பொன்னியின் செல்வன் 2 – பிரமிப்பூட்டாத மகுடம்!

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவொன்று காட்சி வடிவம் பெறும்போது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ‘பொன்னியின் செல்வன் பாகம்1’ திரைப்படம். அதற்கு தமிழ் ரசிகர்கள் தந்த வரவேற்பு ஈடு சொல்ல முடியாதது.

அந்த நாவலைப் பல முறை படித்தவர்களோ, நாவலில் பூடகமாகச் சொன்ன சிற்சில விஷயங்களை தெளிவுபடுத்துவதில் மணிரத்னம் குழு ஆர்வம் காட்டுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அதற்கேற்ப, பொ.செ. இரண்டாம் பாகத்தில் தெளிவுறக் கதை சொல்லப்பட்டிருக்கிறதா?

சோழர்களின் பேரெழுச்சி!

நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளம் வயதில் எவ்வாறு காதலில் விழுந்தனர் என்பதைச் சொல்வதில் இருந்து தொடங்குகிறது ‘பொன்னியின் செல்வன் 2’ திரைக்கதை. அதன்பிறகு, முதல் பாகம் முடிவடைந்த இடத்தில் இருந்து காட்சிகள் நீள்கின்றன.

புயல் காற்றில் கப்பல் மூழ்க, அதில் இருந்த அருள்மொழி வர்மன் கடலுக்குள் விழுந்து இறந்ததாகக் கருதுகின்றனர் பாண்டிய ஆபத்துதவிகள். ஆனால், இலங்கைக் கடற்கரையில் திரியும் ஊமைராணி, புயலில் சிக்கிய அருள்மொழியைக் காப்பாற்றுகிறார்.

பின்னர், அவரை நாகப்பட்டினக் கடலோரம் அழைத்து வருகிறார் வந்தியத்தேவன். புத்த மடாலயமொன்றில் அருள்மொழிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், சோழ மண்ணில் குழப்பம் தலைவிரித்தாடுகிறது. அருள்மொழி இறந்ததாகக் கருதி கொதிக்கிறார் ஆதித்த கரிகாலன்.

அவரது குணமறிந்து, கடம்பூர் அரண்மனைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு பார்த்திபேந்திரனிடம் சொல்லியனுப்புகிறார் நந்தினி.

பாண்டிய ஆபத்துதவிகளிடம் சிக்கிய வந்தியத் தேவனோ அருள்மொழி, ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர் மூவரையும் ஒரேநேரத்தில் கொல்ல வேண்டுமென்று நந்தினி திட்டம் வகுப்பதை அறிகிறார்.

இன்னொரு புறம் சிவனடியார்கள் உதவியோடு அரசணை ஏற நினைக்கும் மதுராந்தகருக்குத் தன் பெண்ணை மணம் முடித்து தர சம்மதம் என்கிறார் ராஷ்டிரகூட அரசர்.

ஒவ்வொருவரும் தஞ்சை சோழப் பேரரசர் நாற்காலியைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்க, உண்மையைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தன் தந்தை சுந்தர சோழரைக் காண வருகிறார் அருள்மொழி வர்மன்.

அந்த நேரத்தில், ஒரே இடத்தில் சுந்தர சோழரையும் அருள்மொழியையும் கொல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேபோல, நந்தினியைத் தேடிச் செல்லும் ஆதித்த கரிகாலனையும் ஆபத்து சூழ்கிறது.

போர் வேண்டாம் என்று உறுதிமொழி தந்த ராஷ்டிரகூட அரசர், பார்த்திபேந்திரனுடன் இணைந்து தஞ்சை மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறார்.

நாலாபுறமிருந்தும் எதிர்ப்புகள் வரும்நிலையில், அருள்மொழி வர்மன் தன்னிலை காக்க நடத்திய போராட்டங்கள் எத்தகையவை, யாருக்கு வெற்றிகள் கிடைத்தன என்று சொல்கிறது ‘பொ.செ. 2’.

சோழர்களின் பேரெழுச்சி பத்தாம் நூற்றாண்டு வாக்கில் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். அதனை மையப்படுத்திய புனைவு என்பதால், இதில் நாயக துதிக்குச் சிறிதும் குறையேதுமில்லை.

ஆனால், பாத்திரங்கள் அதிகமிருப்பதால் மிகச்சிலவற்றுக்கு மட்டுமே திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

பிரமாண்டம் இல்லை!

முதல் பாகத்தைப் போலவே காதல் விரக்தியிலும் கோபாவேசத்திலும் அரற்றும் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் தோன்றி நம்மை அசத்துகிறார் விக்ரம்.

பெரிதாக வசனம் பேசாமல் தன் கம்பீர தோற்றம் மூலமாக கண்ணியமிக்க அரச வாரிசாகத் தோன்றியிருக்கிறார் ஜெயம் ரவி. முந்தைய பாகத்தை ஒப்பிடுகையில், இதில் கார்த்தி கைத்தட்டல்கள் வாங்குமிடம் குறைவு.

பிரபு, பார்த்திபன், சரத்குமார், அஸ்வின் போன்றோருக்கு முதல் பாகத்தில் கிடைத்த அளவுக்குக் கூட, இதில் முகம் காட்ட வாய்ப்பில்லை.

அதேநேரத்தில் கிஷோர், ரியாஸ் கான் கூட்டத்தினருக்குக் கூடுதல் காட்சிகள் கிடைத்திருக்கின்றன. முன்பாதியில் ஜெயராம், நாசர் போன்றவர்கள் ’உள்ளேன் ஐயா’ என்ற ரீதியில் திரையில் தோன்றியிருக்கின்றனர்.

