கவிஞர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை!

கல்யாணப்பரிசு படத்துக்கு பாட்டெழுத வந்திருக்கிறார் மக்கள் கவிஞர் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

அவரிடம் கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர்.

கதை ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே, “என்ன? காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி, கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி. அவ்வளவுதானே?” என்றிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

“என்னங்க இது? நான் இவ்வளவு பெரிசா கதையை நீட்டி சொல்லிக்கிட்டு இருக்கிறேன். நீங்க இரண்டே வரியிலே அதை சுருக்கிச் சொல்லிட்டீங்க” என்றாராம் ஸ்ரீதர்.

கவிஞர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு கவிதை,

“கதிர்வெடித்துப் பிழம்புவிழ, கடல் குதித்துச் சூடாற்ற,
முதுமைமிகு நிலப்பரப்பில் முதற்பிறப்பு தோன்றிவிட…”

– இந்தக் கவிதையின் இரண்டே வரிகளில், Big Bang என்ற பெருவெடிப்பு, நெபுலா, புவிக்கோளின் உருவாக்கம் எல்லாம் வந்துவிடும்.

‘நதி வருமுன் மணல்தரும் நலம் வளர்ந்த தமிழணங்கே, பதிமதுரைப் பெருவெளியில் பாண்டியர் கை பார்த்தவளே’ என்ற வரிகளில் தமிழ்மொழியின் தொன்மை, சிறப்பு எல்லாமே வந்துவிடும்.

ஆக, அவ்வளவு பெரிய பெருவெடிப்புக் கொள்கையையே, நாலு வரிகளில் நறுக் எனச் சொல்லக் கூடியவர்கள் தமிழ்க் கவிஞர்கள். ஒரு காதல் கதையை இரண்டே வரிகளில் சொல்வது அவர்களுக்கு என்ன அவ்வளவு கடினமா?

பட்டுக்கோட்டையாரைப் பொறுத்தவரை அவருடைய பாடல்களில் சொல்லழகு சொக்க வைக்கும். அதில், எல்லையில்லா ஒரு துள்ளல் இருக்கும்.

எதுகையின் அழகை பட்டுக்கோட்டையாரைப் போல கையாண்டவர்கள் எவரும் இல்லை.

‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலில், ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்’ என்ற வரிகள் வரும்.

இந்த வரிகளில் நல்ல, அல்லும், கல்லாய் என்ற சொற்களில் வரும் ‘ல்’ என்ற இரண்டாவது எழுத்து செய்யும் மாயம் மிகப்பெரியது.

அதுபோல அமுதவல்லி படத்தில் இடம்பெற்ற பாடல், ‘ஆடை கட்டி வந்த நிலவோ?’

அந்த பாடலில்,
“ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ, குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ?”

– என்ற வரிகளில் ‘டை’ என்ற எதுகை எழுத்தின் எக்காளத்தைப் பார்க்கலாம்.

“அந்தி வெயில் பெற்ற மகளோ, குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ, குன்றில் உந்தி விழும் நீரலையில் ஓடிவிளையாடி மனம்
சிந்திவரும் தென்றல்தானோ இன்பம்
தந்து மகிழ்கின்ற மானோ?” என்ற வரிகளில், ந் என்ற எழுத்து வடிவில் எதுகையின் விறுவிறு விளையாட்டைப் பார்க்கலாம்.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like