சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் திடலில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங், தீக்ஷனா, பதீரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரகானே 9 ரன்களிலும், ராயுடு 9 ரன்களிலும் வெளியேறினர். மறுபுறம் கான்வே அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில், சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கான்வே 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் சென்னை அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.