கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான்.
‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ். புதுக்கோட்டை சமஸ்தானமே “இனி சின்னப்பா வீடு வாங்கக் கூடாது’’ என்று தடைவிதிக்கிற அளவுக்கு புதுக்கோட்டையில் நிறையச் சொத்துக்கள்.
சினிமாவில் சட்டென்று நிகழும் மாற்றங்களைப் போல சின்னப்பாவின் வாழ்க்கையிலும் எவ்வளவு ஏற்றங்கள்? எத்தனை செங்குத்தான சரிவுகள்?
ஸ்பெஷல் நாடகங்கள் அப்போது பிரபலம்.
புதுக்கோட்டையில் நாடக, நடிகர்கள் அதிகம். அதிலும் ராஜபார்ட்டாக நடிப்பவர்களுக்குத் தனி மவுசு. அம்மாதிரி ராஜபார்ட் வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் சின்னப்பாவின் தந்தையான உலகநாதன்.
அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்த பையன் சின்னச்சாமி. சிறுவயதிலிருந்து படிப்பு ஏறவில்லை. அப்பாவின் நாடகம் மகனின் மனதிலும் ஒட்டிவிட்டது. அப்பாவுடன் சேர்ந்து நடிக்கப் போயிருக்கிறார். கணீர்க்குரலில் சின்னச்சாமி பாடும் பாட்டு பலரைக் கவனிக்க வைத்திருக்கிறது.
தந்தையின் சொல்படி – சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் அவர் சேர்ந்தபோது வயது எட்டு. நாடகக் குருகுல வாழ்க்கை துவங்கியது. அப்போது அவருடன் நடித்தவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள்.
சிறுவயதிலிருந்தே படு சுட்டி. நிறையச் சேட்டைகள்.
நாடகக் கம்பெனிக்குப் பின்னால் தென்னை மரங்களில் ஏறி இளநீரைப் பறித்த போது பிடிபட்டு ‘செமை அடி’ இவருக்கு விழுந்ததை தான் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலில் பதிவு செய்திருக்கிறார் நாடகக் கலைஞரான டி.கே. சண்முகம்.
மாறி மாறிப் பல நாடகக் கம்பெனிகளில் வாய்ப்பு சின்னச்சாமிக்கு. ஒரிஜினல் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அவருடைய அசாத்தியமான குரல் வளத்தின் மீது வெளிச்சம் விழுந்தது. ராஜபார்ட் ஆனார்.
அப்போது அவருடன் நடித்தவர்கள் எம்.ஜி.ஆரும், அவருடைய சகோதரர் சக்கரபாணியும். சின்னச்சாமிக்கு நாடகத்தில் திறமையை உணர்ந்த சுதந்திரம் இருந்தது.
அரைமணி நேரம் அளவுக்கு ராக ஆலாபனையுடன் அவர் பாடும்போது நாடகத்திற்கிடையில் இசைக் கச்சேரியைக் கேட்டதைப் போல பலர் மெய் மறக்குமளவுக்கு இருந்தது அவருடைய வசீகரமான பாட்டு.
குழந்தைப் பருவம் மாறும்போது அவருடைய குரல் உடைந்தது. பாடுவதில் சிரமம். குரல் உடையும் நேரம் நாடகத்தில் இருப்பவர்களுக்கு அவஸ்தையான காலம்.
புறக்கணிப்பின் சுமையை அவ்வளவு அழுத்தமாக உணர முடியும். சின்னச்சாமியும் உணர்ந்து சபாவை விட்டு வெளியேறினார்.
உடல்பயிற்சியில் தீவிரம் காட்டினார். சிலம்பம் கற்றார். அப்போது நடந்து வந்த குஸ்திகளில் பிரபலமானார். அதே சமயம் திரும்பவும் நாடகத்திற்குள் நுழைந்து கிடைத்த புகழ் இலங்கை வரை பரவியிருந்தது.
தமிழ் சினிமா பேச ஆரம்பித்த நேரம். பல நாடகங்கள் படமாகிக் கொண்டிருந்தன. அப்போது சின்னச்சாமி நடித்த ‘சந்திரகாந்தா’ நாடகம் பாப்புலர். ஜூபிடர் பிக்சர்ஸ்காரர்கள் அந்த நாடகத்தைப் படமாக்க விரும்பினார்கள்.
சின்னச்சாமி படவுலகில் நுழைந்ததும் ‘சின்னப்பா’ ஆனார். சந்திரகாந்தா படத்தை இயக்கியவர் அதே புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான ராஜா சாண்டோ. 1939ல் வெளிவந்த ‘சந்திரகாந்தா’ சின்னப்பாவை பாடுவதிலும் தேர்ச்சி பெற்ற நடிகராக அறிமுகம் செய்தது.
பரந்த முகம். வளமான குரல்வளம். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. சண்டைப் பயிற்சி. நாடக அனுபவம் – எல்லாம் இணைந்திருந்தும் முன்னேறுவதற்குச் சிரமப் பட்டார் சின்னப்பா.
சேலத்தில் மிகவும் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர். சுந்தரம் ஆங்கிலப்படம் ஒன்றைத் தழுவி ‘உத்தம புத்திரன்’ படத்தை எடுக்க நினைத்து அதற்கேற்ற மாதிரியான கதாநாயகனைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அகப்பட்டார் சின்னப்பா. ஒப்பந்தமானார். படத்தில் இரண்டு வேஷங்கள். கதாதாயகி எம்.வி.ராஜம்மா. உடன் நடித்தவர்கள் காளி என்.ரத்தினமும், என்.எஸ்.கிருஷ்ணனும்.
