சில சந்திப்புகள் நினைவுத் திரையில் நிழலாடுகின்றன.
ஜானின் மேடைப் பேச்சுக்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். அவர்ப் பேச்சைக் கேட்டுதான் நான் உ.வே.சா. வைப் படித்தேன்.

மூப்பனாரை அவர் தூக்கிப் பேசிய காலத்தில், அந்தக் கட்சியில் இருந்தவன் நான். கபிஸ்தலம் மூப்பனார் வீட்டுக்கேப் போய் அவரையும் அவரது தம்பியையும் கண்டு பேசி, உண்டு வந்திருக்கிறேன்.

வலம்புரிக்கு இரண்டுக் கண்களும் பழுதானபோது அவர் மேடை முன் யார் இருக்கிறார்கள். எத்தனைப் பேர் கவனிக்கிறார்கள் என்பதை உணரக் கூட முடியாமல் தவித்திருக்கிறார்.

வெளியே நிரம்பி வழியும் கூட்டம் ஏதோ எனக்கு வெளிச்சப் புள்ளிகளாக தெரிகிறது என உவமை சூட்டி உள்ளம் மகிழ்வார்.

ஜான், அந்தக் காலத்தில் வைகோவை தோளில் சுமந்தார். அவர், ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்த கண்ணோடு, கருப்புக் கண்ணாடி அணிந்து பேசிய எரிமலைப் பேச்சைக் கேட்ட எத்தனைப் பேர் இன்று இருக்கிறார்கள் என்பது தெரியாது.

அந்த மாநாட்டில் வார்த்தைகளால் வானத்தை நிரப்பினார் ஜான். அது ஒரு காவிய உரை.

முடிந்தால் நண்பர்கள் ஜானின் சிங்கப்பூர் பேச்சைக் கேட்க வேண்டும். அன்புத் தமிழில் பாவேந்தரைப் படிக்கப் படிக்க உங்கள் உள்ளக்குழி அப்படித் துடிக்கும்.

பெருகும் சொற்களைக் கொண்டு தமிழ் வாசலை சோலையாக்கும் பேச்சு அது. வலம்புரிக்கு வார்த்தைப் பஞ்சம் இல்லை. கஞ்சத்தனம் இல்லாமல் கவி கூறுவார்.

தமிழைச் சுதி சுத்தமாய்ப் பேசும் ஜான் ஆங்கிலம் பேசுவதில் அபாரத் திறமைசாலி. வகைவகையாகப் பேசுவதில் வல்லவர் அவர்.

கல்லூரியில் உண்மையாகவே பேராசிரியராக இருந்தவர். எந்த நதியும் தரையில் உற்பத்தியாவதில்லை. மலைதான் அதன் பிறப்பிடம்.

ஆனாலும் அது தரைக்கு வருவது இயற்கை. அப்படியே தரைக்குத் திரும்பினார். அரசியல் அலையில் மூழ்கினார்.

இன்று அவர் நினைவுநாள்.
மறந்தால் தானே நினைப்பதற்கு!

You might also like