நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கே இந்த நிலை!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.

இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரணைக்குழுவை அமைத்தது.

இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த மாதம் 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதோடு பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாகவும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் 11 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடிபோதையில் காவல்துறை சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாகவும், குறிப்பாக மல்யுத்த வீராங்கனைகளை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

You might also like