2018 – நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்!

பீல்குட் படங்களுக்கென்று ஒரு பார்முலா உண்டு. திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் பிரச்சனைகள் எல்லாம், கிளைமேக்ஸில் பெரும்பாலும் தீர்வைக் கண்டிருக்கும்.

இடைப்பட்ட காட்சிகளில், மனித மனங்களின் முரண்களே திருப்புமுனையை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அவற்றோடு இயற்கைப் பேரழிவும் சேர்ந்துகொண்டால் எப்படியிருக்கும்.

அப்படியொரு காட்சியனுபவத்தை முன்வைக்கிறது ஜூடு ஆண்டனி ஜோசப்பின் ‘2018’ திரைப்படம்.

இந்தப் படத்தின் டைட்டிலோடு ‘அனைவரும் நாயகரே’ எனும் அர்த்தம் தொனிக்கும் வகையில் ’Everyone is Hero’ எனும் வரி சேர்க்கப்பட்டுள்ளது. கதையின் மையக்கருவும் கூட அதுதான்!

சூழும் வெள்ளம்!

மப்பும் மந்தாரமுமான வானிலையே கேரளாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. ஓராண்டில் மே இறுதி தொடங்கி அக்டோபர் வரை தொடர்ந்து மழை பொழியும்.

திடீரென்று புயலோ, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமோ அரபிக் கடலில் நிலைகொண்டால் இன்னும் நிலைமை மோசம்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரளாவில் கடுமையாக மழை பொழிந்தது. அந்த நேரத்தில், அங்குள்ள பல அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

அப்படித்தான், அந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரோடு மழை நீரும் சேர்ந்து அம்மாவட்டம் முழுக்க வெள்ளம் பெருக்கெடுத்தது.

பல இடங்களில் இரண்டாம் தளம் வரை கட்டப்பட்ட வீடுகள் கூட நீரில் மூழ்கின. அப்படியானால், கிராமங்களில் வசித்தவர்களின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.

அப்படியொரு மோசமான கதிக்கு ஆளான கிராமத்து மைந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறது ‘2018’. சூழும் வெள்ளத்தின் நடுவே, அவர்கள் எப்படியெல்லாம் அல்லலுறுகின்றனர் என்பதைக் காட்டியிருக்கிறது.

வெவ்வேறு இயல்புகள் கொண்ட கதை மாந்தர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதை விளக்குகிறது முதல் பாதி.

இரண்டாம் பாதியில், வெள்ளப் பேரழிவு அவர்களது இயல்பு வாழ்வை எப்படிச் சிதைத்தது என்பதைச் சொல்கிறது. சிறியதும் பெரியதும் பயங்கரமுமாக மழை பொழியும் சத்தம் படம் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருப்பது ‘2018’ன் சிறப்பு.

நட்சத்திரக் கூட்டம்!

ராணுவத்தில் இருந்து பாதியில் ஓடிவந்த அனூப் (டொவினோ தாமஸ்), அவரது காதலைப் பெற்ற ஆசிரியர் மஞ்சு (தன்வி ராம்), கண்பார்வைத் திறனற்றவரான பாஸி (இந்திரன்ஸ்), வானிலைத் துறையில் வேலை செய்யும் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்),

நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் ஷாஜியின் மனைவி (ஷிவதா), மீன்பிடித் தொழிலைப் போற்றும் மாத்தச்சன் (லால்), மீனவன் என்று சொல்ல வெட்கப்படும் அவரது மகன் டிக்சன் (ஆசிஃப் அலி), அவரது சகோதரர் (நரேன்),

மனைவியையும் தாயையும் ஊரில் விட்டுவிட்டு துபாயில் பணியாற்றிவரும் ரமேஷன் (வினீத் சீனிவாசன்), அவரோடு ஊடல் கொண்டுள்ள மனைவி (கௌதமி), மதுரையில் இருந்து கேரளாவுக்கு லாரி ஓட்டிச் செல்லும் சேதுபதி (கலையரசன்),

செய்தித் தொலைக்காட்சியொன்றில் பணியாற்றும் ஆன் மரியா (அபர்ணா பாலமுரளி) மற்றும் இவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்கள், என்று சுமார் 2 டஜன் மனிதர்கள் இக்கதையில் வந்து போகின்றனர்.

பின்னணியில் நடமாடும் துணை நடிகர்களையும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் இருக்கும்.

இத்தனை நடிகர்களும் முகம் காட்டி வசனம் பேசினாலே சுமார் ஒரு மணி நேரம் போய்விடும்.

அப்படியிருக்க, இவர்களை வைத்துக்கொண்டு பாத்திர முரண்கள், இயற்கைப் பேரழிவால் வரும் பிரச்சனைகள், அதனை எதிர்கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்று திரைக்கதையைச் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

நிறைய காட்சிகள் சினிமாத்தனமாக இருக்கின்றன. அக்காட்சிகளின் வழியே நாம் பெறுவது வாழ்வுக்கான நம்பிக்கை என்பதால், அக்குறையைப் புறக்கணித்துவிடலாம்.

இப்படத்தில் டொவினோ தாமஸுக்கு அதிகப்படியான இடம் என்றபோதும், மற்றவர்களுக்கும் உரிய ‘ஸ்பேஸ்’ திரைக்கதையில் தரப்பட்டிருக்கிறது.