நல்ல டீம். நேர்த்தியான கதை. படத்தை இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம். 1940 ல் படம் வெளியாகிப் பெரும் வெற்றி. வசூலில் அபாரமான சாதனை. நட்சத்திரமானார் சின்னப்பா.
பட்சிராஜா பிலிம்ஸ் தயாரிப்பில் சின்னப்பா நடித்த ‘ஆரிய மாலா’வும் ஹிட். 1942 ல் வெளிவந்த ‘பிருதிவிராஜன்’ படத்தில் உடன் நடித்தவர் சகுந்தலா. அவரையே திருமணம் செய்து கொண்டார்.
அதே ஆண்டு ஜூபிடர் தயாரித்த ‘கண்ணகி’யில் சின்னப்பா கதாநாயகன். நாயகி பி.கண்ணாம்பா. வசனம் – அப்போது உயரத்தில் இருந்த இளங்கோவன். படம் மாபெரும் வெற்றி.
இன்னொருபுறம் தியாகராஜ பாகவதர் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, சின்னப்பாவும் அவரும் சூப்பர் ஸ்டார்கள் ஆனார்கள்.
பாரதிதாசனின் வசனத்தில் வெளியான ‘மனோன்மணி’யைத் தொடர்ந்து 25 படங்கள் வரை நடித்தார். புகழ் உச்சியில் சொத்து சேர்ந்தது. முரட்டுக் கோபமும், பிடிவாதமும், வேறு சில பழக்கங்களும் வந்து சேர்ந்தன. அதனால் பல சிக்கல்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அப்போது எடுத்த ‘சதி சுலோசனா’ படப்பிடிப்பின் போது குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு சின்னப்பா போகவில்லை.
பொறுத்துப் பார்த்த இயக்குநரான டி.ஆர். சுந்தரம் தானே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
1949 ல் வெளிவந்த ‘ரத்ன குமார்’ படத்தில் சின்னப்பா கதாநாயகன். உடன் நடித்தவர் பி.பானுமதி.
இதில் சின்ன வேடத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர். சற்று சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘பேசும் படம்’ பத்திரிகையில் வாசகர் ஒருவர் உருவத்திலும் கனமானவரான சின்னப்பாவிடம் கேட்டிருந்த கேள்வி.
“இப்போதெல்லாம் நீங்கள் கீழேயே போய்க் கொண்டிருக்கிறீர்களே?’’
அதற்குச் சின்னப்பாவின் பதில்.
“கனமான பொருள் அல்லவா? இறங்கத் தானே செய்யும்.’’
பதினைந்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலத்தின் எல்லையைத் தொட்டு ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்த சின்னப்பா யாரும் எதிர்பாராத விதத்தில் இறந்து போனார்.
1951 செப்டெம்பர் 23 ஆம் தேதி மாலை புதுக்கோட்டையில் சினிமா பார்த்துவிட்டு வந்து சென்னைக்குக் கிளம்ப இருந்த நேரத்தில் அவருடைய மரணம்.
“தமிழ் நாடெங்கும், ஏன், தமிழர்கள் உள்ள இடங்களில் எல்லாம் எங்கு திரும்பினாலும், சின்னப்பாவின் அகால மரணத்தைப் பற்றிய பேச்சு தான்’’ என்று எழுதி சின்னப்பாவுக்கு ஞாபகார்த்த இதழை வெளியிட்டிருந்தது ‘பேசும் படம்’ இதழ்.
மரணத்தின் போது நீடிக்கும் சந்தேகங்கள் அப்போதே எழுந்திருக்கின்றன.
மர்மமாக நீடித்த அவருடைய மரணத்தைப் பற்றி மூத்த இயக்குநரான முக்தா சீனிவாசன் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ நூலில் இப்படி எழுதியிருக்கிறார்.
“சின்னப்பா மரணமடைந்தார். அவர் யாரோ ஒரு பணியாளரை அடித்ததில் அந்தப் பணியாளர் இறந்துவிட்டதாகவும், அவர் உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டார் என்றும், ‘எப்படியும் தன் மீது போலீஸ் கேஸ் வரும் என்று பயந்து கையில் போட்டிருந்த வைர மோதிரத்தைப் பொடி செய்து சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்’’ என்றும் அந்தக் காலத்தில் பெரிய வதந்தி.
ஆனால் அதை மறுத்து “சின்னப்பாவின் மரணம் இயற்கையானது’’ என்று போலீஸ் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டதாகவும் பேசுவார்கள்.
“பொதுவாக மறுப்பு அறிக்கைகள் வந்தால் ஜனங்களின் சந்தேகம் அதிகமாவது வழக்கம்’’ புதுக்கோட்டையில் ஒரு காலத்தில் ‘ஓஹோ’வென்று வாழ்ந்த சின்னப்பாவின் கல்லறை இப்போது நகர சந்தடிக்கிடையில் பாராமுகமாய்க் கிடக்கிறது.
“சின்னப்பா ஞான நிலையம்’’ என்று சிதைந்த எழுத்துக்களுடன் ஒரு வளைவு. சிறிதான கட்டிடம் .அதற்குள் சின்னப்பாவின் சிதலமடைந்த கல்லறை.
பொருளாதாரத்தில் அவ்வளவு உயர்ந்திருந்த சின்னப்பாவின் குடும்பம் இதே இடத்தில் வாழ நேர்ந்த செய்திகள் பிற்காலத்தில் வெளியானதெல்லாம்- நாடகத்திரைச் சீலை கீழே இறங்கியதைப் போன்ற சரிவுகள்.
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தைப் பலருக்குக் காலம் தீர்மானிக்கிறது. சிலர் அவசர கதியில் தாங்களே தீர்மானிக்கிறார்கள்.
ஸ்பாட் : புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா நினைவிடம் மணா