கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார்.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்ததுடன் ஜாமீனையும் வழங்கினார்.
ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதிலளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்துவிட்டார்.
இதனால், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் நீடிக்கிறது. அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த பிரதான மனு மீது விசாரணை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.