அபர்ணா பாலமுரளி, குஞ்சாக்கோ போபன் பாத்திரங்கள் மட்டுமே அழுத்தம் குறைவானதாக படைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக, அவை ‘சும்மா’ வந்து போவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

கிடைத்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு, சரிபாதிக் காட்சிகளில் வெள்ள நீரின் பாதிப்புகளைக் காட்ட வேண்டும் என்ற சவாலைத் திறம்படச் சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். மிகச்சில காட்சிகளில் அந்திநேரத்து ஒளியை பிரேமில் நிறைக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தின் தொடக்கத்தில், தெருவோரத்தில் இருக்கும் ஒரு மேரி மாதா சிலை காட்டப்படுகிறது.

அந்த ஷாட்டில் கிரேன் மெல்ல மேல்நோக்கி நகர்ந்து இறுதி நிலையை எட்டும்போது, அந்த இடத்தின் உயரம் பிடிபடுகிறது.

அந்த இடத்தில் எந்தளவுக்கு வெள்ளம் உயர்ந்துள்ளது என்பதைச் சொல்லும் அளவுகோலாகவும், திரைக்கதையில் அந்த சிலையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமான் சாக்கோவின் படத்தொகுப்பு, திரையில் அனைத்து நடிப்புக்கலைஞர்களுக்குமான முக்கியத்துவம் சீராகக் கிடைப்பதையும் கதை தடையின்றிச் சொல்லப்படுவதையும் செம்மைப்படுத்தியிருக்கிறது.

பல காட்சிகளில் நோபின் பால் பின்னணி இசை தரும் அழுத்தம் அச்சூழல் எவ்வளவு கடினமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வீட்டுக்குள், தெருவுக்குள் வெள்ளம் சூழ்ந்திருப்பதாகக் காட்டப்படும் காட்சிகளில் நம்மைப் பிரமிக்க வைக்கிறது மோகன்தாஸ் குழுவினரின் தயாரிப்பு வடிவமைப்பு.

விஎஃப்எக்ஸுக்கான பணிகளுக்கேற்ப திட்டமிட்டுப் பணியாற்றியிருப்பது திரையில் தெரிகிறது.

தான் சொல்ல வேண்டிய கதையுடன் அனைத்துப் பணிகளையும் ஒத்திசைய வைத்த வகையில் நம் மனம் கவர்கிறார் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். அவரே இதன் கதை திரைக்கதை வசனத்தை அகில் தர்மஜனுடன் இணைந்து எழுதியிருக்கிறார்.

க்ளிஷேக்களை மீறி..!

என்னதான் ‘பீல்குட்’ படமாக இருந்தாலும், கதையின் அடிநாதம் இயற்கைப் பேரழிவு சார்ந்தது. அதனால், திரைக்கதையில் சில மரணங்கள் காட்டப்படும் என்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான்.

இக்கதையிலும் அப்படி இரு பாத்திரங்களின் மரணங்கள் காட்டப்படுகின்றன. அவை ‘க்ளிஷே’வாக தெரிந்தாலும், நாம் கண் கலங்கும் வகையில் வடிக்கப்பட்டிருக்கின்றன.

சில பாத்திரங்களுக்கு இடையே முரண்கள் முளைப்பதும், அவை தீர்வதும் மிகச்சில இடங்களில் செயற்கையாகத் தென்படுகின்றன. ஆனால், அடிப்படைக் கதையில் வெள்ளப் பாதிப்பே பிரதானம் என்பதால் அவை துருத்தலாகத் தென்படவில்லை.

சாதி, மத பேதங்கள் தாண்டி வெள்ளப் பாதிப்பின்போது, கேரளாவில் பல பேர் தன்னார்வலர்களாக மாறினர். இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட கடுமையான வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் களமிறங்கினர்.

அதற்கு நன்றி சொல்லும்விதமாக, மிகச்சில மனிதர்களை மையப்படுத்தி ஒரு கதையைப் படைத்திருக்கிறார் ஜூடு ஆண்டனி ஜோசப்.

நள்ளிரவு நேரத்தில் திடீரென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நெருக்கடிக்கு ஆளாகிறது மாநில அரசு.

அப்போது, மீனவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து உதவ வருகின்றனர். மெதுவாக ஒவ்வொரு மீனவரும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

முடிவில், அனைவரும் கையை உயர்த்தி நிற்பது தேவாலயக் கோபுரத்தில் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கும் இயேசுநாதர் சிலை வழியே காட்டப்படும். ‘2018’ முன்வைக்கும் கருத்தும் இதுதான்.

இந்த ஒரு காட்சியே, இந்த படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற முடிவைப் பார்வையாளர்கள் மேற்கொள்ள வழி செய்யும்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ‘இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி’ என்று ஒரு குடும்பம் மலையாளத்தில் விவாதித்துக் கொண்டிருந்தது.

கேரளா என்றில்லை, உலகம் முழுக்க கஷ்டத்தில் இருப்பவர்களை நோக்கிச் சரியான நேரத்தில் நீளும் கரங்கள் தான் காலத்தை வென்ற நம்பிக்கைக் கதைகளை அடுத்த தலைமுறைக்குத் தந்துவிட்டுச் செல்பவை!

-உதய் பாடகலிங்கம்

You might also like