பெண் பாத்திரங்களில் த்ரிஷாவுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் பிரதான இடம். ‘தொட்டுக்கோ துடைச்சுக்கோ’ என்பது போல சோபிதா துலிபாலா ஆங்காங்கே வந்து போகிறார்.

இளம் நாயகிகளுக்கே இந்த கதி எனும்போது, ஜெயசித்ரா போன்ற முதிர்ந்த நடிகைகளைப் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை.

டைட்டிலின்போது சாராவை அழகுறக் காட்டி, அடுத்த நாயகி தயார் என்று சொல்ல வைத்திருக்கிறது ரவிவர்மனின் ஒளிப்பதிவு. ஐஸ்வர்யா ராய் விக்ரம் சந்திக்கும் காட்சியில் வியக்க வைக்கிறது.

தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு, ரவிவர்மனின் கேமிரா பார்வை அழகாக அமைய உதவியிருக்கிறது. அவ்வளவே!

கோர்வையாக கதை சொல்ல நிறைய நேரம் வேண்டுமே என்கிற நோக்கில், மிகச்சில நிமிடங்களில் ‘அகநக’ பாடலுக்கு ‘ஸ்டாப்’ சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். பல காட்சிகள், ஷாட்கள் கூர்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன.

போர்க்களக் காட்சிகள் செயற்கைக்கோள் பார்வையில் காட்டப்படுவதற்கு, விஎஃப்எக்ஸ் சரணம் என்ற துதி காரணமாக இருந்திருக்கும்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் என்றபோதும், அவற்றில் மூன்று ஒன்றரை நிமிட கால அளவில் ஒலிப்பவை.

ஆனால், இதர பாடல்களும் கூட திரையில் அந்த அளவிலேயே ஒலிக்கின்றன. ரஹ்மானின் இசையில் ‘அகநக’, ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.

பின்னணி இசையில் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு சித்திரம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார் ரஹ்மான்.

’அரசர் பொய் சொல்வதைத்தான் இப்போது அரசியல் என்கிறார்கள்’ என்பது போன்ற வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை.

ஒவ்வொரு பாத்திரத்திற்குமான அறிமுகம் எப்படி இருக்க வேண்டுமென்று வடிவமைத்ததில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது இயக்குனர் குழுவின் உழைப்பு.

விக்ரம் பிரபுவிடம் பேசிக்கொண்டிருக்கும் லால் விலகிச் செல்ல, அவருக்கு முதுகுக்குப் பின்னால் விக்ரம் ஆவேசமாக வருமிடம் அதற்கொரு உதாரணம்.

தளபதியில் வரும் ‘யமுனை ஆற்றிலே’ பாடலில் மலைப்பிரதேசத்து புல்வெளியில் குதிரைகள் ஓடுவதைக் காட்டி பிரமாண்டமான பிம்பத்தை நம் மண்டைக்குள் புகுத்தியவர் மணிரத்னம்.

இந்த படத்திலோ அது போன்றதொரு பிரமாண்டம் நம் மனதில் உருவாகவே இல்லை. முக்கால்வாசி இடங்களில் பின்னணி இசையே, இது பெரும் பொருட்செலவில் உருவான படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

ஜெயமோகன், குமரவேல் உடன் இணைந்து மணிரத்னம் அமைத்திருக்கும் திரைக்கதை பல விஷயங்களை ஒரே பாய்ச்சலில் தாவியிருக்கிறது.

அருள்மொழி வர்மன் உயிர் பிழைத்ததைக் காட்டிவிட்டு பிறகு கடலில் என்ன நடந்தது என்பதைச் சொல்லும் இடம் ஒரு உதாரணம். நந்தினி – ஆதித்த வர்மனின் இளமைக்காலக் காட்சியில் இருந்து படத்தைத் தொடங்கியது நல்ல உத்தி.

தெளிவான விளக்கம்!

‘பொன்னியின் செல்வன்’ நாவல் படித்தவர்களுக்கோ, அரைகுறையாக நினைவலைகளில் அதனைத் தேக்கி வைத்திருப்பவர்களுக்கோ இந்த கதை இப்படித்தான் செல்லும் என்கிற ‘ஐடியா’ இருக்கும். அதற்கு மாறாக, மிகத்தெளிவுறச் சில காட்சிகள், வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாவல் படிக்கும்போது சில தகவல்கள் சொல்லாமல் விடுபட்டதாகத் தோன்றும். ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்? நந்தினி என்னவானார்? சோழப் பேரரசில் மகுடம் சூடியது யார்? ஊமை அரசிக்கும் சுந்தர சோழருக்குமான, நந்தினிக்கும் வீரபாண்டியனுக்குமான உறவு எத்தகையது? என்பது போன்ற கேள்விகளுக்கு இதில் பதில்கள் தரப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன் இடையே பனிப்போர் இருந்ததற்கான சுவடுகள் திரைக்கதையில் சொல்லப்படவில்லை;

அப்படியிருக்க, ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் கொன்றதாகத் திடீரென்று பார்த்திபேந்திரன் குற்றம்சாட்டுவது வலிந்து திணித்தாற் போன்று உள்ளது.

கல்கியின் எழுத்தைத் திரையில் பார்க்கும் ஆவலே, முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமானது.

இரண்டாம் பாகத்தில், அதனைத் தவிர்த்து பிரமிக்கும் அம்சங்களே இல்லை.

ராஜாராணி கதையைப் பார்க்க விரும்பும் இளைய தலைமுறை நிச்சயமாக இப்படத்தை ரசிக்கும். ஆனால், பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படம் ஒரு ’பிரமிப்பூட்டாத மகுடம்’!

– உதய் பாடகலிங்கம்

You might also like