தேவிகாவின் பெயர் மாற்றமும் முதல் பட அனுபவமும்!

சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை.

அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று எழுதி இருந்தார்கள். முதலாளி படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரமீளா.

‘தேவிகா யாருங்க?’ன்னு காரை விட்டு இறங்கும் போது பதற்றத்துடன் கேட்டார். தனக்கான ஹீரோயின் சான்ஸ் பறிபோய் விட்டதோ என்கிற பீதி பிரமீளாவின் குரலில்.

‘பிரமீளா’ என்கிற தெலுங்கு பெயர் வேண்டாம் என்று எண்ணி, தேவிகா என்பதாக மாற்றியிருக்கிற விஷயத்தை எடுத்துக் கூறினார்கள்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் பிரமீளாவின் முகத்தில் அதிர்ச்சியின் அங்கப் பிரதட்சனம்.

நீண்ட காலம் ஷூட்டிங்கில் தேவிகா என்று கூப்பிட்டால் பதில் சொல்லாமல் மவுனமாகவே இருப்பார். காரணம் கேட்டால், ‘எங்கம்மா எவ்ளோ ஆசையா பிரமீளான்னு பேரு வெச்சாங்க… அதுல எனக்கு இஷ்டம் ஜாஸ்தி. அதைப் போய் மாத்தி வெச்சிட்டிங்களே… என் பெயரை தேவிகான்னு நீங்க மாத்தினது பிடிக்கலே’ என்பார் வருத்தம் கலந்த ஆத்திரத்துடன் – ‘வெகுளிப் பெண்’ தேவிகா.

‘எனக்குத் தமிழ்ல பெரிய லிஃப்ட்னு பார்த்தா அது முதலாளி தான். டைரக்டர் முக்தா சீனிவாசனுக்கு முதல் படம்.

என்.டி.ஆர்.- சிவாஜி- பத்மினி நடிக்க, பிரம்மாண்டமா ‘சம்பூர்ண இராமாயணம்’ எடுத்த எம்.ஏ. வேணுவின் தயாரிப்பு.

‘முதலாளி’ல கூட முதல்ல பத்மினியை புக் பண்றதா இருந்திருக்காங்க. அவங்க ‘பர்தேஷ்’ங்கிற இந்திப் படத்துல நடிக்கப் போயிட்டதால எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

நானும் எஸ்.எஸ். ராஜேந்திரனும் ஜோடியா நடிச்சோம். ஆறாயிரம் அடி வரை வளர்ந்தப்ப, பட அதிபர் எம்.ஏ.வேணு, ‘அவர் நினைச்ச மாதிரி வரலன்னு’ சொல்லி படத்தை நிறுத்திட்டார். முக்தா சார் ரொம்ப வேதனைப்பட்டார். முதல் படமாயிற்றே…

அதுக்கப்புறமா எஸ்.எஸ்.ஆர். தலையிட்டு, தயாரிப்பாளருக்கு தைரியமூட்டினார். மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியது.

1957 தீபாவளி அன்று நடிகர் திலகத்தின் அம்பிகாபதி, புரட்சி நடிகரின் மகாதேவி ஆகிய மெகா படங்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் படமான முதலாளியும் ரிலிசானது.

முதன் முதலா நான் ஹீரோயினா நடிச்ச படம் ஓடுமாங்கிற பயம் உள்ளுக்குள்ள வந்துடுச்சி. என்னால் எந்தத் தோல்வியையும் தாங்க முடியாது.

முதலாளி கண்டிப்பா வெற்றி பெறாது என்கிற அவநம்பிக்கையில் அது வெளியான அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

சினிமாவில் ஹீரோவின் பின்னால் சைக்கிளில் அமர்ந்து ஹீரோயின் டபுள்ஸ் போறது முதலாளியில் இருந்து ஆரம்பமாச்சு.

முதலாளி தோல்வி அடைந்திருந்தால் அத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டிருப்பேன். ஆனால் முதலாளி வசூலில் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஒரு படத்தின் வெற்றியில் அதில் பங்கு பெறும் கலைஞர்களின் வளர்ச்சியும் இருக்கிறது. அதை அனுபவபூர்வமாக நானும் உணர்ந்தேன். ‘முதலாளி’க்குக் கிடைத்த பேரும் புகழும் என்னையும் பிரபலப்படுத்தியது. 

கே.வி. மகாதேவன் – கா.மு. ஷெரிஃப் கூட்டணியின் காலத்தால் அழியாத – ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, குங்குமப் பொட்டுக்காரா, நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு போன்ற இனிய பாடல்களின் பங்களிப்பும் ‘முதலாளி’ முன்னுக்கு வர உதவியது.

#தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடித்துவிட்ட நடிகை தேவிகா அவர்களின் பிறந்தநாள் இன்று.

– நன்றி முகநூல் பதிவு

You might also like