ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக வார்னரும், பிலிப் சால்ட்டும் களத்தில் இறங்கினர். சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்வர் வேகத்தில் வெளியேறினார்.
இதையடுத்து இணைந்த வார்னர் – மிட்செல் மார்ஷ் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
தொடக்க வீரர் ஹேரி ப்ரூக் 7 ரன்னில் வெளியேற, மற்றொரு வீரர் மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடிய 49 ரன்கள் எடுத்தார்.
ராகுல் திரிபாதி 15 ரன்கள், அபிசேக் சர்மா 5 ரன்கள் கேப்டன் எய்டன் மார்க்ரம் 3 ரன்களை எடுத்தனர்.
ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, டெல்லி அணியின் முகேஷ் குமார் அற்புதமாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.