- வெளியுறவுத்துறை உறுதி
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதனால் சூடானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு முடிந்த உதவியை செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் சூடான் நிலவரத்தை, கர்தோம் நகரில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், டெல்லியில் புதிய கட்டுப்பாட்டு அறையை வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
அதன்மூலம் சூடானில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், சூடானில் உள்ள இந்தியர்கள், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.