பீகார், காஷ்மீர், கோவா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் 2018 முதல் 2019 வரை காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில், அங்கு அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்காக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக சில கோப்புகளை அழிக்க ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் விடுத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று 2-வது முறையாக நேரில் விசாரித்தனர்.
டெல்லியில் ஆர்கே புரம் பகுதியில் உள்ள மாலிக் வீட்டிற்கு காலை 11.45 மணிக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் 5 மணி நேரம் விசாரித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் சத்யபால் மாலிக் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது சந்தேக நபராகவோ கருதப்படவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.