நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய வானம் கலைத் திருவிழா – வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை – 2023 நிகழ்வில் கலை விமர்சகர் இந்திரனுக்கு வாழ்நாள் சாதனை விருதளித்துப் பாராட்டியது.
இதுபற்றி நிமோஷினி விஜயகுமாரன் எழுதிய பதிவு…
மிகச்சிறப்பான விழா. பிரபலமான திரைப்பட இயக்குநராக இருந்தாலும் இயக்குநர் பா. ரஞ்சித் எளிமை போர்த்தி அமர்ந்திருந்தார்.
பேச்சுகூட கனகச்சிதம். உணர்ச்சி வசப்படாமல் எளிமையாகப் பேசினார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை சிறப்பு. சங்க இலக்கியத்தை தொட்டுத்தொட்டு பேசியதை ரசித்தேன்.
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த இந்திரன் குறித்த நூலொன்றும் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்திரனின் ஆவணப்படம் மிகச் சிறப்பு.
விடுதலையின் இயக்கம் சிறப்பு. துடிப்பான இளைஞர். அரங்கில் கூடியிருந்தவர்களிடம் அத்தனை இயல்பாக கனெக்ட் ஆகிறார்.
நெறியாளராக தமிழ்பிரபா தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பொளந்து கட்டினார்.
கவிஞர் மெளனன் யாத்ரிகாவின் மேடைப்பேச்சில் நல்ல கருத்தியல். கவனம் ஈர்த்தார்.
தலித் என்பது உணர்வு நிலை அல்ல. அஃதோர் அறிவுநிலை என்பதற்கான சாட்சியங்களை அதிகம் பார்த்தேன்.
தனக்கு திரைப்படம் மூலம் கிடைத்திருக்கும் முகத்தை மாற்றத்தை விரும்பும் மனித முகங்களாக மாற்றும் வித்வத்தை பா.ரஞ்சித் அநாயாசமாக செய்து கொண்டிருந்தார் எனச் சொல்லத் தோன்றுகிறது.
திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கம் கொடுங்கோடையிலும் நிரம்பி வழிந்தது. வடசென்னைக்காரி தோழர் ஷாலின் பேச்சு அரங்கை இயல்பாக தன் வசம் கொணர்ந்தது.
பாண்டியிலிருந்து பாட்டுப்பரிதி மு. பாலசுப்பிரமணியம் வந்திருந்தார். நச்சென ஒரு எளிய வாழத்துரை. அரங்கில் நிறைய்ய எலைட் முகங்கள். திரண்டிருந்த கூட்டம் தலித்துகள் மட்டுமான ஒன்றல்ல.
ஆப்பிரிக்க இலக்கியம், தலித் இலக்கியத்தை ஒப்பீடு செய்தல், ஒன்றினுள் ஒன்றைக் கடத்துதல், கட்டுதல், பிற இந்திய மொழிகளில் ஒடுக்கப்பட்டோர் இலக்கிய செயல்பாடுகள் என யாவற்றையும் ஒருங்கிணைத்த மன ஓர்மையின் பெயர் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்… என அவரை கொண்டாடினர்.
இதன் அடிப்படையாக தகுதியின் அளவே அதிகமிருந்தது. அவரது ஓவிய ஈடுபாட்டிற்கு காரணம் ஓவியரான அவரது தந்தை என்பதையும் கேட்டதில் மகிழ்வு.
வேர்ச்சொல் விருதிற்கு அவர் சரியான தேர்வு என்பதின் சாட்சியங்களை அரங்கு முழுக்க கவனித்துக்கொண்டிருந்தேன்.
நாள் முழுக்க அமர்ந்து கேட்டேன். கூட்ட முடிவில் நேற்றும் வராமல்போனோமே என்கிற வருத்தமே ஏற்பட்டது. மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
இரண்டு வரிசைகள். ஒருவரிசை பீப் பிரியாணி. இன்னொரு வரிசை சிக்கன் பிரியாணி. சிக்கன் பிரியாணி வரிசையை விட பீப் பிரியாணி வரிசை நான்கு மடங்கு அதிகம்.
மொத்தம் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு அமர்வுகளில் உரையாற்றிய ஆளுமைகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் முதல் அமர்வில் ‘தலித் தன்வரலாறு – பதிவு செய்யப்பட்டவையும் செய்யப்பட வேண்டியவையும்’ எனும் தலைப்பில் பேசிய எழுத்தாளர்கள் ஜெயபால் மற்றும் திருக்குமரன் கணேசன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதேபோல் நிலமும் பொழுதும் எனும் தலைப்பில் பேசிய கவிஞர்கள் கு.உமாதேவி, மெளனன் யாத்ரிகா, வினையன் ஆகியோருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.