ரூ.1.87 லட்சம் கோடி: புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வசூல்!

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது. அதைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூல் ரூ.19,495 கோடி அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.11,559 கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல், புதுச்சேரியில் கடந்த மாதம் ரூ.218 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்.

இதனிடையே இந்த ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குறைந்த வரி விகிதங்கள் இருந்தாலும், வரி வசூல் அதிகரித்து வருவது, ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பின் வெற்றியை காட்டுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like