சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உள்நாட்டு போராக வெடித்துள்ளது. இதில் ஒரு இந்தியர் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. சூடான் நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்கும் பணி ‘ஆபரேஷன் காவிரி’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
இந்திய கடற்படையின் சுமேதா போர்க்கப்பல், விமானப்படையின் சி-130 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் மற்றும் சி-17 ரக போக்குவரத்து விமானமும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘ஆபரேஷன் காவிரி’ மூலம் நேற்று மேலும் 186 பேர் கொச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதுவரை 2,140 பேர் சூடானில் இருந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.