அஜித் எனும் அபூர்வ மனிதர்!

பட்டமும் பதவியும் விரும்பாத மனிதர்

’அல்டிமேட் ஸ்டார்’ அஜித்துக்கு இன்று (மே 1 ஆம் தேதி) பிறந்தநாள். 52 – வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.

பின்புலம் ஏதுமின்றி, உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதன் உழைப்பாளர் தினத்தில் அவதரித்தது அற்புதமான பொருத்தம்.

அஜித்தின் முதல் படம் ‘அமராவதி’ என நம்மில் பலர் நினைப்பதில் உண்மை இல்லை. 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான ‘என் வீடு, என் கணவர்’ படம்தான் அஜித் நடித்த முதல் படம்.

செண்பகராமன் இயக்கி இருந்தார். சுரேஷ், நதியா நடித்த இந்தப் படத்தில் ‘என் கண்மணி’ எனும் பாடல் காட்சியில் பள்ளி மாணவனாக அஜித் நடித்திருந்தார்.

அதன்பின்னர் விளம்பரப் படங்களில் தோன்றினார்.

கதாநாயகனாக அறிமுகமானது  பிரேம பொஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தில். ஆண்டு 1993.

அதே ஆண்டில் அவரை தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் செல்வா.

அஜித்தை செல்வா கண்டுபிடித்தது எப்படி?

“பிரேம பொஸ்தகம் படத்தின் ஆல்பத்தைத்தான் முதலில் பார்த்தேன். அதில் அஜித்தின் ‘குட் லுக்கிங்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அமராவதி என்கிற காதல் கதைக்கு பார்த்தவுடன் பிடிக்கிற கதாநாயகனாக அவர் இருந்தார்.

ஆல்பத்தில் அவரது பல விதமான ஸ்டில்கள் இருந்தன. ஸ்டில்களை பார்த்ததுமே அவரது நடிப்புத் திறமையை உணர முடிந்தது. நம்பிக்கை பிறந்தது.

உடனடியாக தயாரிப்பு அலுவகத்துக்கு வரவழைத்து ஆடிஷன் டெஸ்ட் எடுத்தோம்.

நன்றாக இருந்தது. அந்த இடத்திலேயே அவரை அமராவதிக்கு ஒப்பந்தம் செய்தோம்” என்கிறார் செல்வா.

(அமராவதி படத்தில் அஜித்துக்கு ‘டப்பிங்’ பேசியவர் நடிகர் விக்ரம்)

அஜித்தின் முதல் படமான அமராவதி பெரிய அளவில் போகவில்லை. அமர்க்களம், காதல் கோட்டை, ஆசை ஆகிய படங்கள் அஜித்தை ஆரம்ப காலத்தில் உயரத்துக்கு கொண்டு சென்ற படங்கள்.

இந்தப் படங்களுக்கு மத்தியில் நிறைய தோல்வி படங்களையும் கொடுத்தார். தோல்விகள் அவரை பாதிக்கவில்லை.

அஜித்தை வைத்து அதிக படங்கள் கொடுத்த இயக்குநர்கள் இரண்டு பேர். சரண் மற்றும் சிறுத்தை சிவா.

சரண் இயக்கத்தில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களிலும் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அல்டிமேட் ஸ்டார் நடித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ்திருமேனி இயக்குகிறார்.

இதனை அஜித்தின் 62 வது படம் என்கிறார்கள். மாணவனாக அவர் நடித்த என் வீடு என் கணவர் படத்தை ‘லிஸ்டில்’ சேர்த்துக்கொண்டால், மகிழ்திருமேனி இயக்குவது அஜித்தின் 63- வது படம்.

சினிமாவில் உயரம் தொடும் நடிகர்களுக்கு, அடுத்த இலக்காக இருப்பது முதல்வர் நாற்காலி.

ரஜினிக்கு நிகராக புகழையும், ரசிகர் படையையும் வைத்துள்ள அஜித்துக்கு, நாற்காலி கனவுகள் இல்லை.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். தனக்காக உருவான மன்றங்களை கலைத்துப் போட்ட ஒரே நடிகர் அஜித்தான்.

பட்டங்களையும் துறந்தார். “என்னை ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றோ ‘தல’ என்றோ அழைக்க வேண்டாம்… பெயரைச் சொல்லி அழைத்தால் போதும்’’ என பகிரங்கமாக அறிவித்தார்.

12 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை.

தனது படம் சம்மந்தமான நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஞானியின் நிலைக்கு சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நாளைய அஜித் எப்படி இருப்பார்?

இன்னும் 10 ஆண்டுகள் நடிகராக தொடருவார். அதன் பின் படங்கள் இயக்க திட்டம் உண்டு என்கிறார்கள் அஜித்தின் நெருக்கமான நட்பு வட்டாரங்கள்.

-பி.எம்.எம்.

You might also like